Friday, February 10, 2017

கடைசி பக்க முன்னுரை




கடைசி பக்க முன்னுரை
===•••===•••==•••=
எனக்காக எழுதப்பட்ட பக்கங்களை
இறுதிப் பக்கத்திலிருந்து
எட்டிப் பார்க்கிறேன்
விரிசல்களும் கிழிசல்களும் நிறைந்த
ஏடுகளில் ஆங்காங்கே
சிவப்புக் குறியீடுகளில் எதையோ
சொல்ல முயன்று தோற்றிருக்கலாம் நான்

முதல் பக்கங்களில் விரிந்த
கையெழுத்துகளில் தேய்ந்து போன
விலாசங்களைத் தான்
தொடரும் பக்கங்கள் தருகின்றன
இடையிடையே பூத்திருக்கும் பூக்களிலும்
இதமாய் பூசப்பட்ட நஞ்சுகளிலும்
ஆழமாய் இறக்கப்பட்ட நஞ்சுகளிலும்
விழுந்தும் எழுந்தும் வந்திருக்கிறேன்

முகமன் எழுதியவர்களின் பெயர்களைவிட
முகஸ்துதி பாடியவர்களின் பெயர்கள்
ஒவ்வொரு பக்கங்களையும் சுட்டிருக்கிறது
நட்புத் தொடர்ச்சிகளில்
அறுந்து விழுந்தவர்களும்
கழுத்து அறுத்தவர்களும்
தோள் கொடுத்து உயிர் கொடுத்தோரும்
தொடர்ந்தே எழுதப்பட்டு இருக்கிறார்கள்
நிறமறியா சில பசைகளில்
உறவறியா பெயர்கள் கோடிட்டுக்
காட்டப்பட்டிருக்கின்றன சில பக்கங்களில்

நீங்கள் படித்து வெறுத்த பக்கங்களும்
கண்ணீர் தொலைத்த வரிகளும்
எரிச்சல் மிகுந்த எழுத்துகளும்
உறக்கம் கெடுத்த கவிதைகளும்
சில இடங்களில் இருந்திருக்கலாம்
என்னை மீறிய இலக்கணப் பிழைகளும்
உங்கள் கண்களை உறுத்தியிருக்கலாம்
உங்கள் கருத்துகள் எழுத
இடமில்லா பட்சங்களில் !

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment