2020






நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன
இரவு முழுவதும் சுமந்து கொண்டு
இந்தக் காலையில்
உன் வாசல்முன் விழிக்கிறேன்
இரவுகள் நான் சுமந்த கனத்தின் எடை
உன்
பிடிவாதத்தின் அளவில் பாதியிருந்தது
மௌனத்தைவிட உயிரைப் பிழிந்தது
புரிதலைவிட கொஞ்சமாக வறண்டிருந்தது
நீ பிய்த்தெறிந்த பொழுதுகள்
மீதப்பட்ட விந்தையைத் திரை விலக்கிய
கண்ணாடி வழியே ஒளிந்து பார்க்கிறாய்
இங்கேயே இறக்கிவிட்டுப் போய் விடலாம்தான்
என் மரணத்தைவிட உன் கனம் பெரிதென
அப்போதும் நீ உணர மாட்டாய்
06052020
=========================================================

உலகம் உருண்டை என்று கூறிவிட்டுக் கூழாங்கல்லாய் உருளத் தொடங்கினாய்
தட்டையான உலகம் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு
கண் கொட்டாமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்
இன்னோர் உலகத்தின் வன்மம் மிகுந்த அரசி நீயென்றேன்
உன் கூழாங்கற்கள் இப்போது சிதற ஆரம்பித்தன
பூமியின் அடுத்த மூலைக்குத் துளையிட்டுக் கொண்டிருக்கும் உன்னிடம்
என் உலகத்தைக் காட்ட வேண்டும்
சில வாசல்களைக் கடந்து நீ வர வேண்டும்
பற்றற்று என்கிறேன்
இலங்கையைத் தாண்டிய அனுமார்போல்
என்னுலகத்திற்கும் உன்னுலகத்திற்கும்
கால்களை விரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றேன்
வன்மம் என்பது இருகைகைளையும் நீட்டி
குரல்வளையை நெறிப்பது மட்டுமல்ல
என் உலகை நீ புறக்கணிப்பதும்தான்



===========================================================================

3
0 April at 23:04 · Public
வாசகசாலை யின் #கவிதைஇரவு 423 ❤️

"தடம் விட்டு விலகும்
பார்வைகள்
தரம் மீறி
நழுவிய ஆடைக்குள்
விரசமாய் நுழையும் போது
நாகரீகமாய் காப்பாற்ற வேண்டிதான்
இருக்கிறது
நட்பையும்!"

முனியாண்டி ராஜ். கவிதைகள் ❤️

வாசிப்பு - Kannammal Manoharan ❤️

ஒலி நேரலை மிகச் சரியாக இரவு பத்து மணிக்கு உங்கள் #வாசகசாலை முகநூல் பக்கத்தில்..❤️ 

See less
— with 
 and 5 others.

===============================================================================
இம்மாத கல்வெட்டு மின்னிதழில் என் கவிதை. தொடர்ந்து ஊக்கம் வழங்கிவரும் படைப்புக் குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.



========================================================
#சதுரங்களுக்குள்_சுருளும்_பகல்கள்
என்னைச் சுற்றிலும் சுவர்களாய் எழத் தொடங்கிவிட்டன தனிமைகள்
திசைகள்தோறும் சுவர்களில் மோதியே
சுருண்டு விழுந்தெழுகிறேன்
சாளரம் தாண்டி நீளும் பாதங்களில்
இறக்கைகள் முளைப்பதில்லை முன்போல்
கைகளை நீட்டி மலர்கள் பறிக்க
மலர்களனைத்தும் பறவைகளாய் விண்ணில் எழுகின்றன
பொழுதுகள் ஒரே கலவையில் கலந்து
கொடுக்கப்படுவதுபோல்
கடிகாரங்களைத் தூக்கி எறிகிறேன்
கைப்பேசிகளுக்குள் மூழ்கிக் காணாமல் போயிருக்கின்றன விரல்கள்
தாய்விரல் தேடி பிஞ்சு விரல்கள்
தேடலைத் தொடங்கியிருப்பதாக
தொலைகாட்சிகளுக்குள் சிதைந்த விழிகள்
அழுது கொண்டிருக்கின்றன
வாசல்வரை பார்த்துவிட்டு வருகிறேன்
அரவமற்ற வனாந்திரமாய் மாறிப் போயிருக்கிறது வானமும்

=================================================
#முனியாண்டி_ராஜ்.

தரையில் வீழ்ந்து
மீண்டும் சரம் பிடிக்கத் தொடங்குகிறது மழை
காற்று முறித்தெறியும்
ஒரு கிளையோரம் அமர்ந்தவாறே
ஓர் இழை பிடித்து எழுகிறேன்
மண்ணின் அகமெங்கும் வியாபித்திருக்கிறது
மேக முத்தங்களின் மணம்
கன்னம் துடைத்து விழிக்கிறேன்
ஈரம் ஈரமாகவே இருக்கிறது
தூறல்கள் நின்ற பின்னும்

#முனியாண்டி_ராஜ்.
24042020





கண் காணா தேசமொன்றில்
திரிந்து கொண்டிருக்கிறேன்
படிக்கப் படிக்கப் பக்கங்களாய்
புரண்டு கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்
சேரியில் நுழைந்து வெளியேறுகிறேன்
அவர்கள் மொழி விளங்கவில்லை
வாழும் வலி மனதை அரைக்கிறது
அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
ஆடம்பரத் தொகுப்பு மாளிகைகள்
இவ்விடம் சிதறிவீழும் உணவாவது
சேரிக்குள் விழ வேண்டும்

வஞ்சகத்தை வார்த்தைக்குள் வைத்திருக்கும்
வாஞ்சியும்
துரோகத்தை உடன் சுமக்கும் துரையும்
ஏதோ சொல்ல வருகிறார்கள்
மனிதம் பேசும் மருதப்பன்
இருகைகளையும் இறுக்கிப் பிடித்தபடியே
இதயத்தை விட்டு இறங்க மறுக்கிறார்
வனம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்படுகிறேன்
பார்ப்பதைவிட கேட்பது அழகு அடவி
விழியோரம் வந்து விலகும் எந்த விலங்கும்
விரோதம் கொள்ளாமலேயே போகிறது

கானகம் கடற்கரையோரத்தில் இழுத்து வந்து விட்டிருக்கிறது
அதோ ....
மைடின் பாய் குடிசை
சம்மணமிட்டபடியே அவர் வாசல் அமர்கிறேன்
படகே ஏறாதவன் முதன் முதலாய்
மீன்கள் பிடித்துக் கொண்டிருக்கிறேன்
வலைக்குள் துள்ளும் மீன்களின் கரங்களில்
என் உயிரும் புரள்கிறது
ஓர் அலை முகத்தோரம் சாரல்கள் அறைகிறது
விழித்துக் கொண்டு எழுகிறேன்
பேரோசை ஒன்று செவிகளுக்குள் விழுந்து
என்னைச் செதுக்கிக் கொண்டோடுகிறது

திடீரெனக் காதல் ஒன்றில் சறுக்குகிறேன்
நழுவிக் கொண்டோடும் பக்கங்கள் ஒவ்வொன்றிலும்
என் காதலின் எச்சம் கொஞ்சம்
மனம் ஆழத்தில் இறங்கிப் பார்க்கிறது
உலகத்தை மூடிக்கொண்டே விழிகளோரம்
இருவிரல்கள் விரைகின்றன
வாசிப்பது எவ்வளவு சுகம்

23042020 


இரவின் வாசலில்
இளகி வரும் வெப்பங்களின் நடுவே
தனியனாகவே அமர்ந்திருக்கிறேன்..
ஈரம் நனைந்த எந்தக் காற்றிலும்
என் தேகம்
குளிர்ந்ததாகத் தெரியவில்லை..
உனது சுடுமௌன வக்கிரத்தில்
எரிந்து கொண்டே வருகிறது
என் எஞ்சிய பொழுதுகள்....
பேசியதாவது இருக்கலாம்
அல்ல
வார்த்தைகளால் அறைந்தாவது போகலாம்
உன் மௌனத்தைப் போல்
வன்மையான ஆயுதம்
ஏதுமுள்ளதா தெரியவில்லை..
சான்றின்றி மெல்லக் கொல்கிறது
விழியில் விரதமும்
மொழியில் மௌனமும்
நான் கொள்ள முடியாத மரணம்..
கொலுசுகளைக் கழட்டி விட்டாவது நட
உன் நடையின் அழைப்புகளில்
சட்டென எழுகிறேன்..
ஓரப்பார்வைகளில் கடந்தே போகிறாய்..
மௌனத்தின் மௌனம்
மரண வாசல்களின் முகவரி!
எழ முடியாமல் ..
தனிமையை வெறித்த படி !












===•••===•••===•••===•••
என் ஜன்னலுக்கு யாரோ பெயர் வைத்திருக்கக்கூடும்
திடீரென விழித்துக் கொண்டு
காற்றை வம்புக்கழைக்கிறது
இரவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு
என் நெஞ்சின் மீதேறி உட்கார்ந்து கொள்கிறது
கைகால்களை வீசி விரட்டுகிறேன்
மலைகளுக்கப்பால் நான் எங்கோ வாழ்ந்திருந்த வீட்டில்
என் அவயங்களை வீசிவிட்டுச் சிரிக்கிறது
நிலவுகளைப் பிடித்து கைக்குள் வைத்து
எனக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது
கோபத்தில் ஓங்கி உதைக்கிறேன்
கதவுகளில் ஒன்று பிய்த்துக் கொண்டு என் தலைமேல் விழுகிறது
ஆழ்ந்த இரவின் நடுவே என் அலறலில்
யாரும் விழித்துப் பார்க்கப்போவதில்லை
மனிதர்கள் அகன்ற பரந்த இரவுதனில்
ஏதாவது செவிகள் விழித்திருப்பின்
என் ஓலங்கள் அவற்றின் அமைதியைக் கெடுக்கலாம்
என் தலைமேல் மிதித்துக் கொண்டு
அதிவேகமாகக் கடந்து போகிறது உறக்கம்
சிரித்துக் கொண்டிருக்கும் சாளரக் கம்பிகளின் வழியே
08042020







மழை
உனக்குப் பிடிக்கும் என
எப்போதோ ஒரு தடவை கூறியிருந்தாய்
வெளிச்சம் பாய்ச்சிய மின்னலைப் பிடித்து
நமது பெயரைச் செதுக்கிக் கொண்டிருந்தேன்
ஒரு மரத்தின் முதுகில்
விழும் ஒவ்வொரு வரியையும் பிடித்து
குளம் கட்டிக் கொண்டிருந்தாய் நீ
முழுக்க நனைந்த அந்த இளம் இரவில்
நீ மட்டும் நனையாமலேயே வந்தாய்
இறுதிவரை பதிலேதும் பெய்யவில்லை
நானோ இப்போதும்கூட
ஒவ்வொரு மழைத்துளியையும் கோர்த்துக் கொண்டிருக்கிறேன் உனக்காக!
06042020 







===•••===•••===•••===•••===•
தனிமை
என்னைத் துவைத்து வைத்திருக்கிறது

அடுக்களைக்குள் இன்று நகர்ந்து பார்க்கிறேன்
அடுக்கப்பட்ட பொருள்களில்
புதியதாய்ப் பார்வைகள் முளைத்திருந்தன
எண்ணிக் கழிந்து நிமிர
மணிகளில் இரண்டு கழிந்திருந்தன
உண்பதைப் போலல்ல சமைப்பதென்பது
மஞ்சள் டப்பாவில் இருந்த மிளகாயாய்
நாக்கைக் கடித்தது

வீட்டின் நீளம் எழுபதையும்
அளந்து பார்க்கிறேன் முதன்முதலாய்ப்
தரைமூலையிடுக்குகளில் படிந்திருந்த
கறைகளுக்கு ஈடாக
நகங்களின் இடுக்கில் பதிந்த
கறைகளொன்றும் பெரிதாய் தெரியவில்லை
விட்டத்தில் பல்லியொன்று
எகத்தாளமாய்ச் சிரிப்பதைப் போலிருக்கிறது
கால்களின் ஊடாக கரப்பான் பூச்சியொன்று ஓடுகிறது.

சாளரக் கண்ணாடி ஒன்றில் வெடிப்பு விட்டிருக்கிறது
கம்பிகள் வண்ணம் பார்த்து வருடங்கள் இருக்கலாம்
இடுக்குகளுக்குத் தூசுறுஞ்சியின் உதவி
தேவைப்படுகிறது
தலைக்குமேல் சுழலும் சுழலியின் ஒலியில்
இப்போதுதான் செவிகள் அசௌகரியப்படுகிறது
குளிரூட்டியின் வேகம்கூட
குறைந்துவிட்டதுபோல் உணர்கிறேன்

இவ்வளவு பார்த்தும்
பொழுதை இழுத்துக் கொண்டோட மறுக்கின்றன நாள்கள்
தொலையியக்கியை இறுகப் பிடித்தவாறே
சொகுசு நாற்காலியில் விழுகின்றது பிட்டம்.

நாளைகூட இருக்கிறது
01042020



1 April · Public

பல இரவுகளைத் தின்றுவிட்டு
கொழுத்து அலைகிறது அது
உறக்கம் விழைந்து கட்டிலுக்கடியில் ஒளிபவனையும்
கழுத்தைப் பிடித்திழுத்து காலில் விழ வைக்கிறது
காலைகளில் தாராளமாகவே விரிந்திருக்கும் உறக்கத்தை
இரவுகளில் தன் கோரப்பற்களில் வைத்துச் சிரிக்கிறது
நீ தள்ளி நடப்பவனோ தழுவி நடப்பவனோ
இரக்கமற்ற ஒரு சர்வாதிகாரனின் பிடியில்
தூக்கத்தைப் பறிகொடுத்திருக்கிறாய்
இமைகளைப் பிடுங்கி தன் விரல்களில் வைத்து
நம்மை வம்புக்கிழுக்கிறது
தோல்வியெனத் தெரிந்தே போர் இறங்கி
மடிந்து விழுகிறோம்
இரக்கமின்றி நம் விழிகளைத் கொத்திக் கொத்தி
மீன்கொத்திப் பறவையாய் நிலா ஒன்றின்
முதுகில் அமர்ந்தவாறே
மேகங்களை நம் மீது வீசி விளையாடுகிறது
கட்டிலின் மேல்விழும் மேகத்தை
முகம்வரை இழுத்துப் போர்த்துகிறேன்..
மன்னித்து விடுங்கள்... மன்னிக்க!


























==••==••==••==••==
காலையில் எழுந்து கோவிலுக்குச் சென்றேன்
கதவுகள் இறுக்கி மூடப்பட்டிருப்பதாய் சொன்னார்கள்
கடவுள் ஒன்றுதானே என்று
வழிபாட்டுத் தலங்கள் வேறெங்கிலும்
இறையைத் தேடினேன்
அடைக்கப்பட்டிருந்த இறைவன் இல்லங்களில்
பூட்டுகள் கனத்துத் தொங்கின
கனத்த மௌனத்தைப் போர்த்தியிருந்தன
மனித வெளிகள்
வேத நூல்களிலும் மந்திரப் பூஜைகளிலும்
காற்று மெதுவாய் குளித்துக் கொண்டிருந்தது
இல்லங்களுக்குள் அடைபட்டுக் கொண்டிருந்த
வழிபாட்டுப் பிரார்த்தனைகளில்
மனிதர்கள் மட்டும் வெளியே நடமாடிக் கொண்டிருந்தார்கள்
இருப்பதை உறுதிபடுத்த
நீண்டு வளைந்த சாலைகளில்
அவ்வப்போது ஊர்ந்து கொண்டிருந்த
உயிரற்ற வாகனங்களுக்குள்
ஒளிந்து கொண்டிருக்கும் மனிதர்களின்
உயிர் பயம் ஏதேனும் ஒன்றில்
பிரார்த்தனை ஒன்று இன்னும் உயிர்த்திருக்கலாம்
பரபரப்பு வாசலில்
கேட்பாரற்றுக் கிடக்கும்
காவல் தெய்வக் காலொன்றில்
அவர்கள் விழுந்து எழலாம்
தெய்வம் ஏதேனும் விழிக்க வேண்டி!
நிமிர்ந்து பாருங்கள்
அது மருத்துவமனையாகக்கூட இருக்கலாம்

==••==••==••==••==
தீவுகளாய்த் தொங்கத் தொடங்கிவிட்டன
மனிதக் கூட்டங்கள்
மதங்கள் வகுத்த வழி மறித்து
பாதை கடக்கின்றன மரணங்கள்
பரிகாசங்களில் திரிந்த வசனக் கூத்துகள்
திரையைக் கொஞ்ச கொஞ்சமாக மூடுகின்றன
நச்சுயிரிக்குத் தெரிவதில்லை வழிபாட்டுத் தலங்கள்
தங்களைத் தாங்களே பூட்டிக்கொண்டு
மௌனம் காத்து நிற்கின்றன அவை
தொலைந்து போன பண்பாட்டு விழுமியங்களைத்
தோண்டியெடுக்கச் சொல்கிறது நவீனம்
தொட்டுப் பேசும் கலாச்சாரங்களைக்
கலைத்துப் போட்டிருக்கிறது அச்சம்
மதம் பேசியவனும் மதமாய்ப் பேசியவனும்
சிறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வார்த்தைகளை
வீட்டுச் சிறைகளைத் தாண்டி
விதிகள் மீறும் கூட்டத்திற்காக
சாலை முச்சந்தி ஒன்றில்
கைவிரித்து அமர்ந்திருக்கிறது அது





==••==••==••==••==••==
பாதை தெரியத் தொடங்கிய போது
என்னால் முடிந்த அளவு
கனவுகளைச்
சுமந்து கொள்ளத் தொடங்கினேன்
பாதைகளின் வளைவுகள் ஒவ்வொன்றிலும்
என் கனவுகள்
ஒவ்வொன்றாகக் கழன்று விழ
சந்தித்த மனிதர்களில் சிலர்
நிர்ப்பந்தமாக என் கனவுகளைப் பிடுங்கினர்
இனம் கொஞ்சம்
மதம் கொஞ்சம்
என கனவுகள் வெட்டப்பட்ட பிறகு
மீதமிருந்த கொஞ்ச நஞ்ச கனவுகளையும்
ஏதோ கோவில் வாசலொன்றில்
தொலைத்து விட்டதாய் ஞாபகம்
ம்ம்ம் .....
இன்னும்
வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள் என்னிடம்

==••==••==••==•
உறக்கம் உதறி எழுகிறேன்
உடல்மேல் ஊர்ந்து கொண்டிருக்கிறது
உறக்கம் களையா ஒரு நாகம்
அருவருப்பின் எச்சங்களில்
வெளிச்சங்களை அள்ளித் தெளித்த இரவுகளிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக என்னை மீட்கிறேன்
ஒற்றை இலையில் ஒட்டிக் கொண்டிருக்கும்
ஓரிரு துளிகளுக்காக சுற்றிக் கொண்டிருக்கிறது ஒரு தேன்சிட்டு
ஓர் இரவை யாசித்தபடி
நகர்ந்து கொண்டிருக்கும் நகரங்களில்
தொலைந்தபடி ஓடத் துவங்குகிறேன்
எந்தச் சந்திலும்
நாகமேதேனும் இரைக்காகக் காத்திருக்கலாம்
இங்கே யாரும் யாருக்காகக் காத்திருப்பதில்லையென
எனக்கு முன்னும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்
இயன்ற ஒரு துளியை மட்டும் பருகிவிட்டு
பறக்கத் தொடங்குகிறது தேன்சிட்டு

============================================================


உயிரே... உறவே...
மலர்களால் மடல் வரைவது
மௌனங்களால் வாழ்த்துக் கூறுவதுபோல்..
மௌனங்கள் உடையும் தருணம்
மலர்களும் உதிரலாம்..
மௌனங்களைக் கலைக்க வேண்டி
சொல்லாடல் ஆழிக்குள் நுழைந்து
வார்த்தைகளைத் தேடின்
வர்ணத்தோரணங்களாய் ..
கவிதைகளாய் எங்கெங்கும் நீ..
ஆண்டுக்கொரு முறை வலம்வருவதில்
என்னுடன் நீயும் உடன்பட மாட்டாயென அறிவேன்..
அன்பின் தினத்தில் கைகோர்த்து நடப்பதைவிட..
ஆண்டின் வீதிகள் தோறும் வலம் வரவே நீயும் விரும்புவாய் ..
ஒவ்வொரு வீதியிலும் உனக்காக
உயிரை உருக்கி
என்னையே வடித்திருக்கிறேன்..
ரசித்துக்கொண்டே வா..
கருக்கல்களைக் கரைக்கும்
வெளிச்ச வீச்சுகளில்
விலகி விலகி நடந்து கொண்டே
தேடிக் கொண்டு வா...
உனக்கான கவிதைகளில்
எனக்கான வேண்டுதல்
எங்கேயாவது மறைந்திருக்கலாம்..
அதுவரை..
இதுவரை கூறியது வார்த்தைகளாகவே
உனக்குத் தெரியும்!
- அன்புடன்,
சிதறிய இதயத்தின் ஒரு பகுதி



காதலெனப்படுவது இதுவெனில்....
===•••===•••===•••===•••===
விழித்தெழும் வேளையில்
இரவுகனாக்களின் சில எச்சங்கள்..
சாலை நிறுத்தங்களில்
வண்ணம் மாறும் சமிக்ஞைகளின்
இடைவெளிகளில்
கடந்துசெல்லும் சுடிதார்களிளெல்லாம்
உன் முகம்..
எழுதுகோல் விரல்களில் வழிகையில்
உன் பெயரின் நர்த்தனம்
கவிதை என்ற பெயர்களில்..
மாலைத் தேநீருடன்
உன் ஒற்றைவிழிப் பார்வை பிம்பம்..
மௌன மழைகளில்
லேசான சாரலின் நனைதல்..
கனத்த மாரிகளின் மிரட்டல்களில்
குடை பிழைத்த
உடலுரசும் அந்த வெப்பங்கள்..
சினிமா கதாநாயகிகளில்
அவ்வப்போது மாறும் உன்முகம்..
ஏதோ ஒரு நினைவில்
திடீரென சுவர்மோதும் போது
'என்னடா கனவா' என்ற சொற்களில்
இடறிவிடும் உன் பாங்கு....
உறங்கும்முன்
ஏதோ ஒரு சினிமா பாடலில் நீ...
ம்ம்ம் ....
இவையனைத்தும்தான் காதலென்றால்
நீயும்
அப்படியே இருந்துவிட்டுப் போய்விடு
என்னைக் கொல்வதைத் தவிர!

==============================================================



தேடல்களில்......
===•••===•••===
கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்
என் பிம்பங்களிலிருந்து எழுந்து வருகிறாள்
நிலைக்கண்ணாடியெங்கும் வெண்புகையாய்

திரும்பினால் களைந்து விடுவாளென
கண்களைக் கண்ணாடியிலேயே பதித்துவிட்டு
மனதோடு வெளிநடை செல்கிறேன்
அவள் கொண்டு சேர்த்த வார்த்தைகள்
கால்களுக்குள் பின்னிப் பின்னி
நடையைத் தளர்த்துகின்றன

காதோரமாய் வேண்டிய
எப்பொழுதோ கேட்டு வைத்த பாடலொன்று
நவீன இசைகளில் காற்றை
கறைபடுத்திச் செல்கிறது
மாசடைந்த வளிதனில் வலியினூடே
வார்த்தைகளில் கோர்க்கப்பட்டு வழிகிறது

இளங்குளிரை உடலெங்கும் போர்த்தும்
இலகுவான பனிப்படலத்தில்
அவள் எங்கேயாவது கரைந்திருக்கலாம்
பச்சை விரிந்திருக்கும் வனந்தனில்
ஒரு குரலுக்காக செவிகளை
மரத்திலேதும் அவள் அறைந்து சென்றிருக்கலாம்

இப்போதும்கூட ஒரு குளிராடைக்குள்தான் என்னை ஒளித்து வைத்தபடியே
தேடலைத் தொடர்கிறேன்

#முனியாண்டி_ராஜ்

-==============================================================





_=======================================================






===============================================================





==========================================================


===•••===•••===••==
எப்போதும் அரசியல் பேசாத காமாட்சி பாட்டி
அன்றுதான் அரசியல் பேசத் தொடங்கினார்
பணம் வாங்கி ஓட்டுப் போட்டதில்
கொஞ்சம் வருத்தம் அவருக்கு
ஓட்டுப் பிச்சை கேட்பர்களின்
வஞ்சக வார்த்தைகளில் கொஞ்சம் வருத்தம்
ஏதோ ஒரு அரசியல் கட்சியில்
குட்டித் தலைவனாய் உலா வரும்
பேரன் மீது கூடுதல் கோபம்
சாவடிவரை காரில் சுமந்து சென்று
ஓட்டுப் போட்டு முடித்ததும்
தெரிந்தும் தெரியாமல் போன
ஊர்த்தலைவர் சாமிக்கண்ணுவின் மேல் ஆத்திரம்
தான் கடந்து வந்த ஓட்டுப் பாதையின் கதைகளை
கசங்காமல் பிசகாமல் கூறிய காமாட்சி பாட்டி
ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும்
வழக்கமாகக் கிடைக்கும் இலவசப் பொருள்கள் பற்றி
தன் ஓட்டைப் பற்களின் ஊடே
சிரித்துக் கொண்டே கூறினார்
இறுதியாகக் கூறியதுதான் எனக்கும் பிடித்தது
என்ன சொல்லுங்க தம்பி
உயிரே போனாலும் ‘அந்த’ சின்னத்துக்குத்தான்
என் வாக்கு
கொஞ்சமாவா கொடுக்கிறாங்க அவுங்க!
16012020




வண்ணங்களால் எழுதப்பட்ட
கனவு நீ
எண்ணங்களில் நிரப்பும் போதெல்லாம்
எனக்குள் எரியத் தொடங்குகிறாய்
ஒடித்தெடுத்து வந்த ஒரு தூரிகைக் குச்சியில்
வரைய மட்டுமே முடிகிறது வார்த்தைகளை
வாக்கியங்களை இழுத்துக் கொண்டோடும்
கவிதைகளில்
உன்னைப் போலவே
எனக்கும் உடன்பாடில்லாமல் போகிறது
தெறித்து விழும் நீர்வீழ்ச்சியிலோ
அரித்து ஓடும் அருவியிலோ
அசந்து நடக்கும் ஆற்றுக்கரைகளிலோ
நிமிர்ந்து நிற்கும் அடவிகளிலோ
உனக்கான வண்ணத்தோடு
வரைந்து கொண்டே இருக்கிறேன் நான்

==============================================================


=======================================================



விடுபடாத முத்தம் ஒன்றின் இரைச்சலில்
விழித்துக் கொள்ளும் இரவுகளில்
உன் தடம் தேடுகிறேன்
கழுத்துவரை இறங்கிய சூடான மூச்சொன்று
இடைவெளிகளில் வந்து நிற்கிறது
இதயத்துக்குள் ஒட்டாத ஒன்றினை
அந்தரங்கங்களில் வரைகிறது அது
யார் சொன்னது
முத்தமனைத்தும் ஒரு காதலின் தொடக்கமென...

=====================================================


======================================================

மேகங்களை உடைத்துப் போடும் மழைகளில்
கொஞ்சம் குளிர்கிறது
உள்ளம்வரை அழுந்திய வார்த்தைகளில்
ஏதோ ஒன்று இடறுகிறது
இடிகளில் உடையா வானவில்லைத் தேடி
விரையும் பயணங்களில்
வெறுமனே விளையாட்டுக் காட்டுகிறது மழை
வழக்கம்போல் பெய்யும் மழை விடுத்து
சன்னலுக்கு வெளியே பாய்கிறேன்
தூரத்திலிருந்து விரல் நீட்டுகிறாய்
இலை ஒன்றின் நுனியில்
வழுக்கிச் செல்லும் துளியொன்றாய்
நழுவிச் செல்கிறேன் நான்

===========================================================






============================================================

பேருந்தொன்றில் ஏறுகிறேன்
சரி.. ஏற்றிக் கொள்ளப்பட்டேன்
நிரம்பி வழிகிறது இருக்கைகள்
பலர் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்
எப்போது தூங்கினர் எப்போது எழுவரென
யாருக்கும் தெரியாது
சிலர் அவ்வப்போது விழித்து
காலை வணக்கம் கூறிவிட்டு
தூக்கம் தொடர்கின்றனர்
செல்லும் இலக்கை மறந்துவிட்டு
பேருந்து இலக்கற்றுச் செல்வதுபோல் இருக்கிறது
இறங்கிக் கொள்கிறேன் என்கிறேன்
எனக்காக வாங்களேன் என்கிறார் ஓட்டுநர்
இன்னும் பல பேருந்துகளிலும
பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்
தானுமொரு பயணி என்பதை உணர்த்த
ஒருசிலர் உணர்வுருகளில் வருகின்றனர்
பயணிகளில் ஒரு சிலர் தெரிகிறது
இலக்கும் நோக்கும் மறந்த பயணிகளோடு
நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இறங்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல்!
07052020
==========================================================

அம்மாவுக்கு ஒரு பூ
=================
பூக்கடையெங்கும் தேடினேன்
உனக்கான மலர்கள் அகப்படவேயில்லை
காலையில் பூக்கும் பூக்கள்
மாலையில் வாடி விடுகின்றனவாம்
காலையில் மலரும் தாயைப்போல்
வாடாப்பூவைப் பார்த்தேயில்லை என்றார்கள்
எங்கும்

உன் கைச்சமையல் மட்டும் ருசிப்பதெப்படியென
ஒருநாள் கேட்டேன்
உனக்கும் தெரியவில்லையென
ஒரு புன்னகையினூடே கூறினாய்
நீ வெளுக்கும் துணிகளுக்காக
உன் கைமட்டும் வெளுக்கவில்லையே
எப்படியென வியந்தேன்
ஒரு புன்முறுவலில் கடந்தாய்
என் கோபங்களில் நீ பொங்காமல் இருப்பதெப்படியென
கொஞ்சம் கோபம் கொண்டேன்
உன் கோபங்களை
அப்பாவிடம் கொட்டிக் கொண்டிருந்தாய்

வீட்டுப்பாடங்கள் தெரியாமல்
உன்னை அண்டிய போது
கறைகள் படிந்த கைகளுடன் புத்தகம் தொட்டாய்
ஆச்சரியமாய் இருந்தது
பளுப்புத்தாள்களும் பட்டென வெண்மை அணிந்தன
ஒட்டுமொத்த ஆசிரியர்களும்
உனக்குள் நடந்து கொண்டிருந்தனர்

தோல்வியில் ஒருநாள் துவண்டு விழுந்திருந்தேன்
அறைக்குள் அடைந்துகொண்டு
அழுகையில் கரைந்து கொண்டிருந்தேன்
தற்கொலைகள் பலவற்றுக்கு மனதின் பிசாசு ஒன்று
தூபமிட்டுக் கொண்டிருந்தது
வானம் திடீரென வெளுத்ததுபோல்
உன் மடியினில் படுத்துக் கொண்டிருந்தேன்
மனதின் பிசாசு கொல்லைப்புற வழியில்
ஓடிக் கொண்டிருந்தது

பூக்கடையெங்கும் தேடினேன்
உனக்கான மலர்கள் அகப்படவேயில்லை
தோட்டத்தில் பூத்திருந்த
ஒற்றை ரோஜாவைத் தயங்கியபடியே கொடுத்தேன்
தம்படம் எடுத்து புலனங்களில்
யார் யாருக்கே அனுப்பிக் கொண்டிருந்தாய்
உன்னைச் சுற்றிலும் பூக்கத் தொடங்கிய ரோஜாக்களில்
வாடாத பூப்பற்றி எல்லோரிடமும் கூற வேண்டும்

#முனியாண்டி_ராஜ்.
10/05/2020
#அன்னையர் தின வாழ்த்துகள்
=========================================================


===•••===•••===•••===•••===•••===
உன் மேலும் பெய்யலாம் ஒருநாள்
இந்த மழை
நீ நடக்கும் பாதைகளில் கைக்கெட்டும் தூரங்களிலிருந்தும்
உன்னை மட்டும் நனைக்காமல் இருப்பது வருத்தம்தான்
உடைந்து விடாதே..
வண்டியும் ஒரு நாள் படகில் ஏறும்தானே
கைகளை நீட்டுகிறாய் நனைந்து கொள்ளலாமென
மழை தன்னை உள்வாங்கிக் கொண்டு
உன்னை விலக்கிப் பெய்கிறது
பெயரை உச்சத்தில் வை
அண்டையில் பெய்யும் மழைகூட
உன்னை அண்ணாந்து பார்த்து நனைக்கும்
மழைக்கு நிறம் மட்டுமல்ல
பெயரும் தெரியும்
நீ உடுத்தும் ஆடைகளில்கூட
அஃதுன்னை பட்டியல் சேர்க்கும்
அதற்குள் அழுது விடாதே
மழைக்கு அழத்தான் தெரியும்
நனையத் தெரியாது
இடிகளும் மின்னலும் ஏமாற்றிவிட்டுச் சென்றதில்லையா பலமுறை
ஒருநாள்
மழை உன்னைத் திரும்பிப் பார்க்கும்
அதுவரை நடந்து கொண்டிரு
உன் வாசல் வந்து கதவைத் தட்டி
சில்லென்று தலை நனைக்கும்
பொறுமை கொள்...
அதற்குள் தூவானங்களில் மகிழ்ந்து விடாதே
மழையும் மனிதன் மாதிரிதானே!
11052020
==============================================================

#நிறமற்ற_நிறங்கள்
===•••===•••===•••==
இஃதென் நிறம் என்கிறீர்கள்

தீக்குச்சி ஒன்றை உரசி வீசிவிட்டு
ஒரு பெருங்கோபத்துக்குள் தள்ளி விடுகிறீர்கள்
என்னைக் கோபக்காரனென்று சிவப்பு வண்ணத்தில் பூசுகிறீர்கள்
உங்களின் எள்ளல்களில் மறுத்து விலகுகிறேன்
ஒரு சுண்ணாம்புத் தொட்டிலுடன்
என் துணிச்சலில் வெள்ளையடிக்கிறீர்கள்
சுற்றி நின்று பரிகசைக்கையில்
சிவப்பாகிக் கொண்டிருக்கிறேன் நான்

உரையாடல் தொடர்ச்சிகளில்
நடைமுறைகளின் சாரங்களில்
மஞ்சள் கலக்கிறது என் பேச்சுகளில்
சீ.. மஞ்சள் கலாச்சாரக்காரனென
மஞ்சளில் என்னைத் தோய்க்கிறீர்கள்
உங்களின் இன்னொரு கரமோ
உள்ளாடை தாண்டி சொரிந்து கொண்டிருக்கிறது
கழுத்துவரை காமம் வைத்து
உதடுகளில் அமர்கிறீர்கள்
மஞ்சள் நிறத்தில்

என் பயணங்களை எனக்குள் வைத்து நகர்கிறேன்
கனவுகளை எல்லைகளுக்குள் வளர்த்து
வளர்த்துக் கொண்டிருக்கிறேன்
என் பக்கங்களைக் கறுப்பென
முதுகுக்குப் பின்னால் நகைக்கிறீர்கள்
உங்கள் நாடகத் தனங்களில்
என் கறுப்புகள் இருட்டாகவே இருக்கட்டும்

இதில் எஃதென் நிறம்

#முனியாண்டி_ராஜ்
===========================================================

===============================================================


==••==••==••==••==
அது பூப்பதுபோல் இருக்கிறது
மீண்டும் என்ற வார்த்தையைத்
தேடித் தேடி எடுத்து வைத்தபோது
இலையுதிர்ந்த ஒரு கிளை மறைவினில்
உன் முகத்தை ஒளித்திருந்தாய்
இலைகளை இழந்து நிர்வாணம் காத்த
கிளைகளின் மீது
கொஞ்சக் கோபம் மீதமிருந்தது
இலைகளைத் தின்ற புழுக்களெல்லாம்
பட்டாம்பூச்சிகளாய் பறந்து கொண்டிருக்க
நீ புழுவாய் நெளிந்து கொண்டிருந்தாய்
உன்னருகில் இயலாத ஒன்றை இறக்கி வைத்துவிட்டு
வேகமாய் நடந்து கொண்டிருந்தேன்
கிளைகளில் ஏதோ மாட்டியதாய் ஓருணர்வு
கறுப்பு நினைவுகளில்
சிவப்பாய் ஒன்று ஊர்ந்துவர
பூமியை விட்டு அப்போதுதான்
எழத் தொடங்கியிருந்தது மழை!
===========================================================
===•••===•••===•••===•••===•••===•••
முனைமுகர்களில் நாங்களில்லை என எக்களிக்கிறீர்கள்
தண்டச் சம்பளத்தில் நாங்கள் பயணிப்பதாக
நக்கல் கூத்தாடு போடுகிறீர்கள்
வலைகள் பலவற்றில் நாங்கள் சிக்கியிருப்பதை
நீங்கள் அறிந்தாரில்லை
வலையரங்கம் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம்
விரிவரங்கம் என்றவுடன் நீங்கள் கொஞ்சம் தள்ளாடலாம்
கூகுள் பாரங்கள்வழி புதிர்களா
குழம்பிப் போய் அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
கைப்பேசி பாடங்களில் தத்தளித்து
பழிகளைத் தூக்கி எங்கள் மேல் வீசுகிறீர்கள்
வலையொளியா …. எதைப் பிடிக்க என்கிறீர்கள்
உங்கள் குழந்தைகளை எட்டிப் பாருங்கள்
புன்னகைகளின் ஊடே அவர்கள்
ஏதாவது கற்றுக் கொண்டிருக்கலாம்
உங்கள் பிள்ளைகள்தாம்..
பள்ளி திறப்பதெப்போது என கூச்சல் போடுகிறீர்கள்
இரண்டு பிள்ளைகளின் கல்வியில்
இருண்டு போகிறது பகலும் உங்களுக்கு
உங்கள் பிள்ளைகளுக்காகத்தான்
பகலாகிக் கொண்டிருக்கிறது இரவும் எங்களுக்கு
நடமாடக் கட்டுப்பாட்டுக் காலங்களில்
வெளியே எங்கள் தலை தெரியாது
தேடாதீர்கள்
கைப்பேசிகளுக்குள்ளும் கணினிகளுக்குள்ளும்
நாங்கள் காணாமல் போய் நாளாகிறது
தொழில்நுட்ப உலகங்களின் மூலை முடுக்கெல்லாம்
புரண்டு எழுந்து வருகிறோம்
இயங்கலை பாடங்களில் நம் பிள்ளைகள் மூழ்க
கவலையில்லை…
எங்களுக்கான வாழ்த்தை நாங்களே பகிர்ந்து கொள்கிறோம்
ஆசிரியர் நாள் வாழ்த்துகள்
வலையரங்கம் - webminar
விரிவரங்கம் - zoom
வலையொளி – you tube
முனைமுகர் - front liner
இயங்கலை - online
==========================================================
===•••===•••===•••===•
கட்டுப்பாடுகளுக்குள் கலைந்து போயிருக்கின்றன
நமது விழிகள்
இடது கண்ணும் வலது கண்ணும்
கிரகங்கள் மாறியதுபோல்
வெட்கையில் தவிக்கிறது என் பொழுது
ஆற்றின் நாணல்களுக்குள் கைநுழைத்துத் துழாவுகிறேன்
மணற்பரப்புகளில் என் விரல்கள் தேய்கின்றன
மெல்லிய அலைகளில் கரையேறும் மீன்கள்
எதற்குமே உன் விழிகள் இல்லை
உன் இமைகளோரம் பயணம் செய்யும்
என் பார்வைகளைக் கொஞ்சம் அடக்குகிறேன்
ஆற்றில் பாய்ந்து யாரோ பேரலைகளை உண்டாக்குகிறார்கள்
நீ சிரிக்கிறாய்
விரிந்து ஆழத்தில் இறங்குகிறது
என் உறக்கங்கள்
கண்களை மூடியவாறே ஒரு வனாந்திரத்தில் நுழைகிறேன்
கானகம் யாவும் உன் கண்கள்
இமைகளை மூடித் திறந்தே
என் இரவுகளை அடர்த்தியாக்குகிறாய்
விழிகள் தூரங்கள் கடந்து ஓட...
ஒவ்வொரு மரமாய் முறிந்து கொண்டே வருகிறது
ஒரு பெரும் இரைச்சலுடன்..
18052020

=============================================================
#தலைப்புச்_செய்திகள்_வேண்டாதவை
===•••===•••===•••===•••===•••===••
பரபரப்பில் பற்றிக் கொள்கின்றன செய்திகள்
வாய்களை அகலத் திறந்தவாறே
வெந்தும் வேகாத உணவுகளை உள்ளிறக்குகின்றன

உண்மைகளைப் புறந்தள்ளும் தகவல்களில்
நாலா புறமும் பற்றி எரிகிறது அசோகவனம்
ஓட்டுப் போட்டவன் வாய்களில் பெருவிரல்கள்
ருசி கண்டவன் ருசித்தவாறே
இரசிக்கத் தெரிந்தவன் இரசித்தவாறே நகர்கையில்
உனக்கு எங்கிருந்து வந்ததடா பற்று

#முனியாண்டி_ராஜ்.
   21052020
=======================================

No comments:

Post a Comment