Saturday, May 6, 2017

தொலைதல்


அவனின் நிறம்


அவனின் நிறம்
===•••===•••
சரிந்த விழுந்திருந்த தேகங்களிலும்
ஆறாய் பெருகிப் பாய்ந்திருந்த
குருதிகளிலும்
எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்
இரத்தம் தோய்ந்த
கட்டைகள் ஏந்திய கைகளும்
சகதியில் விழுந்து கிடந்தன

வெவ்வேறான சின்னங்களில்
போர்த்திக் கொண்டவர்கள்தான்
நான்கு திசைகளிலிருந்தும்
மையம் நோக்கி
நகர்ந்து கொண்டிருந்தார்கள்
பசிக்கான வேட்டைகளில்

எரிக்கப்பட்ட குடிசைகளும்
எரியூட்டப்பட்ட மனிதங்களும்
இரவுகள் மட்டுமன்றி
பகல்களையும் ஒளிர்விக்கத் தவறியதால்
வாகனங்கள் கொழுத்தியும்
தேடல்களைத் துரிதமாக்கினர்

வேறுபட்ட மந்திரங்களில்
தங்கள் தந்திரங்கள் மறைத்தே
வேத நூல்களென சிரம் வைத்தே
தேடிக் கொண்டே இருந்தார்கள்
தீவிரத்தில் எதையோ
தங்களுக்கான நிறங்களை!

மனித வாடையே மீந்திருந்த
அந்தக் காட்டுக்குள்
மதமற்ற மிருகங்களோடு
சிரித்துப் பேசிய படியே
நடந்து கொண்டிருந்தான்...

நிறமற்ற அவன்!