ஒரு வெற்றிடத்தில் இருந்துதான்
இதைத் தொடங்குகிறேன்
பொதுவெளிகளுக்குள் அழுக்கில்லாத
ஓர் இடத்தினைப் பிடித்து
மனிதர்களிலில்லா ஒரு மதத்தினை
தேடிப் பிடித்து
நிறமற்ற ஒரு கடவுளின்
கையை இறுக்கியணைத்து
இந்தப் பயணம் தொடங்குகிறேன்
நீட்டியெழும் கரங்களுக்குள்
ஒவ்வொரு வண்ணமாய்
ஒரு வேதப் புத்தகம்
உதிர்ந்து விழும் வார்த்தைகளுக்குள்
என் சக்கரம் சிக்கிடாமல்தான்
பயணிக்க முயற்சிக்கிறேன்
சகதிகளிலும் சாக்கடைகளிலும்
சக்கரம் விழுந்தெழுவதைத்
தவிர்க்க முடியாமலேயே எழுந்தெழுந்து
தொடர்கிறேன்.....
யாரோ ஒரு கடவுளுக்குள்
விழும்வரை நீயும் செல்
எனச் செவியறையும் குரல்களில்
செவிடாகத்தான் செல்கிறேன்
வீழும்வரை அல்ல ..
யாரேனும் வீழ்த்தும்வரை!
#முனியாண்டி_ராஜ்.
No comments:
Post a Comment