Wednesday, September 14, 2016

கைவராத புரிதல்களின் தேடல்கள்


நம் புரிதல்களுக்கான தேடல்களில்
அவ்வப்போது நழுவிப்போகின்றன
சில விட்டுக் கொடுத்தல்கள்..

உன் பக்கம் சிலரும்
என் பக்கம் சிலரும்
அறிவுரைகளை அவிழ்த்துவிட்டுப்
போகின்றனர்....
ஒரு காப்பிக் கோப்பையின்
வெப்பத்தணிதலோடு முடிகிறது
அவர்கள் கடமைகள் என்றெண்ணி!

உனக்கும் எனக்கும்
ஒருசில நியாயங்களின் உரசல்களில்
தீப்பொறிகள் தீமூட்ட முனைகின்றன..
ஆணாதிக்கமாய் என் பார்வைகளை
நீ முன்னெடுக்கும் போதெல்லாம்
சில பெண்ணியங்கள்
எனக்குள்ளும் வந்து போவதை
நீ உணரத் தவறுகிறாய்..
கண்கள்முன் படரும்
கோப மேகங்களில் வார்த்தைகளை
அப்படியே விடுகிறோம் சுதந்திரமாக!
உணர்ச்சிகளின் உந்துதல்களில்
எல்லை மீறும் வார்த்தைகளில்
'அம்மா' என்றழைப்பின் குழந்தையிடம்
குழந்தையாகவே நீ மாறும் வேளை..

நமக்கான கடிவாளங்கள் இருக்குமிடம்
அடங்கியே போகிறோம் அமைதியாக!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment