Friday, February 10, 2017

உயிரின் விலை




உயிரின் விலை
===•••===•••
அவன்தான் எனக்கு
அத்துணையும் கற்றுக் கொடுத்திருந்தான்
தூண்டில் தேர்விலிருந்து
வீசும் நுட்பம் உட்பட..
அவ்வப்போது தூண்டில்முள் கட்டும் முறைகளையும்
பலியாகும் இரைகள் கோர்ப்பது வரை...
எங்கெங்கு மீன்கள் துள்ளுமெனவும்
தூண்டில் எவ்வாறு வீச வேண்டுமெனவும்
அவன் அழகாக
கற்றுக் கொடுத்திருந்தான்
சிறுமீனுக்கேற்ற உணவு முதல்
பெரும்மீன்களுக்கேற்ற உணவு வரை
அவன் அகராதி அத்துப்படி

பல சமயங்களில்
அவனுடன் அமர்ந்து மீன்பிடிப்பினும்
என் தூண்டிலில்
எந்த மீனும் சிக்கியதில்லை
தூண்டிலுடும்போது பேசக்கூடாது
மீன்கள் கேட்டு ஓடிவிடும் என்பான்
அதனாலேயே
தும்மலையும் துளியாகவே விடுவதுண்டு
தள்ளி அமர்ந்தே
அவன் தூண்டில் வீசுவதால்
நுட்பம்பல அறியாமலே போனதுண்டு நான்

அனைத்தையும் கற்றுக் கொடுத்திருந்தான்
அவன்..
ஓர் உயிரின் விலையைத் தவிர!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment