Tuesday, June 21, 2016

எங்கள் தேவை இதுவல்ல

ஏதோ ஒரு பொட்டலத்தில்
மடித்து வைக்கப்பட்ட உணவை வீசி
எங்கள் பசியைப் போக்க வேண்டாம்
நாற்று நடவும்
அறுவடை செய்யவும் 
கற்றுத் தாருங்கள் ..
காணி நிலத்தினில்
எங்கள் பசிகளைப் புதைக்கும்
வித்தை மட்டும் சொல்லுங்கள் ..

அறிவுப் பசியென வருகிறோம்
ஏட்டைக் கிழித்து
எங்கள் செவிகளில் செருக வேண்டாம்
புத்தக கடல்களில் மூழ்கி
செத்துப் போகவாவது
வாய்ப்புக் கொடுங்கள் ..
வார்த்தைக் கையொப்பங்களில்
எங்கள்
வேலைமனு பாரங்களில்
உங்கள் முத்திரை வேண்டாம்
உங்கள் முகமன்களின் அனல்களில்
நாங்கள்
குளிர்காயப் போவதில்லை ....

தேர்தல் காய்ச்சல்களில்
நீங்கள் வீசும் போர்வைகளிலோ
உடல்மறை ஆடைகளிலோ
எங்கள் மனம் திருப்ப வேண்டாம் ....
மானம் மறைக்க ஓர் ஆடை
நாங்களாவே எடுத்துக் கொள்கிறோம்..
எங்களுக்கான கடவுள்களை
நாங்களே தேர்ந்தெடுக்க
வாய்ப்பொன்று கொடுங்கள்
மூளைச்சலவைகளில் எங்கள் முகங்களைச்
சிதைக்க வேண்டாம்..

எங்கள் கால்களில்
நாங்களாகவே நடந்து
வாய்ப்பொன்று கொடுங்கள் ...

போதும்!

#முனியாண்டி_ராஜ்.

தந்தையைத் தேடி

ஏதோ ஒரு வெளிச்சம்
என்
பாதைகளுக்கு ஒளியேற்றிக்
கொண்டிருந்தது..
சட்டென விழும்நேரம்
ஏதோ ஒரு கரம்
என்னைத் தாங்கிப் பிடித்தது
வழி தவறி
பாதம் விலகும் போது
உடல் சாய்த்து
பாலம் அமைத்து...

என் கனவுகளை
அது அலங்கரித்ததில்லை
என் மொழி ஆரங்களைக்
அது கண்டதுமில்லை..
வசவுகளின் வார்ப்புகளில்
சிரித்துக் கொண்டே
பல தடவை கடந்திருந்தது..
வேறுபட்ட உறவாக
என் உயிருள்
உறங்கிக் கொண்டே தான்
இருந்திருக்கிறது அது

'அப்பா' என்று
அழைத்த புதியதோர் குரலில்..
என் பாதைகளின்
வெளிச்சங்களைத் தேடிய போது
அது...
விண்ணில் எங்கோ
மறைத்து போயிருந்தது...

#முனியாண்டி_ராஜ்.

நீயும் வரலாம்


நீ
மீண்டும் வந்திருந்தாய் மகனே 
நெகிழித் தட்டுகளுடன்
வரிசை பிடித்து நிற்கையில்
யாரோ வந்திருப்பதாய்
கூறுகிறார்கள்..
நீ
'யாரோ' ஆகியிருந்தாய்...
ஊகிக்க அதிகம் நேரமும்
எடுக்கவில்லை நீ..
ஆண்டுகளும் தேதிகளும் மாதங்களும்
உதிர்ந்துவிட்ட என் மயிரோடு
காணாமல் போயிருக்கலாம்...
ஜூன் மூன்றாம் ஞாயிறு
எப்படி மறத்துப் போகும்
நீ நினைவுகளைப் புதுப்பிக்கும்
நாளல்லவா....

உன் குழந்தைகள்
கொஞ்சம் வளர்ந்திருக்கிறார்கள்
மகிழ்ச்சி...
நாக்குப் புரளும் மொழியில்
ஏதோ அவர்களிடம் கூறுகிறாய்
எனக்குப் புரிய வேண்டாம் என..
உடல் மொழிகள் கூட
எனக்குப் புரியாதென
ஏனடா நம்ப மறுக்கிறாய்..
இன்னட்டாக இருக்கலாம்
நான் கடித்துக் கொடுத்ததை
உன் மகன் வாங்குகையில்
சட்டென கரம் கொண்டு
வன்முறை செய்கின்றாய்
அதே நாக்குப் புரண்ட மொழியில்
வேண்டாம்பா..
அவனுக்கு ஒத்துக்காது என்கிறாய்
உறைப்பை எனக்குள் உறிஞ்சி
உனக்கு ஊட்டியதை
தட்டுத் தடுமாறி உணர்கிறது
மனது...
உனக்கு எப்படி மகனே
ஒத்துக் கொண்டது.....

உன்னைச் சுமந்த தோள்கள்
மீண்டும் திணவெடுக்கிறது..
உன் பிள்ளைகள் சுமக்க..
ஒரு பார்வையில்
சட்டென ஆழ்ந்து விடுகிறது..
கதை ஏதாவது சொல்ல
உதடுகள் துடிக்கிறது
மொழிச் சிக்கல்
உன் குழந்தைகளுக்கு!
அவர்களின் விழியில்
பாவத்தின் வரிகள் அங்கும் இங்குமாய்...
என் மேல்கூட இருக்கலாம்

அணிச்சலை எடுத்து
மேஜை மேல் வைக்கிறாய்
கைதட்ட கூட்டம் தேவை
என் கூட்டமும் இணைகிறது
வெற்றுப் புன்னகைகளுடன்
புதிய பையில் பரிசாக
கொடுக்கிறாய்..
கடந்த ஆண்டு பெற்ற
ஆடைகள் கூட
அப்படியே இருக்கிறது ஐயா
அணியப்படாமல்
மனதில் அணிவதற்கு
உன் பிள்ளைகளின் நேரம்
கொஞ்சம் தருவாயா.??

சுற்றும் முற்றும்
என் போன்றவர்கள் ..
என்னைப் போன்றவர்கள்
அவர்கள் அதிசயமாய்
தெரிவதுபோல் தெரிகிறது
உன் குழந்தைகளுக்கு...
காலம் கனியும் போது

அவர்களும் உன்னைக் காண
இப்படி வரலாம் எனச் சொல்லிவிடு!

#முனியாண்டி_ராஜ்

மீண்டும் நீ நிழலாய்



அப்படியொன்றும் 
பேசப்பட வேண்டிய விடயமல்ல இது
விடியலில் எழுந்து
மாலையில் மயங்கும் ஒரு
சூரிய வாழ்க்கை போல்தான்...
இளம்வெப்பம்
வெம்மை
இதமான வெப்பம்
என்ற பல பரிணாமங்களில்தான்..
பல ஆண்டுகளுக்குப் பின்
அவளைச் சந்திப்பதாய்
இருக்கலாமெனவும் இருக்கலாம்..
இளம்வெப்பமாய் நெஞ்சில் இதமேற்றி
வெம்மையாய் விலகியவள்
மீண்டும் ஓர் இதமான வெப்பத்தோடு
உடலளவில் மட்டும்...
உள்ளத்தைக் கொஞ்சமாகத்தான்
அசைக்க முடிகிறது எனலாம்தான்!

வருடங்கள் கரைத்த
அவள் உருவங்கிளினாலா..
அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெண்கம்பிகள் சிதைத்த சிரசித்தினாலா
மடிப்புகளில் வதனம் குறைந்த
கன்னங்களினாலா....
ஏதோ ஒன்றில்
அப்படி ஒன்றும் பேசப்பட வேண்டியதல்ல
அவள் வரவு உங்களுக்கு..

எனக்கல்ல!

#முனியாண்டி_ராஜ்.

Sunday, June 5, 2016

துரோகம்


அன்பாய் அளவளாவி
ஆயிரம் பூக்கள் மனமெங்கும் மலர
ஆனந்தமாய் துள்ளிப் பறந்தேன்
பார்ப்போர் பழகுவோர் நண்பரென
நகமனைத்தும் வரைந்து வைத்தேன்..
நா மீட்டிய வார்த்தைகளில்
நாள் நனைய குளித்தேன்..
வெண்மைச் சிரிப்பினில்
கனவுகளிலும் பூட்டினேன் தேர்
உள்ளத்துச் சொல்லனைத்தும்
உதடுகளிலேயே வலம் விட்டேன்
நம்பிக்கையில் கைகொண்டு
சட்டென
நீலம் பூத்து உதிர்ந்தன
மனவெளி பூக்கள்..
எந்த நாவில் வசித்தது...
நாகம் !!!

உடல் மறந்த மனம்

என்னுடனே வந்து கொண்டிருந்தது
அந்த மழை..
சாளர ஓரம் தேடி அமர்ந்து
உனக்குக் கையசைத்து புன்னகைத்து
விடைபெறும் நேரம் வரை
பொறுமை காத்த வானம்
திடீரென உடைந்து விழுந்தது போல்...
சாளரக் கண்ணாடிகளில்
ஓங்கி ஓங்கி அறைந்து
இடிகளின் உரத்தக் குரல்களினால்
எதையோ சொல்ல முயன்று..
மின்னல் வீச்சுகளிலும் என்னவோ
பார்க்கக் கூறி...
ஓ வென அலறியபடி
என்னுடனே வந்து கொண்டிருந்தது
அந்த மழை ..
ஓரிரண்டு நிறுத்தங்களில்
உடல் முறுக்க எழுந்திருப்போரில்
என்னைக் காணாது
கொஞ்சம் தேடித் தேடி அலுத்து
மீண்டும்
உரத்தக் குரலில் ஓ வென
அழத் தொடங்கியிருந்தது .......,
சாளர ஓரத்தில்
இருக்கையோடு இருக்கையாக
இணைந்து போயிருந்த என்னைக் காணாது
அங்கும் இங்கும் நீர்த்தூவலை இறைத்து..
மணியாச்சி ....
இன்னும் கிளம்பலியா என்ற குரலில்
மனம் மீண்ட போது ...
பேருந்து
வெகுதூரம் சென்றிருந்தது...
கூடவே உடலும்!!!
*முனியாண்டி ராஜ்.*
LikeShow More Reactions
Comment

உடைய முடியாத நட்பு

ஒரு மூளைச்சலவைக்குள்
நான் வீழ்த்தப்பட்டதாக
நீ எண்ணிக் கொண்டிருக்கலாம்....
உன் விவாதக் கணைகளில்
நான் காயப்பட்டு விட்டதாக
நீ நம்பிக் கொண்டிருக்கலாம் ....
உன் இதழின் ஓரமாக வழிந்த
ஒரு கேலிப்புன்னகையை
நான் காணாமல் போயிருப்பதாக
உன்னை
நீயே ஏமாற்றுக் கொண்டிருக்கலாம்

எதிர்பார்த்த உன் வினாக்களிலும்
நான் எதிர்பாரா விடைகளிலும்
உன் மனம் காயப்படுவதை
நானும் விரும்பவில்லை...
வளர்ந்து செழித்த செடியில்
வார்த்தை விஷங்கள்
வேர்களில் இறங்கி ஊடுருவதை
நான் வெறுத்தே வருகிறேன்..
கேலிப்புன்னகைகளுக்கும்
நக்கல் வார்த்தைகளுக்கும்
நான் எப்போதுமே
குடை சாய்வதில்லை.....

மனம் கீறிய வார்த்தைகளை விடவும்
அறிவைத் தாக்கிய அம்புகளை விடவும்
விருட்சமாய் விரிந்த
.... நட்பே...
எனக்குப் பெரிது!

*முனியாண்டி ராஜ்.*

படைப்பு


அவரசங்களில் தொலைந்த மனிதர்கள்

அவரசங்களில் தொலைந்த மனிதர்கள்
••••••••••••••••••••••••••••••••••

அவசர ஆடைகளை அணிந்து கொண்டு 
ஓடிக்கொண்டுதான் இருக்கின்றனர்
முகம் இருப்பதே
மறந்து போன பலருக்கு
முகவரி மறந்தும் நாளாயிருக்கலாம்..
காகித நோட்டுகளில்
மனம் கழன்றவர்களும்
நிலம் வீடுகளில் மனிதம்
மறந்தவர்களும்....
ஓடிக்கொண்டேதான்!

மூன்றாம் மனிதர்களும்
முக்குகளில் முகம் நனையும்
வியர்வை உடல்களும்
அவசரங்களில் யாரும் அறிவதில்லை....
தன்வெளிகளில் தினமும்
எதையோ தேடித் தேடித்
தங்களைத் தொலைக்கும் உருவங்கள்
அவசர மனிதர் கண்களுக்குப்
படுவதேயில்லை....

தேடலில் களைத்து
மனம் அசரும் போதே..
தேடி எடுத்தவை
விரல்களின் வருடல்களுக்கென
ஆன பிறகோ...
நீண்ட வெளிதனில்
விடுபட்ட மனிதங்களை நோக்கி
மனம் திரும்புகையில்.....

உன் பிறவி
உன்னைக் கடந்து சென்றிருக்கலாம்!

*முனியாண்டி ராஜ்.*

ஏமாற்றுப் பார்வைகள்

தெருவில் பதியும்
உன் காலடி ஓசையில்
உறக்கத்தை உதறிவிட்டு
ஓடி வருகிறது என் பொழுது...
வழக்கம் போலவே
சாலை விளக்குகளில்
என்னைத் தொலைத்து விட்டு
மறைகிறாய் ... நீ!
- முனியாண்டி ராஜ்.

இதயத்துள் இறங்கிய மழை

குடைகளுக்குள் சிக்காத
ஒரு மழையைத் துரத்துவதாய்
வீட்டின் வெளியே விரைகயில்
ஆலங்கட்டி மழையைப் போல்
அதிசயமாய்.....
உன் விழிகளை
இதயத்திற்குள் இறக்கி விட்டுச்
சென்றாய்....
குடை நனைய!

*முனியாண்டி ராஜ்.*

சொல்ல முடியாத சில கவிதைகள்

ஒரு பரஸ்பர விசாரிப்பில்
எதையோ எடை போட முயன்று
இருவருமே தோற்றுப் போகிறோம்
இறுக்கமான ஓர் இடைவெளியில்
பரஸ்பரங்களைத் தாண்ட
தடையாகவே கருதுகிறோம்
நட்பின் மெல்லிய கோடுகளை...

கோடுகள் மீறும் எந்த ஒரு வார்த்தையும்
விரிசல்கள் என அஞ்சி
அப்படியே அடக்கிக் கொள்கிறோம்
எதையோ ஒன்றை ..
குறுந்தகவல்களும் சரி
புலனப் பரிமாற்றங்களும் சரி..
அச்சத்தின் ஊசலில் ஆடிய படியே....

வாசல்வரை வந்தும்
அப்படியே தொண்டைக்குழிக்குள்
அடங்கிப் போன என் பொழுதுகளை
உனக்கெப்படி உரைப்பேன்..
விழிகளில் நீ காட்டும்
சில நேர பச்சைக் கொடிகளில்
விலக்கிக் கொள்ள முடியாமலேயே
தவிக்கிறேன்..
ஆழ்ந்து போயிருக்கும் ஓர் நட்பினில்..

காதல்..
கண்டம் மறுத்துக் கொண்டே !!

*முனியாண்டி ராஜ்.*

கயல்விழி


தூண்டிலும்
இரை மாட்டப்படாத முள்ளும்
அப்படியே இருந்தன ஆற்று மேட்டில்!
துள்ளிக் குதிக்கும் கயல்களோடு
ஆற்றின் அக்கரையில் நீ!

*முனியாண்டி ராஜ்.*