===•••===•••===•••===
நிர்பந்தமான இரவொன்றில்
மெல்ல மெல்ல கடத்தப்படுவதுபோல் உணர்கிறேன்
சதுரங்கப் பலகையில் விழுந்த காய்களாய்
வெட்டாமலும் வெட்டுப் படாமலும்
வாசலோரத்தில் நிலாவொன்று
வெகுநேரமாய் காய்ந்து கொண்டிருக்கிறது
விடிவதற்குள் வருவதாய் சொன்ன சூரியன்களை
மனம் கணக்கெடுத்துக் கொண்டே
ஒரு மௌன வலையினில் விழுந்து கொண்டிருக்கிறது
நேற்று இரவு கிழித்துப் போட்ட
கையொப்பமில்லா கடிதம் ஒன்றின் கிழிசல்
சாளரத்தின் துவாரமொன்றில் தலை நுழைத்தபடியே
ஏதாவது ஒரு கதவை
உடனே திறந்துவிட வேண்டும்
வருவதாய் சொன்ன சூரியன்களுக்காகவோ
காய்ந்து கொண்டிருக்கும் நிலவுகளுக்காகவோ
குறைந்தது....
சாளரத்தின் துவாரத்திலிருந்து
கிழிசல் துண்டாவது
கொஞ்சம் சுதந்திரமாக பறந்து போக!
29122018
============================================================
==============================================================
===============================================================
===•••===•••===•••===•••===•••
என் தேவன் குதிரைமேல் ஏறி வருவதாய்தான்
ஒவ்வொரு கனவையும் கடந்து கொண்டிருக்கிறேன்
சூரியன் விழிகளில் இறங்கும் நேரங்களில்
மின்கம்பியில் இருவாச்சி ஒன்று சங்கீதம்
பாடிக் கொண்டிருக்கிறது
தூரத்து மேகங்கள் கருமைகளை அணிந்து
யாரையோ குளிர்விக்க வேக வேகமாய் ஓடிக் கொண்டிருக்க
என் கனவுகளின் ஒவ்வொரு மூலைகளிலும்
பெய்யாத மழை ஒன்றுக்காக குடைகளை
விரித்திருக்கிறேன்
இடிகளில் மிரளாதிருக்க
ஒலிபுகா தட்டைகளில் என் அறைகளை அமைத்திருக்கிறேன்
வாசலுக்கு வெளியே யாரோ சிரிப்பது தெரிகிறது
அது யாராரோ என விரிந்து கொண்டே போகிறது
என் கைரேகைக்குள் தேவனையும் குதிரையும் பார்த்தவன்
இப்போதும் யாருக்கோ கதை கூறிக் கொண்டிருக்கலாம்
17122018
============================================================
அறைகளுக்குள் சிறைகள்
===•••===•••===•••===
அறையின் மூலையில் கட்டி முடிக்கப்படாத
ஒரு சிலந்தி வலையினுள்
அடர்ந்த ஒரு வனம் சிக்கிக் கிடக்கிறது
ஒவ்வொரு முறையும் வலைபின்னும் அந்தச் சிலந்தி
வனங்களின் அடர்த்திகளில் இழைகளைத்
தொலைத்துவிட்டதாய்த் தேடிக் கொண்டிருக்கிறது
வனங்களுக்குள் பதுங்கியிருக்கும் ஏதாவது ஒரு புலியிடம் தன்னிழைகள் சிக்கியிருப்பதாக
இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது சிலந்தி
வலைகளுக்குள் புகுந்து வரும் பூச்சிகளைத்
தின்பதற்குத் துணிச்சலின்றி
சுவர்களில் நகர்ந்து கொண்டிருக்கும் பல்லிகளைத் துரத்தியவாறே
கடும்பசியில் நாளையே இறந்து போகலாம் அது
பல்லிகளுக்குச் சிலந்தி இரையாகுமா என
என்னைக் கேட்காதீர்கள்
எறும்புகள்கூட யானைகளைத் தின்னலாம்
யார் கண்டது
17122018
=============================================================
#மனதிற்கு வெளியே ஒரு காதல்
===•••===•••===•••===•••==
இப்பொழுதும் ஓர் அலை
காலைத் தழுவிச் செல்கிறது
தூரத்தில்
கரையோரத்தில் கழட்டி வைத்த மனதை
எட்டிப் பார்க்கிறேன்
ஒரு வெறுப்புணர்ச்சியில் முகம் திருப்பிக் கொள்கிறது
வழக்கம்தானே..
மனதிற்கு வெளியே நடக்க எத்தனிக்கும் போதெல்லாம்
அறிவும் மனதும் கயிறிழுக்கத் தொடங்குகின்றன
மணல்களுக்குள் அழுந்திப் போயிருக்கும்
பாதங்கள்போல் உன் தொடுதல்கள்
அலைகள் உரசும் போதெல்லாம்
கொஞ்சம் குறுகிப் போகிறேன்
பாதங்களை இழுத்திழுத்து
தூரங்களைத் தொடும் நேரங்களில்
துணிச்சலின்றி துவண்டு விழுகிறேன்
ஒரு
நக்கல் சிரிப்புடன் கரைகளில் நீ..
மீண்டும் உன்னை
அணிந்து கொண்டுதான் நடக்க வேண்டும்
என்னை மறந்து!!
14122018
==========================================================
==•••===•••===••
நேற்றிரவும்
என்னைக் கடத்திக் கொண்டு போயிருந்தாய்
நீ
அரவமற்ற ஒரு கானகத்தில்
வெளிச்சங்களிடையே என்னைத் தேடினேன்
கிளையொன்றின் உச்சாணியில் அமர்ந்தவாறே
முறுவல்களை எண்ணிக் கொண்டிருந்தாய் நீ
இரவு மிகவும் கொடியது என
எப்போதோ கூறியிருந்ததை
கொஞ்சங் கொஞ்சமாக அரங்கேற்றிக் கொண்டிருந்தாய்
கைகோர்த்து மறித்துக் கொண்டிருந்த
அடர் இலைகளினூடே
நிலவு துப்பிய வெளிச்சத்தில்
விடியல் அச்சுறுத்திக் கொண்டே இருக்க
மெல்ல மெல்ல
நீ இறங்கி வருவது தெரிகிறது
பளுப்புநிற உறைகளிலிருந்து
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன
கையொப்பங்களுக்காக காத்திருக்கும் ஆவணங்கள்
போர்வைகளுக்குள் பதுங்கிக் கொண்டு
உன் கடத்தல்களுக்குள்
சுகமாகிப் போகிறேன் இன்றும்!
#09122018
=============================================================
மனிதமற்ற நிர்வாணம்
==••==••==••==••=
இதுதான் வீரமென்கிறாய் நீ
ஒரு பெருங்கூட்டத்துள்
மதமோ இனமோ மொழியோ
ஏதோவொரு முகமூடியணிந்து
கூட்டத்தோடு அதற்கேற்ப சட்டைகளுடன்
அமைதிப் பேரணியென
ஆரவாரிப்பதோடு சில மணி நேரங்களில்
அடங்கிப் போகிறாய்
கூட்டங்களுக்கு வெளியே நிற்பவர்கள்
உனக்குக் கோழைகளாய்த் தெரிகிறார்கள்
உனக்குச் சூடேற்ற
காதுகளில் வீசப்படும் உரைகளில்
உறைகளில் பதுங்கியிருக்கும் வன்மங்களைத் தேடுகிறாய்
உன் மூளையை நன்றாகவே வண்ணப்படுத்தியிருக்கின்றன
நீ ஏந்தியிருக்கும் கொடிகள்
ஒரு தனி மனித ஆணவத்தின்
கொம்புகளில் தொங்கவிடப் பட்டிருக்கின்றன
உன் கோவணத் துணிகள்
நிர்வாணமென்பது ஆடைகளின்றி இருப்பது மட்டுமல்ல
#08122018
===========================================================
எப்போதாவது
கடந்த கால வீடுகளைக்
கடக்கும் போதெல்லாம்
ஜன்னல் கம்பிகளின் தேய்மானங்களில்
உன் முகம் வந்து மறைவதை
மறக்கவே முடியவில்லை எப்பொழுதும்
உன் விரல்கள் தீண்டிய கம்பிகளில்
ஏதாவது ஒரு வார்த்தையின் எச்சம் மீந்திருப்பதிப்பதைச்
சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
இந்தப் பாதைகள்
============================================================
===============================================================
==============================================================
==••==••==••==••==••==
ஆற்றில் ஒரு காலும்
கரையிலொரு காலுமாய்
மனது கயிறிழுக்கப்பட்டிருக்கிறது
முதலைக்கு வாழ்க்கைப்படவென காத்திருந்த
மனிதங்களின் முகங்களெங்கும் பிழைக்குறிகள்..
ஒரு பாலம் வேண்டி விண்ணப்பம் இட்டவன்
பாவங்கள் சுமந்தவனாய்
பிழைகுறிகளுக்குள் அடைபட்டிருக்கிறான்
இனி யாருக்கு விண்ணப்பமிடுவதென்ற
போராட்டத்திலேயே பொழுதும் கழிய
வாழ்க்கையை எடுத்து வீசி விட்டு
நடக்கத் தோன்றுகிறது
ஒரு சராசரி மனிதன்போல்....
எனக்காக கை உயர்த்தியவர்களையும்
பதாகைகள் ஏந்தியோரையும்
ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறேன்
பயணங்கள் எப்போதும் ஒரே மாதிரிதான்
நிறுத்தங்களில் இறங்கியவர்கள் மறந்ததுபோல் இல்லை பாதைகள்
================================================
============================================================
கோரம் மாறா தீ
==••==••==••==
அதன் கோரப்பற்களில்
இன்னும் குருதி வழிந்தபடியே இருக்கிறது
மனிதம் தின்ற களிப்பில்
சேற்றுக்குள் குளிக்கின்றன இதயங்கள்
நெறிகளில் வெறி பூசிக்கொண்டு
குரல்வளைகளைத் தேடித் திரிகின்றன
வேதங்கள்
சந்தர்ப்பவாதிகளின் கையில் எரிதிராவகங்கள்
உணர்ச்சிகளில் கொஞ்சங் கொஞ்சமாக ஊற்றி
ஊருக்குத் தீ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இதற்கு முன் எதையுமே கிழிக்காத் தலைவர்கள்
ஏடுகளைத் தங்கள் வாதங்களில் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்
தனிமனித ஆணவங்களில் கிழிந்து போயிருக்கும்
அத்துணைப் புரிந்துணர்வுகளையும் பார்த்தவாறே........பார்த்த
.......................... வாறே......
அதோ...
வெள்ளைத் துணியொன்றை ஏந்தியவாறு
வேலியோரம் நிற்கின்றாரே...
அவர்தான் கடவுளாக இருக்க வேண்டும்
29112018
==========================================================
===•••===
மௌனிக் கிடக்கிறது மண்டபம்
தெறித்து விழும் வார்த்தைகளூடே
தொடுதிரைகளில் களவு போயிருக்கின்றன செவிகள்
ஓரிரு உள்ளங்கை உரசல்களின்
மெல்லிய சத்தத்தில் இளைப்பாறுகிறது உரை
- 0 -
மின்னல் வேகத்தில் சாலை கடக்கும் வாகனங்களில்
விழிகளை வைத்தவாறே கடக்கத் துடிக்கும் கால்கள்
விரியும் சப்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்
செல்கை விளக்குகளின் பச்சைகளில்
குருடனொருவனின் கைத்தடி மௌனியாய்
- 1 -
தட்டுகளின் ஓசையில் தடுமாறுகின்றன உணவுகள்
களித்து அடங்கும் கூட்ட நடுவே
மீதங்கள் கழிவுகளாய் வீசப்படும் நேரம்
தொட்டிகளின் ஓரங்களில் அடங்காதொரு பசி
நேற்றும் இன்றும் நாளையுமாய்
இருள் போர்த்தி நகர
நாயொன்று தொங்கிய நாக்குடன் மௌனியாய்
- 0 -
உச்சிக் காம்பில் அமரும் பறவைகள் சிலவற்றின்
ஏக்கங்களை நிராகரித்தவாறே
வெம்பிப் போன கனியொன்று
மரம் விட்டு இறங்குகிறது மௌனியாகவே
=================================================
===========================================================
============================================================
===•••===•••===•••===••
இன்று
...ஒரு மரணத்தைக் கற்றுக் கொண்டேன்
நேற்றுவரை இலைகளில் மேய்ந்திருந்த புழுவொன்று
பட்டாம் பூச்சியாய் பறந்து செல்கையில்
பிறப்பின் மறுபக்கம் மறைந்திருந்த மரணம்
கிளைகளின் இலைகளனைத்தையும் தின்றுவிட்டுப் போயிருந்தது
இன்று
....ஒரு பிறப்பையும் அறிந்து கொண்டேன்
தளிர்த்துப் பரவும் இலைகளினூடே
சில கூட்டுப் புழுக்கள் நாளையை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்க
இறப்பையும் பிறப்பையும் இழுத்துக் கொண்டோடும்
ஒரு சராசரி மனிதனாய் ...
உச்சாணிக் கொம்பொன்றில் அமர்ந்து
கைகளையும் கால்களையும் நீட்டி
வெளிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
============================================================
========================================================
என் வாழ்க்கை பயணங்கள் நிறைந்தது
இறங்கியவர்கள் ஏறியவர்களைவிட
இறக்கி விட்டோரின் சுவடுகள்தாம்
ஆழங்களில் இறங்கியிருக்கின்றன
கிளை விட்டேறும் பறவைகள்போல
வெம்பிய கனிகளை மட்டும்
என் வேர்களில் பரப்பியிருக்கிறார்கள்
விண்ணைத் தொடத் துடிக்கும் கிளைகளாய்
தூரங்களில் பயணங்களை விடுகிறேன்
அவ்வப்போது மேக மிதப்புகளில்
கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்
என் நிறுத்தங்களை நான் அறியேன்
எங்கே ஒரு வளைவிலோ
ஏதாவதொரு சாலை வட்டத்திலோ
என் பயணத்தை முடித்துக் கொள்ளலாம்
அஞ்சாதீர்கள்
என் பயணத்தைத் தொடரும் சிரமத்தை
உங்கள் மேல் திணிக்க மாட்டேன்
அவை உங்கள் பாதை... பயணம்
==========================================================
தீப்பிடித்தும் பிடிக்கா வண்ணம்
கற்களை உரசுகிறாய்
கண்கள் உரசா பொழுதுகளில்
==========================================================
============================================================
===•••===•••===•••===•••===••
ஒரு வடை
ஒரு பாட்டி
ஒரு நரி...
என்ற கதையின் காக்கையல்ல இது
ஒரே பாதையின்
பயணிகளும் வழிப்போக்கர்களும்
அமர்ந்து கதைக்க ஆலொன்று எடுத்ததாம் அது
மலைவாழ் காக்கைகள்
மடுவாழ் காக்கைகள்
கோபுரக் காக்கைகள்
பட்டணக் காக்கைகள்
கிராமியக் காக்கைகள்
பறக்கப் பழகும் காக்கைகள்
உலகம் சுற்றிய காக்கைகளென
கதைகள் பரிமாறும் ஆலமரமாய் ...
கதைகள் கதைத்ததில்
காக்கைகளுக்குள் கலவரம் வர
ஒவ்வொரு காக்கையும் தன்வீரம் பேச
கருத்துகள் கழுத்தறுபட்டு
கிளைகளுக்குள் விழுந்தன கோடுகள்
ஆலெடுத்த காக்கை அமைதி காக்க
ஆரவாரித்த காக்கைகள்
ஆளுக்கொரு கிளை பிடிக்க
மரமாறத் தொடங்கின ஒன்றிரண்டு
வேர்களில் இறங்கும் விடமதைச்
சட்டென அகற்ற
ஒன்றிரண்டு காக்கைகள் துரத்தப்பட
படபடவென இறக்கையடித்தன..
இனி கதைப்பதிலும் கட்டுப்பாடுகளென
உளறத்தொடங்கிய காக்கைகள் நடுவில்
உச்சிதனில் கண்ணீர் மழையில்
நனையத் தொடங்கிய காக்கைதனை
உங்கள் பார்வை
கண்டிப்பாக நழுவ விட்டிருக்கும்
நரியின்றி ...
பாட்டியின்றி..
வடையின்றி..
மீண்டும் ஏமாற்றத்தில்!!!
==========================================================
============================================================
========================================================
தலைவிரிக்கோலமாய் அலைந்து கொண்டிருக்கின்றன
என் கனவுகள்
கொஞ்சங் கொஞ்சமாக என் உறக்கங்களை
அவற்றிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
சில வேளைகளில் அடங்காப் பசிகளில்
அவை என்னையே தின்னத் தொடங்குகையில்
தூரமறியா தேசமொன்றில் உயிருக்காக அலைந்து கொண்டிருக்கிறேன்
தத்துவம் என்ற பெயரில் கிறுக்கன் எவனோ
கிறுக்கிக் கொடுத்ததை
இன்னொரு கிறுக்கன் எனக்குப் பாடமாக எடுக்கிறான்
என் பசியையைப் பற்றியோ
தின்று கொழுத்த கனவுகள் பற்றியோ
கைகள் விரித்து என் முறுவலை வைக்கிறேன்
உச்சிக் கிளையொன்றில் அமர்ந்து கொண்டு
பருந்தொன்று என்னைப் பார்த்தவாறே இருக்கிறது
பசியின் வகையறிந்து!
===========================================================
===========================================================
===========================================================
கீழ்க்காணும் 5 கவிதைகள் நீர்க்கோடு இணைய இதழில் இடம் பெற்றவை.
புறாக்கூண்டுகள்
இறக்கைகள் விரிய படபடத்து
தனக்கான அறைக்குள் நுழைந்து கொண்டது புறா
வைத்த கண் வாங்காமல்
தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களையோ
வலைவீசிக் காத்திருக்கும் வஞ்சகர்களையோ
அதி திரும்பிப் பார்த்ததாகத் தெரியவில்லை
காலை சிறகு விரிப்பில்
அதன் பயணத்தைத் தொடர்ந்ததில்லை
இதுவரை நானும்
இரைத்து வைத்திருக்கும் இரைகளை
அவ்வப்போது தொத்தித் தின்றுவிட்டு
தன் கூண்டுக்குள் பத்திரமாய் அடைந்து கொள்ளும்
கூண்டுக்குள் இருக்கும் அதன் விரிப்புகள் குறித்து
எனக்கேதும் கவலையில்லை
ஒருநாள் விளக்குக் கம்பம் ஒன்றில் இறந்து
அநாதையாக அது விழுந்ததாக
நண்பன் ஒருவன் கூறிய போது
அதற்காக கொஞ்சம் வலித்தது உள்ளம்
=======================================================
நான் எனும் கதைசொல்லி
==•==••==•••==••==••=
அப்பா கூறும் கதைகளுக்குள்
எப்படியும் ஒரு பூதம் நுழைந்துவிடும்
எனக் கதை சொல்லத் தொடங்கினேன்
மாதக் கணக்கில் பூதங்களைக் கோர்த்துக்
கதை சொல்லும் பாணியில்
அப்பாவை மிஞ்ச முடியவில்லை என்னால்
முதல்நாள் மரத்தின் மீதிருக்கும் பூதம்
மறுநாள்
பாழைடந்த வீட்டினுள் மிரட்டும்
ஏதாவது பூவைத் தேடி வனம் ஏவும்
அரசகுமாரனுக்கு
பூதங்களும் மந்திரக் கிழவிகளும்
கதைகளை ஆண்டுக்கணக்கில் இழுத்த போதும்
எந்தப் பூதமும்
வீடுகளை ஆக்ரமிப்புச் செய்ததாய்
அப்பா கூறியதாய் நினைவேதுமில்லை
இப்போதெல்லாம்
மகளிடம் கதை சொல்லத் துவங்கும் போதே
வண்ணத்திரைகளிலும் ஒளிகளிலும்
பூதங்கள் சூழ்ந்து கொள்ள
சோபாவிலேயே தூங்கி விடுகிறாள் மகள்
*முனியாண்டி ராஜ்
============================================================
==========================================================
விழுந்தெழும் மழைத்துளிகளை
ஓடியோடிப் பிடித்துக் கொண்டிருந்தாள் மேகா
விரலிடுக்கில் வழிந்தொழுகும் மழைநீரை மட்டும்
மௌனமாகவே கடத்திக் கொண்டிருந்தாள்
அவளின் மழைக்கனவுகள்
எப்பொழுதோ உடைக்கப்பட்டிருந்தன
இன்றும்கூட
ஏதாவது காரின் கண்ணாடி வழியோ
கண்ணாடி மாளிகைகளின் வழியோ
நாகங்களாய் நெளியும் மழையோடைகளைக் கண்டால்
கொஞ்சம் நிதானித்துக் கொள்ளுங்கள்
உங்கள் அருகாமையில் யாராவது ஒரு மேகா
அவற்றை ஓடிப் பிடிக்க வரலாம்
111018
------------------------------------------------------------------------------------------------
===•••===•••===•••••
எல்லோரும் மழையைப் பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..
எந்த மழையைப் பற்றி எழுதுவது
வானவில் நனைந்த முதல் மழை ஒன்றில்
உதடுகள் ஈரம் தொலைந்ததையா
குடைகளுக்குள் ஒளிந்தும்
கூப்பிடு தூரத்தில் நழுவிய வார்த்தைகளையா
முகத்தில் பாய்ந்த மழைத்துளிகளில்
இடைகளில் பரவிய உன் விரல்களையா
வெள்ளம் பயந்து உயரங்களில் ஒதுங்கியவற்றில்
நான் மட்டும் மிதந்து சென்றதையா
ஏதோ ஒரு மழை ... விடு ..
அவ்வப்போது நனைத்துக் கொண்டே இருக்கிறது
============================================================
============================================================
===•••===•••===••=
குறுஞ்செயலிகளுக்குள் காணாமல் போன எனக்கு
வெகுநாளைக்குப் பின்
ஒரு கடிதம் வந்திருந்தது தபாலில்
உறையைப் பிரிக்கும் முன்பே
குறுந்தகவல் ஒன்றில் விரல்கள் களவாகியிருந்தன
கைப்பேசிகளுக்குள் மறைந்திருந்த மனது
வலுக்கட்டாயமாக நிஜத்திற்கு இழுக்கப்பட்டது
வண்ணக் கடித உறையின் முகத்தினில் அழகாய் அமர்ந்திருந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி
பெட்டிகளுக்குள் அடங்காமல் திமிறிய கடிதத்தில்
தபால் தலை மட்டும் தவறியிருந்தது
தவறிய அழைப்புகளில் இழந்த இரவுகள் போல்
#07102018
============================================================
==========================================================
==========================================================
==========================================================
நிரம்பிக் கிடக்கின்றன குப்பைகள்
சமுதாய வெளியெங்கும்
பெருக்கித் பெருக்கித் தள்ள
பெருகிக் கொண்டே இருக்கின்றன
உன்னை நானும் என்னை நீயும்
ஒவ்வொருவர் விரலும் இன்னொருவரைச் சுட்டி
எரித்துத் தள்ளுவதுத் தவிர
வேறு வழியில்லை எனும்போது
சட்டங்கள்
சற்று நிமிர்ந்து நடந்தால் போதும்
============================================================
இந்த நாற்காலிகள் இருக்கின்றனவே
பொல்லாதவை
அமர்ந்தவுடனேயே
பிட்டம் கனத்து அழுந்தி விடுகின்றன
தலைக்கேறும் கனம்கூட
தலைப்பாகையாய் மகுடம் தரிக்கின்றன
சிவப்புத் தூவல்கள் தரித்த விரல்களில்
கறுப்பு வண்ணங்களைப் போர்த்துகின்றன
முதல்நாள்வரை தோளணைத்து பழகியவனையும்
மறுநிமிடம் வாசலில் நிறுத்துகின்றன
இந்த நாற்காலிகள் பொல்லாதவை
நான்கு கால்களின் மர்மங்களை
நாலா திசைகளிலும் புதைக்கின்றன
புன்னகைகளை உதடுகளில் அணிவித்து
உள்ளங்களில் புகைகள் கக்குகின்றன
சுவர்களின் அடக்கங்களில் புயல்களையும்
காற்றின் வெளிகளில் தென்றல்களையும்
சொல்லித் தருகின்றன
மனிதர்கள் நல்லவர்கள்தாம் பாவம்
இந்த
நாற்காலிகள்தாம் பொல்லாதவை
#01102018
============================================================
=========================================================
=========================================================
===•••===•••===•••==
கவிஞனென என்மீதும்
மகுடம் ஏதும் ஏற்றாதீர்கள்
கவனம்
உங்கள் கவிதைகளைக்கூட
என் ‘தலைகனம்’ நிராகரிக்கக்கூடும்
குப்பைகளென
என் இலக்கிய விமர்சனங்களில்
உங்கள்
எழுத்துப் பாதைகளில் குழி விழலாம்
நடக்க முயலும் வரிகளும்
முடமாகி மூச்சடைத்துப் போகலாம்
என் தலைகனங்களில்
கண்டிப்பாகப் பேசியே வேண்டும்
ஓர் எதிர்மறையிலேனும்
ஒற்றைப் பேனாவை
நெற்றியோரம் சாய்த்து வைத்து
சிந்திக்கும் பாவனைகளில்
உங்கள் விரல்கள்
ஒரு கவிதைக்குள்ளே நடுங்கும்
குரலுயர்த்தும் என்னிடம்
கூனிக்குறுகி நடக்க வேண்டாம்
உங்கள் இலக்கியம்
காலம் நிமிர்த்தி வைக்கும் முன்
என்னைக் கொன்று விடாதீர்கள்
கால்கனத்திலேயே
எப்படியோ சிரமப்பட்டு நடந்து விடுகிறேன்
#30092018
============================================================
========================================================
===•••===•••=
பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளாதீர்கள்
கொடிகளின் வண்ணங்களில்
நீங்கள் வேண்டுமானால்
கட்சியைப் பார்த்துக் கொள்ளுங்கள்
தலைவன் வீசியெறியும் துண்டுகளில்
நாக்குச் சுவை மட்டும் மோதும் எங்களுக்கு
ஜனநாயகத்தை ஈன்றதாக
யாரை வேண்டுமானாலும் நீங்கள் கொண்டாடுங்கள்
கிழிந்து நாறாய்த் தொங்கும் கொள்கைகளில்
வேண்டுமட்டும் பறித்துக் கொள்கிறோம்
கனிகளை மட்டுமல்ல காய்களையும்
எழுத்துகளில் மிளிரும் அரசியல்களைப் படித்து
உங்கள் உள்ளங்களை நீங்களே சொறிந்து கொள்ளுங்கள்
எங்களுக்கு தேன் தடவும் கூண்டுகளிலேயே
முகாம்களை அமைக்கிறோம் நாங்கள்
நாற்காலிகளை நிரப்பும் ஒவ்வொருவனும்
உங்களுக்குக் கைதட்ட வேண்டுமென்பதோடு
பார்வைகளை நிறுத்திக் கொள்ளுங்கள்
ஓட்டுப் பெட்டிகள் எண்ணப்படும்போது
அரிவாள்களோடு நாங்கள் பேசிக் கொள்கிறோம்
கொடியென்பது உங்களுக்கு தலைப்பாகையாக இருக்கட்டும்
எங்களுக்கு அது கோவணம்தான் இப்போதும்
#22092018
===========================================================
காமம் தூக்கிய காதலொன்றில்
என் எல்லைகள் சற்று உடைந்திருந்தன
விழிகள் நீண்ட போது
உன் விரல்கள் அதைத் துண்டித்திருக்கலாம்
விரகம் கலந்த பேச்சதனை
நீயும் கொஞ்சம் முறித்திருக்கலாம்
பிழையெனப் பொருத்தருள்வாய்
மதுவாய் கலந்த உன் அழைப்பினில்
மனது தலைகீழாய் தடம் புரள
கடிவாளம் அறுத்தேறிய கவிதை ஒன்றை
வன்மமாய் நீ கிழிந்தெறிந்திருக்க வேண்டும்
வார்த்தைகளை வரைய விட்டு
வரிகளில் கோபங்கள் கொள்கிறாய்
பிழையெனப் பொருத்தருள்வாய்
மௌனம் விரித்த வலைதனில்
மேகமிழந்த வானமாய்
உன் உதடுகளின் சோம்பல்களில்
இன்னும் வடியாமலேயே இருக்கிறது
காட்டாற்று வெள்ளமாய்
ஒரு கரைகடந்த காதல்
#22082018
========================================================
========================================================
==================================================
==••==
கடற்கோள் தூக்கி வீசியதில்
காணாமல் போன கிராமங்களில்
ஏதோ ஒரு கூரையின் கீழ்
கடவுள் ஒளிந்திருப்பதாக கூறினார்கள்
சூறாவளிக்குள் பறந்து விழுந்த
பாமரன்களின் கையிடுக்கிலும்
வேர் பெயர்ந்த மரங்களின் மடிகளிலும்
கடவுளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்
கரைகளை உடைத்து
வீடுகளில் குதியாட்டமிட்ட வெள்ளங்களிலும்
மணல் திருட்டுகளில்
மௌனமாகிப் போன ஓடைகளிலும்
கடவுளின் வாசம் தேடி முகர்ந்தார்கள்
தீப்பிடித்த வனத்தின் கோபங்கள்
கிராம முதுகினில் படர
கருகிய உடல்களிலும் வடிந்த உயிர்களிலும்
இறைவன் குருடாகி விட்டதாக
வெறித்தனத்தின் முகங்களில்
எச்சில் உமிழ்ந்து நடந்தனர்
தீவிரங்களின் துப்பாக்கிகளில்
கடவுள் பெயராலேயே
கண்ணாடிகளாய் தெறித்த இதயங்களில்
ஒவ்வொருவனும்
ஒரு கடவுளை அழைத்துக் கொண்டிருக்க
ஒரு பார்வையாளனாய் மனதோரம்
நடந்து கொண்டிருந்த கடவுளை
யாரும் கண்டு கொள்ளவேயில்லை
கடைசி வரை...
19092018
===========================================================
===•••===•••===•••===•••===
நீண்டகன்ற ஒரு வலைப்பின்னலிலிருந்து
என்னை விடுவித்துக் கொண்டோடுகிறேன்
சன்னஞ் சன்னமாய் மறைந்து போய்
மேகங்களுக்குள் காணாமல் போகிறேன்
விரல்கள் விரவித் திரிந்த தொடுதிரைகள்
கேட்பாரற்று கிடக்கின்றன
அலைந்து திரிந்து பொழுதைத் தின்ற
கடிகார முள்களின் சிறைகள்
உடைக்கப்பட்டதுபோல் எண்கள்
இடம் கழண்டு விழுகின்றன
நேரமும் பொழுதும் உணரா ஒரு
பயணத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறது
சலனமற்ற நீர்நிலை ஓரத்தில் பறவையாய்
சுற்றிலும் நீளும் கரங்களில்
உதடுகள் ஒரு புன்னகையாய் பேசிவிட்டு
நகர்ந்தோடுகின்றன மேகங்களுக்குள்
மனிதர்களின் முகங்களில் ஏதோவொன்று
களவாடப்பட்டதுபோல் உணர்கையில்
மரத்தின் உச்சிகளில் இளஞ்பச்சைகளாய்
அசைந்தாடும் இலைகளும்
மேகக்கூட்டம் விட்டகலும் இறக்கைகளும்..
வலைப்பின்னல்களை நோக்கி
விழுந்து கொண்டே வருகிறேன்
தூண்டில் நோக்கும் மீனாய்
==========================================================
இதயம் கொஞ்சம் கழற்றி ...
===•••===•••==•••===••
மண்பிடித்த முதல்மனிதன்
யாரென்று சொல் தோழா..
நிலத்திற்கு எல்லையிட்டு
மொழியாலும் இனத்தாலும்
மனிதம் பெயர்த்த
முதல்கயவன் யாரென்று பார்
வாள்போர்...
புரவிப்போர்...
யானைப்போர்...
என
மனிதனே மனிதன் மேய்ந்த
துரோக மூலம் எதுவென்று கேள்
போர்களின் அந்த மூலவேரை
ஆணிவேராக்கிய அயோக்கியன்
எங்கேவென்று தேடு...
பொறியை அணைக்க மறுத்த
அந்த மந்தைகள்
எங்கே புதையுண்டன எனப்பார்த்து வா..
வலிமையென்பது வாள்வீச்சிலென
மீசை முறுக்கிய அந்த
முதல் கோழையாவது யாரெனக் கூறு
கிளைமொழிகள் கொலைமொழியாகியது
எப்போது எனச் சொல்....
ஆறுகளில் அணைகட்டி
கொலைவெறிக் கூத்தாடும் கூட்டம்
எந்த மழையிடம் கடன்வாங்கியது
நீரை...பார்..
இயற்கை மேய்ந்து செயற்கை செய்யும்
அந்த நுட்பம் சொன்னவன் யார்
கேள் தோழா கேள்
எந்த நெருப்பில் யார் வெந்தால் என்ன
இதயம் கருகும் மானிடங்களுக்கு..!!!
மனிதம் மிதிபட பாயும்
குருதிவெள்ளத்தில் கைநனைக்க
இதோ.... நானும்
இதயம் கழட்டிவிட்டு வருகிறேன் ..
குடிசை வீடு
எங்கும் ஒழுகி வழிகிறது
மனங்களில் அன்பு
.................................................................
மாநகரப் பரபரப்பின்
நடைபாதையெங்கும் படுத்திருக்கிறது
உள்ளங்களின் வெறுமை
...................................................................
சீறிப் பாயும் உந்துகளின்
பின்னிருக்கைகள் காலியாகவே இருக்கின்றன
ஒற்றை மனிதனைச் சுமந்து
....................................................................
இலைகளில் இறங்கி வழியும்
நீர்துளிகளில் சரிந்து விழுகிறது
வண்ணத்துப்பூச்சியின் கூடு
...................................................................
தாகம் தீர்த்ததும்
தூக்கி வீசிவிட்டுப் போகிறான்
கனிம நீர்ப்புட்டி
=========================================================
=======================================================
===•••===•••===•••===•••===•••
இப்பொழுதுதான் ஒரு கவிதையைப்
படித்து முடித்தேன்
இரவு விழுங்கிய ஓர் அமாவாசையில்
நட்சத்திரங்கள் கண்மூடி மௌனித்திருப்பதுபோல்
அவள் கண்மூடி படுத்திருந்தாள்
ஓர் உறக்கமற்று!
தோட்டத்தில் எல்லாப் பூக்களும்
அழகாகத்தான் இருந்தன அப்படியே
தலைகோதும் தென்றல்தான்
கடைசிவரை எட்டிப்பார்க்கவே இல்லை
தலைவன் நிலவின் கீற்றொன்றைப் பிடித்து
இறங்கி வருவதாகத்தான் சொல்லியிருந்தான்
நிலவற்ற இரவில் கீற்றுக்கவன் எங்கே போவான்
பகல் முழுவதும் வெள்ளைக் குதிரையேறி
சிரசுகளைக் கொய்தவன்தான்
இவள் சிந்தனைகளையும் கொய்திருந்தான்
மொத்தமாக...
வழக்கமான காதலும் காமமும் வீரமும்
கலந்த கதையெனில் ஏமாந்து போவீர்கள்
அவளின் கவிதைகளில் பல சமயங்களில்
அவளே திசைமாறிப் போயிருந்தாள்
போருக்கவன் போன நாள்களில்
அவள் காமமும் கொஞ்சம் வழிமாற முயன்றதுதான்
ஏதாவது ஒரு வாளின் நுனியில்
அவனுயிர் பணயம் வைக்குங்கால்
இவள் உயிரில் ஏகாந்த வாள்கள்
உள்ளம்வரை பாய்ந்து பீச்சின குருதியை
தடுமாறிய பின் தன்னிலை உணர்ந்தாள்
போருக்குப் போனவனோ
பிணங்களோடு பெண்மைகளையும் சுவைத்தான்
பல இரவுகளைப் பற்றிப்பற்றி அதைப்பற்றி
அவன் கவலைபட்டதே இல்லை
இல்லம் சிறையான அவளுக்கு
இளமை விரித்த வலை கொடுமையானது
வழக்கமான காதலும் காமமும் வீரமும்
கலந்த கதையெனில் ஏமாந்து போவீர்கள்
ஏனெனில் இந்தக் கதைகளில்
நானும் நீங்களும்கூட இருந்தோம்
அவனைப் போலவும் அவளைப் போலவும்!
(ஒரு கவிதைக்கதை எழுதும் முயற்சியின் தொடக்க நிலை)
=======================================================
தோற்றுப்போனவர்களின்_கதை
===•••===•••===•••===•••=
பச்சை நிறக் கூந்தலை
விரித்துப் போட்டுக்கொண்டு படுத்திருந்தது
அந்தத் தேவதை
வனமென்று சொன்னார்கள்
நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாய்தான்
இருந்தது
திசை மாறி பாதை இழந்தவர்களும்
பாதை தேடி திசை மறந்தவர்களும்
கூறிக் கூறி காதில் ஏற்றிய பேய்க்கதைகள்
பயங்களை வாசல் எங்கும் விதைத்திருந்தன
எட்டிப் பார்க்க முயன்று தோற்றுப்போன
கதிர்களும் அச்சத்தை அதிகமாக்க
வனங்களில் காணாமல் போனவர்கள்
ஏதாவது ஒரு தேவதையிடம்தான்
தோற்றுப் போயிருக்க வேண்டும்
No comments:
Post a Comment