அந்தத் தேநீர்க் கடையில்
தினமும் கடப்பதுண்டு
ஒரு தேநீர் தோசையுடன்
தமிழ் நாளிதழ்களில்தான்
அவர் காலை உணவும்..
அவசரங்களில் கடக்கும் போதெல்லாம்
அவரை நான் பொருட்படுத்துவதில்லை
ஓய்வு கொடுக்கும் நேரங்களில்
அவரின் இலவச அறிவுரைகளில்
செவி நுழைப்பதும் உண்டு
மொழியுணர்விலும் இனவுணர்விலும்
கடமை மறந்திருக்கிறேன் பலநேரம்
மொழியைப் பசியாறிக் கொண்டே..
சில தமிழ்ப்புத்தக வெளியீடுகளில்
இலக்கிய மழைகளில்
மெய்மறந்தும் போயிருக்கிறேன்..
மொழிக்காக உதிரம் கொதிக்கும்
வார்த்தைகளில்
நானும் சூடேறியிருக்கிறேன் சிலசமயம்
தமிழுக்கொன்று உண்டேயெனில்
உடல் எரிப்பேனென்ற என்ற
உரைதனில் உள்ளம் கழன்றிருக்கிறேன்..
மழை நிறுத்திய ஒரு காலைப்பொழுதில்
தேநீர் கடை நிழலில்
பதுங்கிப்போய் அமர்ந்திருந்தேன்
மழை பயந்து!
'கிரேண்ட்பா.... கம்' என்ற
சொற்களில் தமிழ் சிதறியது
வேற்றுமொழி பள்ளிச் சின்னம்
சட்டையில் சிரித்தது..
'கமிங் கமிங்' என்ற சொல்உதிர்த்து
பேரனுடன்
குடைக்குள் ஒளிந்து கொள்ளும்
முயற்சிகளில்
மழை அவரை நனைக்காமல்
விடவில்லை ...!!!
#முனியாண்டி_ராஜ்.
No comments:
Post a Comment