Friday, February 10, 2017

சுயநலங்கள்



சுயநலங்கள்
===•••==••
முதுகெலும்பின்றி ஊறும் 
ஏதோ ஓர் உயிரைப் போல்தான்
நீங்கள் அவனைப் பார்க்கலாம் 
அந்த நான்கு சுவர்களுக்குள்
அவன் வார்த்தைகள் முடமாக்கப்பட்டதாக
புலம்பும் அவன் குரல்களில்
பெண்மையும் ஆண்மையுமற்று
வார்த்தைகள் வெளியேறுவதை
காதுகள்கூட மறுக்கும் சூழலில்
அவனை வெறுக்காதீர்கள்

தெருவெங்கும் தீப்பிடித்த போதும்
வெள்ளச் சூறையாடலில்
ஊர்கள் கலவரம் ஆகும்போதும்
வெறியாடல்களில்
மனிதம் நாராய்க் கிழியும்போதும்
ஒற்றை உயிராய்
உங்களை அவன் தாண்டும் ஓசை
உங்கள் கேட்கும் சக்தியில்
விழுங்கப்படலாம்

போராட்டங்களை அறிவது
அவன் வேலையல்ல என
தவறாக வரைந்து விடாதீர்
மலடாகிப் போன வார்த்தைகளிலும்
மனம் கழண்ட உடலினிலும்
அவன் வழிகளில்
பூக்கள் பூப்பதையே அவன் விரும்பலாம்
குரல்கள் நெறிக்கப்படும் ஓசைகளில்
நீங்கள் எழும் வேளை
அவன் ஓசைகளைத் துறந்து
ஒதுங்கிப் போகவும் செய்யலாம்

புறக்கணித்து விடாதீர்..
அவன் மேனி சிதைக்கப்படும் நேரத்தில்
நீங்கள்
அவனுக்காக குரல் கொடுக்கவும் எழலாம்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment