அவர்கள் மட்டும் ஏழைகளல்ல
===•••===•••===•••===••
அவர்களின் காயங்களைக்
காட்டச் சொன்னார்கள்
கூன்விழுந்த முதுகுகளின் வரிகள்
இவர்களுக்குக் காயமாகப் படவில்லை
காய்த்துப்போன கைகளின் கொப்புளங்கள்
உழைப்பில்லையென நிராகரிக்கப்பட்டன
செருப்பின்றி நடந்த பாதங்களின்
நிறமிழந்த அடிகள்
பூசப்பட்ட பொய்களென
ஒதுக்கி வைக்கப்பட்டன
ஈரத்துணி கட்டிப்பழகிய
ஒட்டிய வயிறுகளை
உணவுக் கோளாறுகள் என்றார்கள்
ஒடுக்குவிழுந்த விழிப்பள்ளங்களை
ஊட்டச் சத்தின்மையென
உறுதியாகச் சொன்னார்கள்
கருமையடைந்த தோல்களின் வலியை
கோடையின் கொடுமை என்றார்கள்
காற்றுக்கே அஞ்சும் ஓலைக்குடிசைகள
இடப்பற்றாக்குறையென
இதமாகச் சொன்னார்கள்
பசிகளில் மரிக்கும் உயிர்களின்
பெயர்களையாவது எழுத
எப்படியோ...
ஏழ்மையென்பது ஏழைகளின் விதியல்ல என
ஐந்து நட்சத்திர விடுதியின்
வட்ட மேஜை விருந்துகளில்
மீண்டும் அமர்ந்தனர் கூடிப் பேச!
#முனியாண்டி_ராஜ்.
No comments:
Post a Comment