Wednesday, September 14, 2016

எல்லைகள் தாண்டா வரை ..


ஒரு மாபெரும் தாக்குதலுக்குத்
தயாராவதுபோல்
கறுப்புக் குதிரைகள் ஆங்காங்கே

பூட்டப்படுகின்றன..
வெண்பஞ்சுகள் அவசர அவசரமாக
கறுப்புகளில் காணாமல் போகின்றன
இளங்குளிரை ஏந்தி
காற்று மெல்ல வருடும் நேரம்
குடைகளைத் தேடி மனம்
ஓடும்.....

இன்னும் கொஞ்ச நேரத்தில்
மேகங்கள்
உடைந்து சிதறலாம்..
வாய் வறண்ட ஏரிகள்
மூச்சு முட்ட நீர் பருகலாம்
தாவரங்கள் துளியேந்தி
ஆடியும் களிக்கலாம்..
பால்யங்கள் உடல்நனைத்து
சிலிர்க்கும் வேளை
பால்யம் கடந்த வயதுகள்
ஏதாவது
முரட்டுக் குடைகளுக்குள்
தங்களைப் பதுக்கிக் கொள்ளலாம் ..

மகிழும் வேளைகளில்
மரணங்களும் நிகழலாம்
கோபம் கொண்ட நிலைகள்
ஏதாவது
குடிசைகளை நிர்மூலமாக்கலாம்
செழித்து வளர்ந்த பயிர்களில்
சேதாரம் ஏற்படுத்தி
செருக்கோடு நடை போடலாம்

மழையும் அழகே..
அதற்கான கோடுகள் தாண்டா வரை!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment