Friday, May 13, 2016

திடம்


அச்சாணியைத் தளர்த்தி விட்டு
செடிமறைவில் காத்திருக்கிறீர்கள்
நான் குடை சாய்வேன் என்று!
பாய்ந்துவிழும் கதிர்களில்
ஒன்றிரண்டை பாறை இடுக்கில்...
செருகிவிட்டு
சூரியனையே சிரிக்கிறீர்கள்..

என் வளர்ச்சியின் வேகத்தில்
நீங்கள் தடம் புரள்வதை நிறுத்துங்கள்
உங்கள் வீழ்ச்சியில்
நான் மகிழ்வடையப் போவதில்லை..
சண்டையிடும் தருணங்களைக் கடந்து
வருடம் பல ஆகிறது ...
உங்களின் பல ஆமைகளில்
நான் முயலாகவே மாறி விட்டிருக்கிறேன்

என்னை வீழ்த்த வாள்களை
வீசும் போதெல்லாம்
நான் செதுக்கப்பட்டே வருகிறேன்
வார்த்தைகளை வீசும்போதும்
என்னை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்
உங்கள் காழ்ப்புணர்ச்சிகளில்
நீங்கள் தேய்வதை
நானும் கண்டு வியக்கிறேன்..

உங்கள் பாதைகளை விட்டு
விலகிச் செல்வதை
தூரத்தில் நின்றே ரசியுங்கள்...
நன்றி என்ற வார்த்தையாவது..

மிஞ்சும்!!

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment