Friday, February 10, 2017

ஒரு முதியோர் இல்லத்திலிருந்து




ஒரு முதியோர் இல்லத்திலிருந்து …….

என் நாள்குறிப்பின்
கடைசிப் பக்கங்கள் எழுதும் சிரமம்
உனக்கு வேண்டாம்…..
அவற்றை நானே எழுதும் ஆற்றல் தீரும்போது
உன்னிலிருந்து வெகுதூரம் சென்றிருப்பேன்
இதுவரை நடந்த வந்த களைப்பில்
கால்கள் அயரும்போது..
சிறகுகள் முளைத்து
எங்கேயாவது பறந்திருப்பேன்….

உன் புறக்கணிப்புகளிலும் சுடுசொற்களிலும்
நான் வெந்து மடிவதைவிட
தனியனாய் பயணம் செய்வது ஏனோ
எனக்குப் பிடித்திருக்கிறது…
என்னை அணைத்துச் செல்ல வேண்டுமென்ற
ஒரு பொய் நாகரீகத்தில் நீயும்
சிக்கிக் கொள்ளாதே..
உனக்குப் பாதையையும் பயணத்தையும் காட்டியது
என் கடமையென நான் நினைக்கவில்லை
வாழ்வின் பூரணம் எனவே உணர்கிறேன்!
அந்த வாய்ப்பு உனக்குக் கிட்டும்போது
நீயும் அதை உணர்வாய்…

பாவங்களில் சிக்குவாய் என்றோ
பலர் வாயில் விழுவாய் என்றோ
பதைபதைத்து என்னை அழைக்க வராதே..
சொல்…அவர்களிடம் சொல்
இப்பாதை என் தேர்வென்று!
என் உரிமைகளைக் கிழித்தெறிய
எத்துணைத் துணிவு கொண்டாயோ
அத்துணிவுடனே சொல்… அஞ்சாதே..
என்னைத் தூக்கியெறிந்த அத்துணிச்சல்
உன் பலமெனக் கொள்!

என்னைப் போல் வாழ்க்கை கிழிந்தவர்
இங்கே ஏராளம்
கிழம் என்று ஒதுக்கப்பட்ட
எங்களுக்குள் ஒத்தடம் கொடுக்க வாய்ப்பளித்த
உனக்கு…
நன்றியைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்!

** முனியாண்டி ராஜ்

No comments:

Post a Comment