Friday, February 10, 2017

புரட்சியென்பது புதைக்கப்பட்டதல்ல





புரட்சியென்பது புதைக்கப்பட்டதல்ல
===•••===•••===•••===•••===••
நிறமற்ற வெறித்த பார்வையில்
ஒரு வெற்றிடம் நோக்கும் அதன்
விழிகள் மட்டுமே நீங்கள் அறிந்திருப்பின்
உங்கள் பார்வையின் விலாசம்
குறுகியதென நான் அறிவேன்
இமை விலகா அவ்விழிகளின் பின்
கூர்வாளாய் இறங்கியிருக்கும் வார்த்தைகளின்
குருதிக்கறையை அறிந்திருக்க நேரமின்றி
அவரசக் கையெழுத்துகளில்
உயிர் கரைந்தவர்கள் அவர்கள்

ஒரு சிறுபடை புரட்சியின்
இடை வழி கழன்றவர்களும்
கைத்தட்டல்களின் வெப்பங்களில்
மனம் களித்தவர்களும்
தம்படங்களிலும் சுவரொட்டிகளிலும்
முகம் காட்டி முறைத்தவர்களும் சிரித்தவர்களும்
ஊடக விழிகளுக்கு விருந்து கொடுத்து
இடையில் கழன்று நகர்ந்தவர்களும்
சற்று விலகி நிற்பின்
உயிர்கரைந்த மற்றவர் ரணம் தெரியும்

சித்தாந்தங்களில் உயிர் விதைத்த
அவர்களின் வீரிய விதைகள்
விருட்சங்களின் விலாசங்களின் தேடி
எதிலாவது புறப்பட்டுக் கொண்டிருக்கலாம்
எஞ்சி நிற்கும் ஏடுகளின் முகங்களில்
அந்தச் செவ்வெழுத்துகளை மௌனமாக
படித்துக் கொண்டும் இருக்கலாம்
ஒளித்து வைத்த வரலாறுகளின் ஓலைகளை
உருவியெடுக்கும் முயற்சிகளில் கூடவும்
கூடியிருக்கலாம்..

நானும் அவர்களைப் போல் தான்

வெற்றிடம் நோக்கும் அந்த
நிறமற்ற பார்வைகளை ஒரு புகைப்படமென
ஒதுக்க முடியாமல்
ஊடுருவ முயல்கிறேன்
மறைந்திருக்கும் வாள்கள் தேடி!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment