எச்சத்தில்
மெல்லிய குளிருடன்
கொஞ்சங் கொஞ்சமாய் நகரும்
இரவு...
போர்வைக்குள் உடல் திணிக்கும்
தருணம்
நீயும் கொஞ்சம் எழுகிறாய்
இன்னும் வாசிக்கப்படாத
சில வரிகளைத் துருவித் துருவித்
தேடிப் பார்த்து தேய்ந்து போகும்
நிலவைப் போல
உன்னுள் எதையோ தேட முயன்று
கரைந்து போகிறது என் கருக்கல்
அவசரங்களில் தன்னைத் தொலைத்து
பகல்களின் தினசரிக் கடமைகளில்
நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
திடீரென ஒரு நிறுத்தத்தின்
இடைவெளியில் நினைவுக்கு வருகிறாய்..
இன்றாவது
என்னை உடைத்துப் போடும்
முயற்சிகளில்
மனம் எழுகையில்..
பச்சை கழன்ற சிவப்பில்
மீண்டும் விரைகிறது
இந்தப் பகலும்!!
#முனியாண்டி_ராஜ்.
No comments:
Post a Comment