Friday, February 10, 2017

கார்தரித்த மேகங்களில்




முகம் நோக்கி
நகர்ந்துவரும் என்றார்கள்
ஏனோ...
கார்தரித்த மேகங்களில்
முகம் காட்டாமலேயே
மறைந்து போனது நிலவு..
நின்போலவே!

#முனியாண்டி_ராஜ்.

சிலரது அகராதிகளில் ....


சிலரது அகராதிகளில் ....
===•••===•••===•••===
இவர்களை நீங்கள் 
சோம்பேறிகள் வரிசையில் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டும்
அதிகாலை எழுந்து
அவசரங்களில் அத்தனை கடன்களும் முடித்து
மிதிவண்டியிலோ இன்னுந்திலோ
சாலைகளின் புகைகள் கடந்து
அலுவலகங்களின் கோப்புகளில் புதைந்து
உணவு வேளைகளில் செரிப்புக்காக
எதையோ தின்று
மாலைகளின் முள்நகர்த்தலில்
முகம் வியர்த்து
மீண்டும் சாலைகளின் அல்லல் கடந்து
இல்லம் நுழைந்து
தினசரிச் செலவில் மிச்சம் பார்த்து
நாளைய பொழுதுக்கான திட்டமிட்டு
மீந்துகிடக்கும் அலுவலக வேலைகளில்
மடிக்கணினி நுழைந்து
நிறமற்ற தொலைக்காட்சிகளில் பார்வைகளை
அவ்வப்போது மேயவிட்டு
நள்ளிரவு நட்சத்திரங்களை எண்ணியவாறே
கனவுகள் மறந்த ஓர் உறக்கத்தில்
விழும்போது...
நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்

#முனியாண்டி_ராஜ்.

ஒரு மரணத்தின் பிறப்பு


ஒரு மரணத்தின் பிறப்பு
===•••===•••===•••
ஒரு வெள்ளிக்கிழமையில்
அந்த வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள்
நுழைந்திருந்தது...
தொலைக்காட்சியைச் சுற்றிச் சுற்றி வந்து
தலைக்கு மேல் வட்டமடித்தது..
வெள்ளிக்கிழமை வந்திருக்கு
லட்சுமியாய் இருக்குமென அம்மாவின் சொல்லில்
விரட்ட விரும்பா எண்ணத்தில்
அனைவரும் இருந்துவிட..
ஒவ்வொரு முகமாய் ஒத்தியெடுத்து
வரவேற்பறை சுற்றி இறக்கைகளை
விரித்துக் கொண்டே வந்தது
சற்று உயரே பறக்க நினைத்து
மேல்நோக்கி நகர
சுழலியின் வேகத்தில்
சர்ரென கீழ்நோக்கி இறங்கி..
பிய்ந்த ஒரு இறக்கைப்பகுதி
முகத்தில் அறைந்து கீழே விழ..
அனைவர் விழிகளும் தேடி அலுத்து
வழக்கத்துக்குத் திரும்புகையில்...

புழுவாகவே இருந்திருக்கலாம் அது!

#முனியாண்டி_ராஜ்.

உயிரின் விலை




உயிரின் விலை
===•••===•••
அவன்தான் எனக்கு
அத்துணையும் கற்றுக் கொடுத்திருந்தான்
தூண்டில் தேர்விலிருந்து
வீசும் நுட்பம் உட்பட..
அவ்வப்போது தூண்டில்முள் கட்டும் முறைகளையும்
பலியாகும் இரைகள் கோர்ப்பது வரை...
எங்கெங்கு மீன்கள் துள்ளுமெனவும்
தூண்டில் எவ்வாறு வீச வேண்டுமெனவும்
அவன் அழகாக
கற்றுக் கொடுத்திருந்தான்
சிறுமீனுக்கேற்ற உணவு முதல்
பெரும்மீன்களுக்கேற்ற உணவு வரை
அவன் அகராதி அத்துப்படி

பல சமயங்களில்
அவனுடன் அமர்ந்து மீன்பிடிப்பினும்
என் தூண்டிலில்
எந்த மீனும் சிக்கியதில்லை
தூண்டிலுடும்போது பேசக்கூடாது
மீன்கள் கேட்டு ஓடிவிடும் என்பான்
அதனாலேயே
தும்மலையும் துளியாகவே விடுவதுண்டு
தள்ளி அமர்ந்தே
அவன் தூண்டில் வீசுவதால்
நுட்பம்பல அறியாமலே போனதுண்டு நான்

அனைத்தையும் கற்றுக் கொடுத்திருந்தான்
அவன்..
ஓர் உயிரின் விலையைத் தவிர!

#முனியாண்டி_ராஜ்.

உடையாத_நீர்க்குமிழி




#உடையாத_நீர்க்குமிழி

ஒரு போராட்டத்தின் மிச்சம்
இன்னுமிருக்கிறது
விழுதுகளில் விஷங்களிட்டும்
வேர்களின் ஆழங்கள்
இதயங்களில் ஆழ்ந்து பரவியிருக்கிறது
முறித்து வீசப்பட்ட கிளைகள்
மக்கி மண்ணாகி விட்டதாக
நீங்கள் எண்ணியிருக்கலாம்..
எருவாக வேர்களில் இறங்கியிருப்பது
உங்களுக்குப் புரியாமலேயே இருக்கட்டும்
பொங்கிவரும் நீர்க்குமிழிகளை
அமிழ்த்தும் முறித்தும்
நீங்கள் சிதைத்து விடலாம்
அவதானியுங்கள்
தேங்கும் நீரிலும் ஓடும் நிலையிலும்
உதித்துக் கொண்டே வரும் நீர்க்குமிழிகளை!

#முனியாண்டி_ராஜ்.

#கங்கா_புத்திரன்_நினைவு_பரிசுப்போட்டி

வெள்ளை_என்பது_நிறமல்ல...


===•••===•••===•••===•••
திமிறிக்கொண்டு வெளியேறும்
வெளிச்சக்கீற்றுகளில்
இருளின் குரல்வளை நெறிக்கப்படுவதாய்தான்
நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்
உண்மைகள் கழுத்தறுப்படும்
கொலைகளங்களின் முகங்களும் முகமன்களும்
உங்கள் விழிகள் அறியாமலேயே
நகர்த்தப்படுகின்றன
சர்க்கரை தடவிய உதடுகளிலும்
அமுதம் தோய்த்த முனைகளும்
போதும்
பொய்களின் சுவைகளில்
உங்கள் நா மரிப்பதற்கு..
வெளிச்சங்களில் உங்களை அறிவதற்குமுன்
இருளில் தொலைந்து வாருங்கள்
வெள்ளை எனபது நிறமல்ல..
அது வண்ணக்கலவைகளின் கூட்டு..
கண்ணறியா கறுப்பும்
அதில் சங்கமித்திருக்கலாம்

வெள்ளைகள் துப்பிய உலகில்
மீண்டும்
நுழைய முற்படுகிறேன்...
வெளிச்சக் கீற்றுகளில்
கரும்நுழைகள் பிடித்தவாறே!

#முனியாண்டி_ராஜ்.

மௌனம்

உன் மௌனங்களில்
நான் பயணிக்கும் போதெல்லாம்
ஏதோ ஒரு கவிதை
என்னைக் கடத்திக் கொண்டு 
போய் விடுகிறது

முகநூல் நட்பென்று



நிறமற்ற ஒரு மழையில்
அவனுடன் நடந்தே வருகிறேன்
அச்சுறுத்தல் அகன்ற
அந்த இரவின் விளிம்பில்
என்னைப் போல் 
யாரேனும் ஒருவன் வரக்கூடும்
அவன் கண்ணுக்குத் தெரியாத
என்னையும்
என் கண்ணுக்குத் தெரியாத
அவனையும் சுமந்தே
இந்தப் பாதைகள் நீள்கின்றன
விருப்புகளென்று!!

முகங்கள் தோன்றும்
ஏதாவது ஒரு வெளிச்சத்தில்
முகமன் புன்னகையுமின்றி
நானும் அவனும்
மீண்டும் தொடர்வோம் பயணங்களை...
முகநூல் நட்பென்று!

#முனியாண்டி_ராஜ்.