Wednesday, September 14, 2016

காலணி கீழே உரிமைகள்


இங்கே அமர்ந்தும் நின்றும்
விருப்பப்படி தம்படம் 
எடுத்துக் கொள்வோம் ..

புதியதாய் முளைத்த பூங்காக்களின்
வனப்பில் சிரித்தபடியே
சுட்டுச் சுட்டுத் தள்ளுவோம்
புகைப்படங்களை ..
ஆண்டாண்டு காலமாய்
இருள் சூழ்ந்த பூமியின்
அண்மைய வெளிச்சங்களில்
நாமும் கொஞ்சம் கலப்போம்..
இரத்தங்களில் தோய்ந்த
சுற்றுலாத் தளங்களின் பரிணாமத்தில்
வரலாற்றை மறந்து
நாமும் சிரித்துக் களிப்போம்....
மனிதம் கேட்டுப் போராடிய
ஆயுதங்களின் மேல் நினைவுக்காய்
அழகாய் சாய்ந்து கொள்வோம்

எந்த இடிபாடுகளிலாவது
கொஞ்சம் தேடிப்பாருங்கள்..
உரிமைக் குரலின்
சிதறிய உதிரங்கள்
சுவரோடு காய்ந்து போயிருக்கும் ..
ஏதாவது ஒரு காலணியின் கீழ்
அவன் எலும்பின் எச்சங்கள்
மீந்திருக்கும்
முடிந்தால்
கண்மூடி தியானியுங்கள் சிலநொடி
இனத்திற்காக உயிரிழந்தவனின்
ஆன்மா
கொஞ்சமாவது நிம்மதி பெறட்டும்!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment