Friday, February 10, 2017

அதன் பசி வேறு ....


அதன் பசி வேறு ....
===•••===•••===••
அது
பசிக்காக காத்திருந்தது என்றால்
நான் நம்ப மாட்டேன்
ஓர் எலும்புத் துண்டைக்
கௌவிக் கொண்டு வாலாட்டும் அளவு
அது தரங்குறைந்த பிறப்பல்ல
மிஞ்சிக் கழியும் எச்சில் உணவில்
சப்புக் கொட்டும் நாக்கல்ல அது
மழையிலும் வெயிலிலும் ஒண்டிப்படுத்து
வாழ்நாள் கழிக்கும் உயிராகவும்
இருக்காது......
கல்லெடுக்க குனியும் பாவனைகளில்
மிரள்வதுபோல் அது மிரள்வதேயில்லை....
ஏனைய சகாக்களோடு
அது வீரமாகத் திரிவதுமில்லை..
கூட்டங்களில்
அது வாலாட்டுபவையாக மட்டும் நடமாடுவதுமில்லை..

பிறவிகளில் அது
தப்பிப் பிறந்தவையாகத்தான்
அது இருக்க முடியும்..
ஒரு தலைமைக்கு
அதன் வாலை இப்பொழுதே
தயார் படுத்தியிருக்கவும் கூடும்
கூரிய பற்களில்
அதன் குருதிக்கறையை
நாக்கால் வழித்தே சுகம் கண்டிருக்கலாம்

அதன் வேட்டை ஒற்றைத் துண்டல்ல..
ஒரு யானையின் பசியென
நீங்கள் உணருங்கால்..
நீங்களே உணவாக மாறியிருக்கலாம்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment