Wednesday, April 6, 2016

வெறுமையும் மௌனமும்


எந்தப் பார்வைக்கும் பதிலின்றி
வெறுமையிலேயே வேக வைக்கிறாய்
வீசும் வார்த்தையைவிட
விழி சுரக்கும் மௌனங்கள் கொடிது..
இரவின் நீளம் 
நீ இல்லாத போது தெளிவாகிறது
உறங்கும் போது மட்டுமல்ல..
உறக்கம் கெடுக்கவும் நீ கனவாகவே
வருகிறாய்

வலமும் இடமும் புரண்டு
ஆடும் மாடும் எண்ணி...
இறுக இறுக விழி மூடி
நெருங்கும் நினைவுகளை நிர்ப்பந்தமாய்
வெளியேற்றி..
பிடிக்காப் பக்கங்களை
மீண்டும் மீண்டும் திருப்பி ...
உள்ளும் புறமும்
இரவை எட்டி எட்டிப் பார்த்து
ம்ம்ம்ம்....
எப்படி இழுத்தும் ..
..... உன்னைப் போலவே உறக்கமும்
கைகளுக்கு எட்டாமலேயே....

இரவின் மீது வெகுதூரம் நடந்தும்
என்னைக் கொல்வதாக
உன்
மௌனம் மட்டுமே இருக்கிறது..

ஒரு வெறுமையை எனக்குள் நிரப்பிவிட்டு!

**முனியாண்டி ராஜ்.**

Tuesday, April 5, 2016

கருணை


உன்னை 
எந்த 'இஸத்தில்' சேர்ப்பது 
இல்லாதவன்தான் இல்லாமையின்
நுணுக்கம் அறிந்தவன் என்பதிலா...
உயிர்களைத் தாண்டியதே
உண்மையின் கோடுகள் என்பதிலா..
எந்த வட்டத்திற்குள்
உன்னை வைப்பதென்றே அறியாமல்
அவதியுறுகிறேன் நான்.....

சுற்றும் முற்றும் தேடுகிறேன்
ஒளி பீச்சும் காமிராக்களிலோ
தம்படம் எடுக்கும் நவீனங்களிலோ
அரசியல் வண்ணம் கலக்கும்
அருவருப்பு விளம்பரங்களிலோ
முகநூல் சுய பதிவுக்கோ.
எதிலும்
நீ சிக்கியிருப்பதாய்த் தெரியவில்லை..

மானுடங்களை அனாவசியமாக
உதறிச் சென்று விட்டுச் செல்லும்
உன்னைப் பார்த்து
ஆறும் ஐந்தும் சேர்ந்தது
பதினொன்றென்று கணிதம் கூறட்டும்
ஏழாவது அறிவென்று
எந்த அறிவும் கூறிவிடும்..

நெல்லுக்கு இறைத்த நீர்
வாய்க்கால் வழியோடி...
உன் ஒருவனுக்காக
ஊரெல்லாம் பெய்யட்டும்
என்றாவது ஒருநாள் ...

அன்பு மழை!!

**முனியாண்டி ராஜ்.***

வறுமையின் தேடல்கள்


எதைத் தேடுகிறாய்..
வறுமையின் மீந்திருக்கும்
எச்சங்களையா...
மனிதம் விட்டெறிந்த
மிச்சங்களையா....
சகோதரம் என்பது கைகொடுக்க
மட்டுமல்ல..
முதுகும் கொடுக்குமென்பதை
உணர்த்திட வந்தாயா..

குப்பைகளில் நன்றாகத் தேடிப்பார்
குள்ள மனம் படைத்தவன்
பதுங்குமிடமாகவும் இருக்கலாம்..
மனம் கொடுத்து
அவனை மேலேற்றி விடு..
உணவு மட்டுமல்ல வாழ்க்கையென
அவனாவது உணரட்டும்..

குப்பைகளை அள்ளிப்போக
குரலற்றவன் எவனாவது வரலாம்
அதற்குள் தேடி எடுத்துக் கொள்
கொடுப்பதைவிட
வீசுவதில்தான் பலர் சுகமடைவர்
என்பதை உணர்க..
அல்லது உணர்த்துக..

வறுமையின் நிறங்களைக் கூற
உன்னை யாரும் அழைப்பதில்லை..
தூரத்திலிருந்து உன் வறுமைக்கு
நாங்களே
வண்ணம் பூசுகிறோம்..
அதன் பொருள் அறியாமலேயே!!!
நீ உதிர்த்திடினும்
அழுக்குப் படியா கைகளினால்
அலட்சியப்படுத்தியே நடந்திடுவோம்..

உன்னைக் கடக்கும்
மானிடப் பார்வைகளைப் பொருட்படுத்தாதே
அருவருப்புகளை மட்டுமே
அவர்களுக்கு வீசத் தெரியும்...
உன் தேடலைத் தொடர்க..

இறுதி மனிதன் கிடைக்கும்வரை!!

**முனியாண்டி ராஜ்.***

Sunday, April 3, 2016

இத்யாதி...இத்யாதி

இடைவெளிகளுக்குள்
இன்னும் இறுகி இறுகி ...
இளமைக்குத் திரும்புகிறது ...
இத்யாதி ... இத்யாதி .. இத்யாதி..
இனி ஒரு காதல்!

உயரம்

நீ வீசிச் சென்ற வார்த்தைகளை
இறக்கத் தெரியால் 
சுமந்து கொண்ட வருகிறேன்..
இரவின் கரையோரம்!

ஓட்டு

ஓட்டுகளின் வேட்டைகளில்
நாற்காலிகள் மட்டும்
நிர்வாணம் களைகின்றன!

நீயும் நானும்

காட்டுத் தீயாய்
வனமெங்கும் விரிகிறாய்...
விபத்தின் காரணியை
இமைகளுக்குள் ஒளித்துவிட்டு
நீயும் இறங்குகிறாய்
தீயணைக்க!

நீ


கிளைகள் அனைத்தும்
வெட்டி வீசப்பட்ட பின்னும்
வேர்கள் ஒவ்வொன்றிலும் விஷமிட்டும்
உயிர் உருவெடுத்துக் கொண்டே வருகிறது..
அவ்வப்போது துளிர்க்கும் 
கணுக்கல்களில் நீ!

துரோகம்


சட்டென முகம் இழுத்து
முதலையின் வாயிலிருந்து விடுபட்டேன்
காட்டு விலங்குகள் கொடூரமாய் பாய
ஆபத்தின் சிக்கல்களை அறிவு
மீட்டெடுத்தது.....
குழிக்குள் விழப்போன காலை
விழிகள் அன்பாய் காப்பாற்றின....
வாழ்த்து சொன்ன நண்பன்
தோளில் கை போட்டான்...
மெல்ல மெல்ல கழுத்து இறுக்கப்பட்டும்
மனம் மட்டும் ஏனோ...
உயிர் போகும் தருணம் எச்சரித்தது
காலம் கடந்து!!!

**முனியாண்டி ராஜ்.**

ஏக்கம்

பைய பைய மடியும்
ஓர் இதயத்தின் கண்ணீர் என
எண்ணாதே....
உனக்காக சேர்த்த கனவுகளின் 
இறுதி யாத்திரையாகவும் இது இருக்கலாம்..
எனக்காக நீ எழுப்பிய
சொற்மாடங்களின் சிதைவுகளாகவும்
அமையலாம் ...
நீயே ...
வழக்கம் போலவே தெரிவு
உன் வசமே இருப்பதால் !!!

முதுமை


ஒடுங்கிய வயிறும் ஒடிந்த உருவமுமாய்
வீதியோரம் வீற்றிருந்தது அந்த உருவம் 
கிழிசல் ஆடைகளும்
முகம் கிழித்த மயிர்களும்
வறுமைக்கு விலாசம் கொடுத்தன..
காலொன்று இல்லாமையைத்
தாங்குக் கட்டையும்
கையொன்று கழன்றதைத்
தொங்கிய சட்டையும் !

ஐயா........
உதடுகள் காய்ந்த குரலில்
யாசகம் கெஞ்சலாய் வழிந்தது..
தகரக்குவளையின் சிணுங்கிய சத்தங்கள்
சில்லறைகள் ஓரிரண்டைக் கூறின..
அலட்சியப் பார்வையில் அவனை வெறித்து
சாலையைக் கடந்தேன்..

குளுகுளு காரில் வெயில் மறந்து
வீடு அடைந்தும்...
காதோரம் கேட்டுக் கொண்டே வந்தது
அந்தச்
சில்லறைச் சத்தங்கள் !!!

**முனியாண்டி ராஜ்.**

பிச்சை


ஒடுங்கிய வயிறும் ஒடிந்த உருவமுமாய்
வீதியோரம் வீற்றிருந்தது அந்த உருவம் 
கிழிசல் ஆடைகளும்
முகம் கிழித்த மயிர்களும்
வறுமைக்கு விலாசம் கொடுத்தன..
காலொன்று இல்லாமையைத்
தாங்குக் கட்டையும்
கையொன்று கழன்றதைத்
தொங்கிய சட்டையும் !

ஐயா........
உதடுகள் காய்ந்த குரலில்
யாசகம் கெஞ்சலாய் வழிந்தது..
தகரக்குவளையின் சிணுங்கிய சத்தங்கள்
சில்லறைகள் ஓரிரண்டைக் கூறின..
அலட்சியப் பார்வையில் அவனை வெறித்து
சாலையைக் கடந்தேன்..

குளுகுளு காரில் வெயில் மறந்து
வீடு அடைந்தும்...
காதோரம் கேட்டுக் கொண்டே வந்தது
அந்தச்
சில்லறைச் சத்தங்கள் !!!

**முனியாண்டி ராஜ்.**

பால்யம்


மொழி புரியாமலும் மதம் பிரிக்காமலும்
குழந்தை மொழிகள் வாழ்ந்த காலமது..
அறிவியலின் எந்த ஈரமும்
மனம் நனைக்காமல் மனிதம் வாழ்ந்த காலம்
பால்யம் என்பது வார்த்தைகளில் அல்ல
பாமரர்களின் வாழ்க்கையில்!
தோள் பற்றி நடக்கும்போதே
தோழமை உதிரம் கலந்த கதை..
இணையமும் புலனமும்
குருதிவழி கலக்கும் முன்னே
குரல்களில் மட்டுமே சூழலமையும்…

திறந்தே இருக்கும் சாளரங்களே
நட்பின் நாற்றங்கால்களாய்..
அறிவியல் தொழில்நு்ட்ப வளர்ச்சியின்
அறுவடை வேகத்தில்..
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்..
அந்த
கிராமத்துப் பால்யங்கள்…


கைக்கெட்டும் தூரத்தில் நிலா


திடீரென தூக்கத்தை உலுப்பி எடுத்து
எழுப்பியிருந்தது அந்த நிலா..
விலகிய ஜன்னல் சீலைகளில்
மழை நின்று மேகங்கள் விலகியிருப்பது தெரிந்தது
கொஞ்சமாய் எட்டிப் பார்த்த
என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கியது
களவு போன உறக்கங்களைத் தேடி
மீண்டும் உறங்க முயன்றும்
வைத்த கண் வாங்காமல்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த
மழையில் நனைந்த நிலா….
துவட்டிவிட கைகள் இருந்தும்
மனம் மறந்த இடங்களைத் தேடி
போர்வைக்குள் ஒளிந்து
தூக்கங்களை ஏமாற்றிக் கொண்டே ….

இரவும் அப்படியே கழிந்தது
இருண்ட அந்த நிலவுக்காக!!!