Tuesday, January 19, 2016

தலைப்பு : மனிதம் இல்லா வெடிகுண்டுகள்


தலைப்பு : மனிதம் இல்லா வெடிகுண்டுகள்
குருதிக் கறைகளுடன்
குற்றங்களில் நனைந்த நெஞ்சங்கள்
உயிர்க்காவு தேடி
தரணியெங்கும் திரியும்..
மனித வெடிகுண்டுகளென
பெயர் வைத்து அழைக்கிறது அரசியல்

தளிர்களையும் மலர்களையும்
மனிதங்கள் சுமக்கும் மனிதர்களையும்
மிருக வெறியில் அறுத்தெறியத் துடிக்கும்
மின்னியல் மிருகங்களை 
மனிதன் கலந்து எவ்வாறு கூறலாம்..
உயிர் ஊடும் உடலத்தை
தானாகச் சிதைப்பது எந்தக் கடவுளின் வேண்டல் ..

எச்சரிக்கை வேண்டல்களிலும்
அண்டையில் சிதறும் உடல்களிலும் 
ஓலமிடும் அந்த உயிரின் சத்தம்
என் நாளங்களைக் கிழித்தெறியும் போது
...... நண்பா...
உன் உணர்வுகளைக் கொஞ்சமேனும்
அசைக்கவில்லையா...

நகக்கீறல்களை விட
விரல்கள் தீண்டல் இனிமையானது..

மதம் திறந்து வெளியே வா ..
மனிதங்களுடன் சற்றுத் தணித்து..
பேசி விட்டாவது போ!

^^முனியாண்டி ராஜ்^^


Wednesday, January 13, 2016

மரணிக்கும் சிநேகம்


தலைப்பு : மரணிக்கும் சிநேகம்
தொட்டுப்பார்த்துக் கொள்..
உயிரோடுதான் இருக்கிறேன் இன்னும்
குத்திய இடம் முதுகென்பதால்
உடனே மரித்துவிட முடியவில்லை..
தாமரையிலை நீர்த்துளி போல்
மரணமும் தொடாமலேயே செல்கிறது..
மார்பில் குத்தியிருந்தால்
மரித்திருப்பேன் எப்போதே.....

சிலந்திவலையில் சிக்கிய பூச்சிபோல்
சிக்கிக்கிடக்கிறேன் உன்னில்..
மௌனம் உன்னை மறுத்துவிட்டு வெளியேறிய போதும்
மனம் மட்டும் இன்னும்
உன்னைச் சுற்றிய நினைவுகளில்
சிவந்து கிடக்கின்றது…
பேச்சுகளை மறுதலித்து உதடுகள்
மட்டும்தான் நகர்கின்றன…
தொண்டைக்குழிக்குள் சில் வார்த்தைகள்
உன்னை உச்சரித்தே புரள்கின்றன..

நட்பின் வலி உனக்குத் தெரியுமா தெரியவில்லை
மீண்டும் மீண்டும் நீ வீசும்
சமாதானப் புன்னகைகளில் இனியும்
திரும்பாது என் சிநேகம்

      ^^முனியாண்டி ராஜ்^