Wednesday, September 14, 2016

சமூகமென...

அவர்கள் என்னை 
நிராகரித்திருப்பதாய் எண்ணவில்லை 
ஏதோ ஓர் அக்கறையில்
என் கரைகளை அவர்கள்
பத்திரமாகவே பார்த்துக் கொண்டார்கள்
ஒவ்வொரு அசைவுகளிலும் அவர்கள் பார்வை
என்மேல்தான் இருந்தது ....
என் கால்களை இழுத்துவிடுவதிலிருந்து
எனக்கான கதவுகளை மூடுவதுவரை
கனக்கச்சிதமாகவே செய்துவந்தனர்
எனக்கான பெயர்களில் அவர்களுக்கான
வசதி அடைகளை இணைத்து
எங்கும் எழுதி வைத்தார்கள்..
அவர்களைவிட ஓரடிகூட முன் 
எடுக்கா வண்ணம் என்கால்களைப் பின்னுக்கிழுத்தபடி
கூடவேதான் வந்து கொண்டிருந்தார்கள்
என்பார்வைகளின் தூரங்களை
சிதைத்த வண்ணமே அவர்களின்
பார்வையும் நடந்து வந்தது..
பின்நடந்தவனையும் பதுக்கல் பயந்து
கைகளையும் இழுத்துக் கொண்டனர்
கிளர்ந்தெழும் என் இறக்கைகளையும்
அவ்வப்போது முறிப்பதில் அவர்கள்
நேரங்கடக்க எண்ணவில்லை ..
எழுந்துநின்று என்உயரம் தெரிகையில்
என்பாதங்களின் வேர்களை வெட்டியே...

அவர்களிடம் நானும் முழுமையாய்
சமர்பித்திருந்தேன் என்னை.....
சமூகமென!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment