Friday, February 10, 2017

கடலை விழுங்கும் அலைகள்




கடலை விழுங்கும் அலைகள்
===•••===•••===•••===•••
பகலைக் கரைத்து
இரவுக்குள் இழுக்கும் முயற்சிகளில்
அலை விடாது
கரைகளை உரசிக்கொண்டே இருந்தது
வெண்மணல்கள் கருமைக்குள் விழும்
அந்த நேரத்தில்தான்
ஈரம் விழாத ஓரங்களில்
நடந்து கொண்டிருந்தேன் உன்னுடன்
ஏதோ ஒரு கூச்சத்திலோ அச்சத்திலோ
வளைகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டிருந்தன
குறு நண்டுகள்
சொல்ல முடியாமல் தொண்டைக்குள்
பதுங்கும்
சில சொற்கள் மாதிரி....

நீண்ட ஒரு உஷ்ண மூச்சுக்குப்பின்
சிறியதொரு முறுவலை வீசினாய்
வார்த்தைகளின் தொடக்கம்
அதுவாகத்தான் இருக்க வேண்டும்
ம்..என்று எதையோ
தொடங்க நினைத்து..
மீண்டும் வளைக்குள் விழுந்தது
நண்டு

நீயாகத்தான் ஆரம்பித்தாய்
'இன்றுகூட பிள்ளைகள் கேட்டார்கள் ..
அப்பா வருவாரா என்று' ...
ஒரு பார்வையில்
உன்னைஅளவிட முயன்று
என்னை நானே அழித்துக் கொண்டிருந்தேன்
உறைகளில் உறங்கியிருந்த
மணவிலக்குப் பாரங்கள் மெல்ல
எட்டிப் பார்த்து பதுங்கிக் கொண்டன

தெரிந்தோ தெரியாமலோ உரசிய
விரல்களில்
இத்தடவை எத்தீயும் பற்றவில்லை..
இருளை முழுவதுமாக விழுங்கிய
திருப்தியில்
கடல் உறங்கத் தொடங்கியிருந்தது

அலைகளை மட்டும் அனுப்பிக் கொண்டு!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment