Tuesday, June 21, 2016

எங்கள் தேவை இதுவல்ல

ஏதோ ஒரு பொட்டலத்தில்
மடித்து வைக்கப்பட்ட உணவை வீசி
எங்கள் பசியைப் போக்க வேண்டாம்
நாற்று நடவும்
அறுவடை செய்யவும் 
கற்றுத் தாருங்கள் ..
காணி நிலத்தினில்
எங்கள் பசிகளைப் புதைக்கும்
வித்தை மட்டும் சொல்லுங்கள் ..

அறிவுப் பசியென வருகிறோம்
ஏட்டைக் கிழித்து
எங்கள் செவிகளில் செருக வேண்டாம்
புத்தக கடல்களில் மூழ்கி
செத்துப் போகவாவது
வாய்ப்புக் கொடுங்கள் ..
வார்த்தைக் கையொப்பங்களில்
எங்கள்
வேலைமனு பாரங்களில்
உங்கள் முத்திரை வேண்டாம்
உங்கள் முகமன்களின் அனல்களில்
நாங்கள்
குளிர்காயப் போவதில்லை ....

தேர்தல் காய்ச்சல்களில்
நீங்கள் வீசும் போர்வைகளிலோ
உடல்மறை ஆடைகளிலோ
எங்கள் மனம் திருப்ப வேண்டாம் ....
மானம் மறைக்க ஓர் ஆடை
நாங்களாவே எடுத்துக் கொள்கிறோம்..
எங்களுக்கான கடவுள்களை
நாங்களே தேர்ந்தெடுக்க
வாய்ப்பொன்று கொடுங்கள்
மூளைச்சலவைகளில் எங்கள் முகங்களைச்
சிதைக்க வேண்டாம்..

எங்கள் கால்களில்
நாங்களாகவே நடந்து
வாய்ப்பொன்று கொடுங்கள் ...

போதும்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment