#புரட்சியின்_நிறம்
===•••===•••===
இங்குச் சிந்திய இரத்தம்
உன் மதம்சார்ந்ததாக இல்லாமல்
இருக்கலாம்
அது மனிதம் சிந்திய இரத்தம்
கதறும் ஓலங்களின் ஒலி
உன் மொழியற்றதாக இருக்கலாம்
ஒரு மானுடக் குரல்வளை நெரிக்கப்படும்மோதெல்லாம்
நெறிகளின் ஏடுகள் கிழிக்கப்படுகின்றன..
வலி மனிதனின் மொழி
பாதைகளை
உன் வழிபாடுகளுக்கு ஏற்றபடி
அமைத்துக்கொண்ட பிறகு
சொர்க்கமும் நரகமும்
உன்னால்தான் தீர்மானிக்கப்படுகின்றன
உன் வேதநூல் எழுத்துகளின் அரிச்சுவடி
ஆணியெழுத்துகளோ
சித்திர எழுத்துகளாகவோ தான் அமையும்
வரலாறுகளை ஆழ்ந்துவிட்டு
வாழ்க்கைக்குள் வா...
சிதறி விழும் சதைகளுக்காகவும்
அறுந்துவிழும் கழுத்துகளுக்காகவும்
புரண்டுவிழும் உடல்களுக்காகவும்
பொங்கிப் பீய்ச்சியடிக்கும் குருதிக்காகவும்
நிலையறும் தாய்களுக்காகவும்
உணவிழந்த குழந்தைக்காகவும்
கண்டம் விட்டு
கடல் தாண்டி
உன் விழிகளிலும் போராட்டம்
மனிதம் ஏந்தி!
புரட்சியின் நிறம்
சிவப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும்
உன்
மனதுக்குள் கறுப்புப் படியாத வரை!
#முனியாண்டி_ராஜ்.
No comments:
Post a Comment