Wednesday, September 14, 2016

என் குருதியின் எச்சங்களுக்கு மட்டும் =====•••••=====••••=====••••


என் தட்டில்
கைவைக்காத வரை
அனைத்தும் நலமே..

என் வேட்டிக் கறைகளைப் பற்றி
நீ கவலைப்படாத வரை
உன் கிழிசல்களை
நான் பேசப்போவதில்லை..
என் குடைகளுக்குள்
நீ ஒதுங்காதவரை
எவர் நனைதலைப் பற்றியும்
நான் விசனப்படப் போவதில்லை
என் கண்முன்
குருதி மழையை நீ
இறக்கிக் காட்டலாம்
வாழைத் தண்டாய் என்முன்
யார் வேண்டுமானாலும் சாயலாம்
என்னை
அவை உசுப்பப் போவதில்லை
என் பாதைகளில்
குழிவிழா வரை
அவனவன் பாதைகளும் நன்றே

சாட்சிக் கூண்டுக்குள் ஏறி
நான்
சிக்கிக் கொள்வதிலேயோ
குரலெழுப்பி என் குரல்களைக்
கிழித்துக் கொள்வதிலேயே
நான் உடன்படுவதில்லை ..
எனக்குள்ளும் கருணை உண்டு
ஓர் இரக்கப் பார்வை வரை ..
என் உறவுக்குருதிகள்
என்மேல் தெறித்து விழும்வரை

யார் எப்படிப் போனால்
எனக்கென்ன...


#முனியாண்டி_ராஜ்.

தோழமையின் கறுப்புப் பக்கம்



தோளில் கைபோட்டவனின் விரல்
தொண்டைக் குழியில் இறங்கும்வரை..
தோழமையின் கறுப்புப் பக்கம் தெரியும்வரை...

வெள்ளைத்தாளின் முகங்களில் தெறித்தவை

எழுத்துக்கள் என்று ஏமாந்து
விழிகள் படிக்கும் தருணங்களில்
விஷப்பாம்பாய் பாய்ந்து
கொத்தும்வரை...

கைகுலுக்கல்களின் கரங்களில்
நட்பு பரிமாறும் நேரங்களில்
மோதிர விரலில் பதுங்கிப் பாயும்
நச்சு ஊசியின் வலியை உணரும்வரை..

எதுவுமே புரியவில்லை ...

நட்புகளின் மடிப்புகளில்
நயவஞ்சகமாய் பதுங்கியிருக்கும்
நாகங்களின் சீற்றம் தெரியும்வரை...

உன் சுயநல தண்டவாளத்தில்தான்
என்னோட நீ
பயணித்திருக்கிறாய் என்று!!!

#முனியாண்டி_ராஜ்.

ஓர் இறுதி மனிதனின் வாக்குமூலம்


ஓர் இறுதிமனிதனின்
வாக்குமூலமாக இது இருக்கலாம்
கல்கி அவதார முதல் மனிதனுக்காக

கொண்டு செல்லப்படும்
முதல் தகவலாகவும் அமையலாம்
அவதாரங்கள் மறந்து
அரிதாரங்களில் வாழும் மானுடங்களுக்கு
இது தெரியாமலேயே போகலாம்
குருஷேத்திரங்களின் போர்முனைகளில்
இது தொடங்கி இருக்கலாம்
ஆயுதம் மறந்த மனிதனின்
ஒரு சமாதானத் தூதாகவும்
இது ஆரம்பித்திருக்கலாம்..
மனிதம் புதைந்த ஒரு பெருவெளிக்குள்
கல்கியும் தனவதாரம் மறந்து
கொஞ்சம் கலிக்குள்
முகம் நுழைத்துப் பார்க்கலாம் ..

தூக்கிவிட வந்த வெள்ளைக்காகிதங்கள்
.... தூக்குக்கயிறுகள் ஆன இடத்திலா
அரசாட்சிகள் கவிழ்த்து
.... மக்களாட்சி முகிழ்த்த காரணங்களிலா
சுயவுடைமைகளில் களவுபோன
.... பொதுவுடைமைக் கொள்கைகளிலா
அறிவியலின் அசுர வளர்ச்சியில்
..... அறிவுகள் களவான பொழுதுகளிலா
பணங்கள் தேடி
.... மிருதங்களான மனிதங்களிலா
குடும்பங்கள் கலைந்து
.... குட்டித்தீவுகள் மிதந்ததாலா
எதுவோவென
கொஞ்சம் தடுமாறும் நேரம்
யார் கண்டது ...

கலியுகம் தொடருமென...


#முனியாண்டி_ராஜ்.

இப்படித்தான் இருக்கிறது வருகை ...


பிதற்றல் என்று சொல்லியே
ஓர் ஏளனப் புன்னகையில்
கடந்தே செல்கிறாய்..

என் சொல்வேன்
மழை ஓய்ந்த தூவானங்களில்கூட
நீ மட்டும்
நீர்த்துளிகளாய் நடனமாடுகிறாய் என்று !

#முனியாண்டி_ராஜ்.

கைவராத புரிதல்களின் தேடல்கள்


நம் புரிதல்களுக்கான தேடல்களில்
அவ்வப்போது நழுவிப்போகின்றன
சில விட்டுக் கொடுத்தல்கள்..

உன் பக்கம் சிலரும்
என் பக்கம் சிலரும்
அறிவுரைகளை அவிழ்த்துவிட்டுப்
போகின்றனர்....
ஒரு காப்பிக் கோப்பையின்
வெப்பத்தணிதலோடு முடிகிறது
அவர்கள் கடமைகள் என்றெண்ணி!

உனக்கும் எனக்கும்
ஒருசில நியாயங்களின் உரசல்களில்
தீப்பொறிகள் தீமூட்ட முனைகின்றன..
ஆணாதிக்கமாய் என் பார்வைகளை
நீ முன்னெடுக்கும் போதெல்லாம்
சில பெண்ணியங்கள்
எனக்குள்ளும் வந்து போவதை
நீ உணரத் தவறுகிறாய்..
கண்கள்முன் படரும்
கோப மேகங்களில் வார்த்தைகளை
அப்படியே விடுகிறோம் சுதந்திரமாக!
உணர்ச்சிகளின் உந்துதல்களில்
எல்லை மீறும் வார்த்தைகளில்
'அம்மா' என்றழைப்பின் குழந்தையிடம்
குழந்தையாகவே நீ மாறும் வேளை..

நமக்கான கடிவாளங்கள் இருக்குமிடம்
அடங்கியே போகிறோம் அமைதியாக!


#முனியாண்டி_ராஜ்.

கரைகளைப் போலவே ...



விரிந்து கொண்டே போகும் கரையினை
அரித்தெடுக்கும் அலைகள்... 
கலங்காமல்......மயங்காமல்...
தன் ஆளுமையை அழுத்தமாக்கிக் கொண்டே
நகரும்... 

அந்தக் கரைகளைப் போலவே ...
எவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும்
நீ என்னை அரித்தெடுத்தாலும்
என் பாதங்களின் அழுத்தங்கள்
பகன்று கொண்டே போகும்
நான் யாரென்று!!!!


#முனியாண்டி_ராஜ்.

காலண்டர்


கொஞ்சம் கலைத்துவிட்டு வா..
உன் மௌனத்தை!
காட்டில் வழிதவறியவனைப் போல்
காத்திருக்கிறேன்!
காலண்டர் தாள்களைக் கிழித்து கிழித்து
காலம் பார்த்தது போதும்!




காற்று..



மௌனமாய் அமர்ந்திருக்கிறாய் உள்ளே
இறுக்கி மூடிய இதழ்களுடன்!
கதவைத் 
தட்டித் தட்டித் பார்த்துவிட்டு
மறுபடியும் சொல்லாமலேயே போகிறது

காற்று..
காற்றுக்குத் தெரியும்
உன் மௌனத்தின் தூரம்!
உனக்கும் தெரியும்
இந்தக்
காற்றின் ஆழம்!

#முனியாண்டி_ராஜ்.

பாவங்களைக் கழுவ....




பாதங்களை விரட்டி விரட்டித்
தொட முயலும் அலைகளில்
பத்திரமாக மீட்டுக் கொண்டு 

வருகிறேன்..
பாதங்களைக் கழுவுவது என்னவோ
பாவங்களைக் கழுவுவது போல்
அல்ல.. .....சில
....தேங்காய் உடைத்தல்களிலும்
....அன்னதானங்களிலும்
....அலகுகள் குத்தி ஆர்ப்பரிப்பதிலும்
.....பெருநடைப் பயணங்களிலும்
எளிதாகவே கழுவிவிட முடிகிறது

எல்லாப் பாவங்களையும்!!!

#முனியாண்டி_ராஜ்.

இன்னும் அந்தக் கனவு .....


கண்ணாடிச் சாளரங்களில்
திட்டுகளாகவும் திவலைகளாகவும் 
மெலிதாய் நழுவிச் செல்லும்

மழையின் எச்சங்கள்...
இரவை எட்டும்
இந்த மாலையின் குளிரில் ...
புதியதாய் ஒரு வெப்பம்
அறையெங்கும் பரவத் தொடங்குகிறது..

நீ
வீசிவிட்டுச் சென்ற குடை
தலைகவிழ்நது...
கம்பிகளைக் காட்டிக் கொண்டு
சிரிக்கிறது ..
மழையின் நேசத்தாலா..
என்னில் பாய்ந்த கோபத்தாலா..
என்று தெரியாமலேயே...

கழுவாமல் விட்டுச் சென்ற
காப்பிக் கோப்பைகளில்..
ஓரிரு எறும்புகள்..
இனிப்புத் தேடி வந்திருக்கலாம்...
பலகாரங்களைக் கீழே துப்பிவிட்டு
தட்டும் நொறுங்கிக் கிடக்கிறது..

அறையெங்கும் சிதறிக் கிடக்கின்றன
படிக்காத சில புத்தகங்களும்
படித்தும் உறைக்காத
சில வாசகங்களும்!

எப்படியோ போ..
நீ மழையில் நனைந்து செல்லும் அழகில்
என் மனதும் கொஞ்சம் குளிர்கிறது..
இன்னும் சில நேரங்களில்
இந்தச் சாளரங்களின் மீது இரவு படர்ந்துவிடும்..
மின்விளக்குகள் தட்டப்படாமலேயே
அது கடந்தும் சென்று விடலாம் ....

யார் கண்டதும் ..
நாளை என்பது
இன்னுமொரு கனவாகவே அமைந்து விடலாம்....


#முனியாண்டி_ராஜ்.

முகமறியா 'நண்பனுக்கு'



எனது பயணங்கள் 
உங்கள் கால்களில் கொஞ்சம்
குடைச்சல் ஏற்படுத்தலாம்

என் தூரப்பார்வைகளில்
உங்கள் துருப்பிடித்த விழிகள்
இத்து இத்துக் கழண்டு விழலாம்..
முதுகெலும்பற்று புழுவாய் நெளியும்
உங்கள் உடல்களுக்காக
என் நடைகள் தளர்ச்சிபடாது
எரிந்து கொண்டிருக்கும்
உங்கள் பொறாமைத் தீ நாவுகளில்
என் நாக்கு சோர்ந்து மடியாது..
நடக்கத் தெரியா ஒருவனுக்காக
ஓடும்நான் நின்று பார்க்க முடியாது..
உங்கள் பாராட்டுகளிலோ..
உதட்டுநுனி வாழ்த்துகளிலோ..
வெம்மை மறைத்த கைக்குலுக்கல்களிலோ
என்னை நான் புதுப்பித்துக்கொள்வதில்லை
உங்கள் வெற்றுப்புன்னகைகளுக்காக
என் தூவல்களை
நான் மறைக்கத் தேவையில்லை..
உன் நாசிச்சூடு
என் மூக்கின்நுனி தொடும்வரை...

நீ நிழலாகவே இருந்துவிடு..!!

#முனியாண்டி_ராஜ்.

நையாண்டியாய்.............



விரல்களை ஒடித்துப் போட்டு
ஒதுங்கி நடக்கின்றன கைகள் ..
கட்டுப்பாட்டின் கட்டளையில்
கைகட்டி நிற்கும் கற்பனைகளை
நையாண்டியாய்ப் பார்த்து

ஓர உதட்டினில்
புன்முறுவல் சிந்திச் செல்லும்
உன் பார்வைகள் ....

எந்தக் கவிதையும்
உன்னைப் புரட்டவில்லை என
அறிந்தும் ..
ஓயாமல் நானும்
எதையாவது கிறுக்கிக் கொண்டே
வருகிறேன்.
....

#முனியாண்டி_ராஜ்.

கவிதை..


இன்னும் 

உழுது முடிக்கப்படாமலேயே இருக்கிறது

உன் விழிநிலத்தில் 

எனக்கான கவிதை..

எதிர்பாரா மழைகளும்..


படிப்படியாய்ச் சூழும் கருமேகங்களுக்குள்
எங்கேயோ ஒளிந்திருக்கிறது
மழை..

இன்னும் சில நேரங்களில்
இடியுடனோ மின்னலுடனோ
எச்சரிக்கை எழுப்பிவிட்டு
தன் தாபத்தை கொட்டிவிடலாம்
அது...

பக்கம் பக்கமாய்
எழுத்துகள் பூத்த
வெள்ளைத்தாள்களின் முன்
வார்த்தைகளை பூட்டிவிட்டு
மௌனமாய் அமர்ந்திருக்கிறோம்
இருவரும்...
புரிந்தோ புரியாதலோ ஒன்று
இந்தக் காகிதக் கட்டுகளிலும்
கருமேகம் குடித்த
பெருமழையாய் அமர்ந்திருக்கிறது..

வார்த்தைகளுக்குள் எழுதிமுடிக்க
மறந்த.. மறக்கப்பட்ட பேச்சுகள்
இந்தக் காகிதங்களில்
வாக்கியங்களாக பேசுகிறது...
நிமிடங்களைத் தின்று கொண்டே
மணிகள் வேகமாக கடக்கும்
நேரங்களில்...

மழை ..
கூறிவிட்டு வருவதில்லை
எதிர்பார்த்த தருணங்களில்!


#முனியாண்டி_ராஜ்.

^^முகமூடி மனிதர்கள்^^


எந்த முகமூடிக்குள்
என் முகம் பொருந்துமென
ஒவ்வொன்றாய் போட்டுகள் பார்க்கிறேன்..


நேரத்திற்கேற்ற நடிகனாய்..
பொய்க்கேற்ற சிரிப்பனாய்
ஆளுக்கேற்ற அடிமையாய்
நகைப்புக்கேற்ற நட்பாய்
வேலைக்கேற்ற நாயாய்
குரலுக்கேற்ற அழைப்பாய்...
ஒவ்வொன்றாய்.........
எதற்கும் பொருந்தாமல்
என் முகம் களைத்துப் போகிறது..

பொய்ம்மை சிரிப்பினில்
வஞ்சம் கலக்கத் தெரியாமல்
என்னிடம் நானே
தோற்று விழுகிறேன்...
கடந்து போகும் ஒவ்வொருவரும்
ஏதோ
கற்றுக் கொடுத்துப் போகிறார்கள்...
நட்பில் பதிவேற்றிய தருணப் பேச்சுகளை
பகைகளில் ஆயுதமாக்கி தாக்குகிறார்கள்
உறவின் விளிம்புகள் புரியாமலும்
உரசல்கள் விளங்காமலும்...
..........
...............

மனசாட்சிக்கு வெளியே
எதையும் கற்கத் தெரியாமல்
கழண்டு விழுகிறது மனது....


#முனியாண்டி_ராஜ்.

மிருகம் மறந்த பொழுதுகள்...




































மனித தோற்றம்
தெரியுமா உனக்கு டார்வின்
பேசத் தெரியாமல்
படிக்கத் தெரியாமல் போன
எங்களுக்குச்
சிந்திக்கக்கூட தெரியாதலா போகும்
மனிதன் என்பது நீங்களே
வைத்த பெயர் தானே
மிருகமென எங்களை அழைப்பதுபோல்!
வன்முறைகளுக்குள்
நாங்கள் தாழ்ந்ததையோ..
மனித வதைகளில்
ஆறு அறிவுகள் சறுக்கியதையோ..
மண் பிடிக்கும் ஆசைகளில்
மனம் கழண்டு விழுந்ததையோ....
குடும்ப உறவுகளில்
குலங்கள் பிரிந்து சிதைந்ததையோ..
காவல் என்ற பெயர்களில்
காலாடித்தனங்கள் மிகுந்ததையோ..
கூண்டுகளுக்குள் மனிதங்களை
சிறை வைத்ததையோ..
நாங்கள் அறியவில்லைதான்..
மதங்களுக்குள் நாங்கள்
வகைபிரிந்து விடுவதுமில்லை..
மனித வியாபாரங்களில்
எந்த மிருகமும் இன்னொரு மிருகம்
கடத்துவதுமில்லை..
கடவுள்கள் விரித்து
மத வணிகம் புரிவதுமில்லை..
விரிந்த எங்கள் வனாந்திரங்களில்
வழிபாடுகள் நிறைவதுமில்ல..
மனிதமிழந்த உங்களைப் போல்
நாங்கள் மிருகமிழப்பதுல்லை
உங்கள் மொழியில்
மனிதமென்பதை அறியோம்..
எங்கள் நெறிகளில்
மிருகம் என்பதே உயர்வாம்
உங்கள் அகராதிகள்வழி
நாங்கள் மிருகங்களாகவே
இருந்து விடுகிறோம்..
கல்வியறிவோ..
கலையறிவோ..
கலவியறிவோ...
உறவறிவோ...
உணர்வறிவோ...
எதுவானவாலும்
பயிலரங்குகளிலும் பணிமனைகளிலும்
நீங்களே கற்றுக்கொண்டு வாருங்கள்
எங்கள்
வனங்களின் வாசலுக்கு....
மிருகம் கற்றாவது வெளியேற!!!


அலைகளாய் கரைகளுக்கு நான்


கண்ணுக்கெட்டிய தூரங்களில் எல்லாம்
விரிந்து கிடக்கிறாய்..
கால்கள் நனைக்கும் சுகங்களில்

மனதும்
அவ்வப்போது நனைந்து விடுகிறது
ஒதுங்கா நிழல்களில்
உன்னையே
வெறித்துக் கொண்டிருக்கிறேன்

இது நிஜமானது..
எந்த நிழல்களிலும் ஒதுங்கி
முகம் மறைக்கா நிஜமிது..
ஆழியின் மையத்தில் நீர்சுருட்டி
கரைதொடும் ஓர் அலையின்
உணர்ச்சிக்குவியல் போல் வியப்பானது..
'ஓ'வெனப் பகரும் எந்தவொரு
அலையிலும் மறைந்து வாழும்
அற்புத பிரவாகமானது அது....

உன் பார்வைக் கரைகளில்
ஒதுங்கும் சுள்ளிகளாய் அல்ல..
அலைகளாய் என்னைப் பார்..
மனக்குமிழியின் உணர்வுப் பிரவாகம்
நீ ..
உன் கரைகளில் கவிதைகளைச்
சேர்க்கும் போராட்டத்தில்
பின்வாங்கியே போகிறேன்
ஒவ்வொரு கணமும் .......

இது நிஜமானது..
ஓய்வில்லா அந்த அலைகள்போல்!


#முனியாண்டி_ராஜ்.

எல்லைகள் தாண்டா வரை ..


ஒரு மாபெரும் தாக்குதலுக்குத்
தயாராவதுபோல்
கறுப்புக் குதிரைகள் ஆங்காங்கே

பூட்டப்படுகின்றன..
வெண்பஞ்சுகள் அவசர அவசரமாக
கறுப்புகளில் காணாமல் போகின்றன
இளங்குளிரை ஏந்தி
காற்று மெல்ல வருடும் நேரம்
குடைகளைத் தேடி மனம்
ஓடும்.....

இன்னும் கொஞ்ச நேரத்தில்
மேகங்கள்
உடைந்து சிதறலாம்..
வாய் வறண்ட ஏரிகள்
மூச்சு முட்ட நீர் பருகலாம்
தாவரங்கள் துளியேந்தி
ஆடியும் களிக்கலாம்..
பால்யங்கள் உடல்நனைத்து
சிலிர்க்கும் வேளை
பால்யம் கடந்த வயதுகள்
ஏதாவது
முரட்டுக் குடைகளுக்குள்
தங்களைப் பதுக்கிக் கொள்ளலாம் ..

மகிழும் வேளைகளில்
மரணங்களும் நிகழலாம்
கோபம் கொண்ட நிலைகள்
ஏதாவது
குடிசைகளை நிர்மூலமாக்கலாம்
செழித்து வளர்ந்த பயிர்களில்
சேதாரம் ஏற்படுத்தி
செருக்கோடு நடை போடலாம்

மழையும் அழகே..
அதற்கான கோடுகள் தாண்டா வரை!

#முனியாண்டி_ராஜ்.

மனம் விரும்பா ஒப்பனைகள்...


அடுத்த நாடக ஒத்திகைக்கு
என்னை ஒப்பனை செய்து கொள்கிறேன்
கூடத்தில் தெரிந்தோ தெரியாமலோ

ஒருவர் அமர்ந்திருக்கலாம்
அவருக்காக புன்னகையைக்
கொஞ்சம் செதுக்கிக் கொள்ள
வேண்டும் ...
கைப்பேசியின் பக்கங்களில்
அவர் எண்ணுக்காக
ஓர் இடம் ஒதுக்க வேண்டும்...
உதடு விரியும் மட்டும்
கொஞ்சம் பேசிப் பார்க்க வேண்டும்
கையில் திருமண அழைப்பிதழ்கூட
இருக்கலாம்..
மனம் மறைந்த முகத்தை
தோண்டியெடுக்கும் முயற்சிகளில்
இருவருமே போராடிக்கொண்டிருக்கலாம்..
..... இடங்கள்
..... காலங்கள்
..... தொழில்கள்
..... விளையாட்டுகள்
..... பால்யங்கள்
ஒவ்வொன்றாய் வழுக்கி வழுக்கி
விளையாடும் வேளைகளில்
ஒரு புன்னகையோடு
விடை பெற்றுப் போன பின்பும்
மனம் மட்டும்
தேடல் ஆராய்ச்சியில்
தொடர்ந்து கொண்டே ...


#முனியாண்டி_ராஜ்.*

ஒரு மௌன தவம்..



என் வழி
எனக்கானதாகவே இருக்கிறது..
சினமேற்றும் முயற்சிகளில் 

என் பொறுமை உரசப்படும் போதெல்லாம்
விலகிச் செல்வதே விருப்பாகிறது
நான் பக்குவப்பட்டு விட்டதாய்
பக்கமிருப்பவர்கள் பகர்கிறார்கள்
கோபம் தணித்த முதிர்ச்சிநிலையில்
மனம்
மாறிவிட்டதாய் புகழ்கிறார்கள்
..........
பயந்து விலகுவதாய்
எதிராளிகளின் இரட்டைப் பேச்சுகளில்
இரணப்படும் மனதை
அடிக்கடி
இழுத்து நிறுத்த வேண்டியுள்ளது
பொறுமைக்கும் பொங்கலுக்கும் இடையில்
அந்த மெல்லியக் கோடு
சன்னமாய் அழிந்து வருவதை
அவ்வப்போது சிவக்கும் கண்கள்
காட்டிக் கொடுக்காவரை
என் மௌன தவம்
ஒரு முதிர்ச்சியே!

#முனியாண்டி_ராஜ்.

காலணி கீழே உரிமைகள்


இங்கே அமர்ந்தும் நின்றும்
விருப்பப்படி தம்படம் 
எடுத்துக் கொள்வோம் ..

புதியதாய் முளைத்த பூங்காக்களின்
வனப்பில் சிரித்தபடியே
சுட்டுச் சுட்டுத் தள்ளுவோம்
புகைப்படங்களை ..
ஆண்டாண்டு காலமாய்
இருள் சூழ்ந்த பூமியின்
அண்மைய வெளிச்சங்களில்
நாமும் கொஞ்சம் கலப்போம்..
இரத்தங்களில் தோய்ந்த
சுற்றுலாத் தளங்களின் பரிணாமத்தில்
வரலாற்றை மறந்து
நாமும் சிரித்துக் களிப்போம்....
மனிதம் கேட்டுப் போராடிய
ஆயுதங்களின் மேல் நினைவுக்காய்
அழகாய் சாய்ந்து கொள்வோம்

எந்த இடிபாடுகளிலாவது
கொஞ்சம் தேடிப்பாருங்கள்..
உரிமைக் குரலின்
சிதறிய உதிரங்கள்
சுவரோடு காய்ந்து போயிருக்கும் ..
ஏதாவது ஒரு காலணியின் கீழ்
அவன் எலும்பின் எச்சங்கள்
மீந்திருக்கும்
முடிந்தால்
கண்மூடி தியானியுங்கள் சிலநொடி
இனத்திற்காக உயிரிழந்தவனின்
ஆன்மா
கொஞ்சமாவது நிம்மதி பெறட்டும்!


#முனியாண்டி_ராஜ்.


நீ 
பொறுத்துக்கொள்ள தான் வேண்டும் நண்பா...

அறிவுத் திருட்டு என்ற வார்த்தைகளில் 
உன் அறிவின் பிரசவங்கள்
கௌரவமாக களவாடப்பட்டு
உரிமங்கள் பெயர் மாற்றப்படும்....
நீ
பொறுத்துக்கொள்ள தான் வேண்டும்]
வீசப்படும் வலைகளில்
பொய்கள் மட்டும் சிக்கி
உண்மைகள் சிறிய வளைகளில் கூட 
கவனமாய் நழுவி விடும்...
உண்மையைக் கேட்கும்
உன் குரல் வளை
உனக்கே தெரியாமல் நெறுக்கப்படும்..
நிஜங்களைவிட நிழல்கள் வலிமையானவை..
அரிதாரம் பூசும் நண்பர்களிடம்
உன் நேர்மை வழி எடுபடாது..
முடிந்தால் நீயும் கொஞ்சம் 
வேடம் போடக் கற்றுக் கொள்...
வேடங்களில் விவேகமே விழுந்து கிடக்கிறது எனும் போது....
நீ
கொஞ்சம் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும் நண்பா!
உன்னுடைய ஆதங்கங்களிலும் ஆத்திரங்களிலும்
எதையும் வேக வைக்க முடியாது...
நீயாக வெந்து போவதைத் தவிர! 
ஒத்துப் போ அல்லது உரசிக் கொண்டே போ..
ஒதுங்கிப் போவதால்....
உலகம் உன்னை ஒதுக்கியே வைத்து விடும்
நீ 
பொறுத்துக் கொள்ள தான் வேண்டும்
நண்பா...


சொல்லாத உணர்வுகளும் பொழுதுகளும்



அழுது ஓய்ந்த ஒரு மழையின்
எச்சத்தில்
மெல்லிய குளிருடன்

கொஞ்சங் கொஞ்சமாய் நகரும்
இரவு...
போர்வைக்குள் உடல் திணிக்கும்
தருணம்
நீயும் கொஞ்சம் எழுகிறாய்

இன்னும் வாசிக்கப்படாத
சில வரிகளைத் துருவித் துருவித்
தேடிப் பார்த்து தேய்ந்து போகும்
நிலவைப் போல
உன்னுள் எதையோ தேட முயன்று
கரைந்து போகிறது என் கருக்கல்

அவசரங்களில் தன்னைத் தொலைத்து
பகல்களின் தினசரிக் கடமைகளில்
நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
திடீரென ஒரு நிறுத்தத்தின்
இடைவெளியில் நினைவுக்கு வருகிறாய்..

இன்றாவது
என்னை உடைத்துப் போடும்
முயற்சிகளில்
மனம் எழுகையில்..
பச்சை கழன்ற சிவப்பில்
மீண்டும் விரைகிறது
இந்தப் பகலும்!!


#முனியாண்டி_ராஜ்.

பிரிவுகளும் சில சமயங்களில் ....


உடைந்துபோன பல இரவுகளின்
எச்சத்திலிருந்து
என்னைச் சேமித்து வந்திருக்கிறேன்

தனித்துவிட்ட நள்ளிரவுகளின் குளிரில்
நான் வெம்மையே பார்த்திருக்கிறேன் ..

ஒரு மௌன வனவாசத்தில்
என் கோபங்களின் கடிவாளம்
வைத்தது வைத்தபடியே இருக்கிறது..
எதையோ சாதித்துவிட்ட இறுமாப்பு
உன் நடையிலும் தெரிகிறது..

உன் உதட்டோரப் புன்னகைகள்
என்னை உரசும் போதெல்லாம்
திடீரென விழித்து எழும் கனவுகளின் ஓரம்
என்னைத் தொலைத்தும் இருக்கிறேன்
நீ மட்டும் தொலைந்தது ....
..... தொலைந்தபடியே!!!


#முனியாண்டி_ராஜ்.

தன்னலக் கூக்குரல்களும் தகிப்புகளும்



என்னோடுதான்
அவர்களும் வந்திருந்தார்கள்
குரல்களில் வழிந்த இரசாயனங்களில்

என் உதிரத்தையும்
நிரப்பி வெப்பமாக்கியிருந்தார்கள்..
முன்னிலைப்படுத்தி தலைவனென்றார்கள்
கூக்குரல்களிலும் ஆவேசங்களிலும்
என் குரலை உயர்த்தியிருந்தார்கள்..
மங்கலான உரிமை வேண்டல்களில்
மனம் மட்டும் சாய்க்கப்பட்டிருந்தது..
தலைவனென்ற பூச்சுகளில்
வன்மை கைகோர்த்துக் கொண்டது..
கூட்ட சுகத்தின் தள்ளல்களில்
குரலோடு உயர்ந்தன கைகளும்
கண்களின் மேய்ச்சலில்
பதாகைகளின் ஊர்வலத்தில்
துணிச்சல் முகமெங்கும் முகாமிட்டிருந்தது
பொறுமையின் பூட்டுகள்
ஒவ்வொன்றாய் சிதற
முதலாளித்துவத்தை முழுவதுமாக மோத

பரப்பப்பட்ட ஒப்பந்தங்களில்
கண்கள் உலர்ந்து திரும்புகையில்
தரையெங்கும் சிதறிக்கிடந்தன
பதாகைகளும்
உடைந்துபோன குரல்களும்
தனிமையின் உறுத்தல்களில்
துணிச்சல் பம்ம இடமின்றி
கண்களோரம் அமர்ந்தது
கூனிக்குறுகி!

#முனியாண்டி_ராஜ்.

எவன் கதையாவது ....

எனக்கொரு கதை வேண்டும்
எவன் கதையாக
இருந்தால் என்ன ..

அடுத்தவன் வீட்டில்
விறகெரிந்ததோ வயிறெரிந்ததோ
கதையாகக் கூறி விடுங்கள்
என் நேரம் சொரிவதற்கும்
மனம் ஒளிந்து களிப்பதற்கும்..
யார் கதையாக இருந்தால் என்ன

மரணத்துடன் அவன்
போராடிக் கொண்டாவது..
மௌனத்துடன் அவன்
மன்றாடிக் கொண்டாவது..
குடும்பச் சுமைகளில்
விழிபிதுங்கிக் கொண்டாவது
பணியிட இறுக்கத்தின்
பாவங்களைச் சுமந்தாவது
துரோகக் குறுவாள்களில்
குற்றுயிர் கேட்டாவது
சகோதரச் சிக்கல்களில்
சரிந்து விழுந்தாவது....
இன்னும் .. இன்னும் ..
ஏதாவது கதை வேண்டும்
எனக்கு

செவியினிக்க கேட்டு
'உச்'களில் இரக்கம் கழித்து
தனிமை விட்டுச் செல்லுமிடங்களில்
எனக்கு நானே சிரித்து...
ம்ம் ... கதை வேண்டும்
எனக்கு ..எவன் கதையாவது
என் வீட்டுக் கதைகள்
படிகள் தாண்டாவரை!


#முனியாண்டி_ராஜ்

நீரின் மேல்


இப்பொழுதெல்லாம்
மழைகளுக்குள் நான் மரித்துப்போவதில்லை..
மரங்கள் தேடியோ
மறைவைத் தேடியோ
ஓடுவதுமில்லை..
தகரக்கூரைகளின் கீழும்
தடுப்பு அத்தாப்புக்களின் கீழும்
உடலை ஒளித்து
மறைப்பதுமில்லை..
இடியைக் கேட்டவுடன்
இடிந்து போவதோ..
மின்னலைப் பார்த்தவுடன்
மிரண்டு போவதோ எதுவும் கிடையாது....
மழையில் நனைவதில்
குழந்தைகளை வெல்லும்
வேகம் எப்போதே வந்து விட்டது.....
வறண்டு கொண்டு வரும்
நீரத்தேக்கங்களை நினைக்கும் போதெல்லாம்
நீரின் மேல் காதலும்
மழையின் மேல் மோகமும்
தானாகவே வந்து விடுகிறது ...

- முனியாண்டி ராஜ்.

கைசிறையில் மனம்..



கைபேசிகளின் சிறைச்சாலைகளில்
சிறைபிடிக்கப் பட்டிருக்கின்றன
மனித மனங்கள்..

மாந்தனின் மூளைச்சிறைக்குள்
முழுமையான கதவடைப்புகள் நடத்தும்
விவேகங்களின் அணிவகுப்புகள்...

முகமறியா தூரத்து உறவுகளில்
கொஞ்சங் கொஞ்சமாய் களையும்
உதிர உறவுகள்..
அண்டையின் புன்முறுவல் அறியா
விழிகளின் திரைகளை மறைக்கும்
தூரத்து விருப்புகள்..

ஒவ்வொரு கரங்களும்
திறன்பேசிகளின் பிணைப்புகளில்
தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கும்
தருணங்களில்...
மனிதம் எட்டிப்பார்க்கத் துணிவின்றி
நாற்காலிகளின் அடியில்
தன்னை மறைத்துக் கொள்ளும்..

திடீரென தடைபடும்
இணையத் தொடர்பின் இடைவெளியில்
தலைநிமிரும் வார்த்தைகள்
ஒருமுறை .....
மீண்டும் பயணம் தொடரும்!


#முனியாண்டி_ராஜ்.

அவனும் தலைவன்தான் .....


அவனைத்தான் அவர்கள் 
தலைவன் என்றார்கள்
அவன் நாவினிப்பில் சர்க்கரை ஊற்றி

வீதியெங்கும் விரித்திருந்தான்
சர்க்கரை நக்கிய கூட்டம்
சகதி மறந்து வீழ்ந்திருந்தது
விழிகளில் பின்பக்கங்களின்
அரவங்கள் பதுக்கி
புன்னகைகள முன்னே பரப்பியிருந்தான்
வார்த்தைகளில் கட்டுண்ட கூட்டம்
சரிந்து சரிந்து விழுந்தது..
பொய்களுக்கும் வக்கிரங்களுக்கும்
வண்ணம் தீட்டிய கண்காட்சிதனில்
மூளை செத்த மனிதர்கள்
முகமிழந்து போயிருந்தனர்..
உண்மைகளில் கறுப்புப் பூசி
கட்டிலுக்கடியில் பதுக்கியிருந்தான்..
எழுத்துகளில் நேர்மைகளை வடித்து
மிதக்க விட்டிருந்தான் கரு மையினில்
மெய்மறைத்து..!!
வசதியாக கைகோர்த்துக் கொண்ட
சமூக வலைதளங்களில்
ஆதரவுக்கூட்டம் தலைவா என்றது
மைதனில் மரித்து......
பதாகைகள் ஏந்திய போராட்டம்வரை
எந்த ஒரு ஆதாரம்தனிலும்
தன்னை மறைத்தே வந்திருந்தான்
தன்னலத் தலைவன்..

மந்தைக் கூட்டம் மதிமயங்கி
'மனிதம்' காக்கும் போராட்டத்தில்
மனம் ஒளித்த வார்த்தை வியாபாரியிடம்..
மனிதமும் மரணித்திருந்தது
உண்மையுடன்!!!

அவன் மரித்துதான் விட்டான்


அவன் மரித்து விட்டதாய்தான்
வந்து சொன்னார்கள் ..
சாரை பிடித்து நின்ற கூட்டமும்

சாலை மறித்த வாகனங்களும்
அவன் வாழ்க்கையை
எடுத்துக்கூற முயன்றன..
கூட்டம் விலக்கி முகம்பார்க்கும்
கூட்டம் என்னையும் இணைத்தது..
பூக்களுக்குள் அவன் முகம்
காணாமல் போயிருந்தது ....
அவனைப் போலவே!
'அண்ணன் எப்படி இருந்தாரு'
துக்கமின்றிச் சிரித்த கூட்டம்
மதுபாட்டில்களில்
மனம் தொலைந்திருந்தது..
'வாணவெடி தெரிக்கனும்ல...'
எக்காளச் சிரிப்புடன்
எதையோ தேடித்தேடிப் பார்த்து
மீண்டும் மூழ்கியது ..

மாலைகள் போட இடமின்றி
இன்னும் கொஞ்சம் ஒதுங்கியது
சவப்பெட்டி...
'போடலனா பெரிய குத்தமா போயிடும்'
கிசுகிசுத்த பெரிசின் வாய்
சட்டென மூடப்பட்டது....
பிணங்கூட வாள் எடுக்கும்
பார்த்து....
வன்முறை வாடையுடன்
நாளைக்கே பிணம் புறப்பட்டுவிடும்
இன்னொரு விதை விதைத்து!!


#முனியாண்டி_ராஜ்.