Wednesday, September 14, 2016

இதயம் கொஞ்சம் கழற்றி ...


மண்பிடித்த முதல்மனிதன்
யாரென்று சொல் தோழா..
நிலத்திற்கு எல்லையிட்டு
மொழியாலும் இனத்தாலும்
மனிதம் பெயர்த்த
முதல்கயவன் யாரென்று பார்
வாள்போர்...
புரவிப்போர்...
யானைப்போர்...
என
மனிதனே மனிதன் மேய்ந்த
துரோக மூலம் எதுவென்று கேள்
போர்களின் அந்த மூலவேரை
ஆணிவேராக்கிய அயோக்கியன்
எங்கேவென்று தேடு...
பொறியை அணைக்க மறுத்த
அந்த மந்தைகள்
எங்கே புதையுண்டன எனப்பார்த்து வா..
வலிமையென்பது வாள்வீச்சிலென
மீசை முறுக்கிய அந்த
முதல் கோழையாவது யாரெனக் கூறு
கிளைமொழிகள் கொலைமொழியாகியது
எப்போது எனச் சொல்....
ஆறுகளில் அணைகட்டி
கொலைவெறிக் கூத்தாடும் கூட்டம்
எந்த மழையிடம் கடன்வாங்கியது
நீரை...பார்..
இயற்கை மேய்ந்து செயற்கை செய்யும்
அந்த நுட்பம் சொன்னவன் யார்
கேள் தோழா கேள்
எந்த நெருப்பில் யார் வெந்தால் என்ன
இதயம் கருகும் மானிடங்களுக்கு..!!!
மனிதம் மிதிபட பாயும்
குருதிவெள்ளத்தில் கைநனைக்க
இதோ.... நானும்
இதயம் கழட்டிவிட்டு வருகிறேன்
..

No comments:

Post a Comment