Friday, May 13, 2016

ஒரு பழைய நாள்குறிப்பில் இருந்து...

 ….
ஒரு நீண்ட மழைக்குப்பின்
கொஞ்சமாய் நனைந்த கதிரவனின் கருணையில்
அந்த வானவில் வந்திருந்தது…...
ஒருசில வண்ணம் கலைந்து
சற்று மங்கி…..
தயங்கித் தயங்கி மேகங்களின் வழி
புது மணப்பெண் போல் எட்டிப் பார்த்துக் கொண்டே
அந்த வானவில் வந்திருந்தது..

எந்த ஒரு புதுச்செய்தியும் இன்றி
அதே வெட்கத்துடன்
ஒரு மெல்லியப் புன்னகையை உடுத்திக் கொண்டே
நாணம் கலந்த விழியில்
…. மீண்டும் கசிய விட்டது
அதே நினைவுகளை..
எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றையும்
நின்று…. படித்துக் கொண்டே
மெல்ல மெல்ல எடுத்துக் கொடுத்தது
பழமை பூசிய ஒரு காகிதத்தை…
படிக்கப்படாமல் விட்ட வரிகளை
முதன் முறையாகப் படித்து
புரிந்த பொருள் புரியா வகை நடித்து
புன்னகையில் பதிலளிக்க முயல்கையில்..
வண்ணம் சிதைந்த வானவில்லை
சட்டென்று மேகம் விழுங்க..
இடறிய பொழுதுகளில் சுதாரித்து எழுந்தேன்..
நானாகவே!
**முனியாண்டி ராஜ்.**

No comments:

Post a Comment