Sunday, May 29, 2016

தவமாய் கிடக்கின்றன


வாசலில் வரிசை பிடித்திருக்கும்
ஒவ்வொரு செருப்பும்
தவமாய் கிடக்கின்றன..
உன் பாதம் சுமக்க!

உன் விழி மோதும்


விபத்து அனுபவம்
இருக்கிறதா எனக் கேட்கிறாய் 
எவ்வாறு சொல்வேன்
உன் விழி மோதும்
ஒவ்வொரு கணமும் காயப்பட்டு
மீண்டும் மீண்டும் உயிர்பெற்றே
வருகிறேன் என்று!

சினத்தின் மெல்லிய விஷங்களில்


ஏதோ ஒரு முகமூடியில்
உருவங்களாய் சுற்றிச் சுற்றிச்
வருகின்றன..
அத்துணைக் கோபங்களையும்
அறுத்தெற முடியா வக்கிரங்களையும்
மனம் அஞ்சும் வஞ்சகங்களையும்
ஒரே முகமூடியில்
எவ்வாறு ஒளித்தீர்கள்..

நீளும் நட்புக் கரங்கள்
குளிர் போர்த்தி
சினம் சுமந்து வருகின்றன
அறியா இழையில் இறங்கும்
சினத்தின் மெல்லிய விஷங்களில்
சுதாரிக்கும் முன்
காயப்பட்டு விடுகிறது மனம்
சிரிப்புகளில் தெறித்த 
உங்கள் சொல் சிலேடைகளைத்
தேடத் துவங்கும் நேரம்...
என்னை நானே
நொந்து கொண்டு விடை பெறுகிறேன்..

உங்கள் முகமூடிகளையே
முகமென்று நம்பியதற்காக!

*
முனியாண்டி ராஜ்.*

பாறைகள் நகரும் நேரம் .....


யாரோ ஒருவன்
இங்கே முகத்தைத் தொலைத்திருக்கலாம் 
முகத்தை மறந்துவிட்டு 
முகமூடியில் புதைந்திருக்கலாம்
இனிப்பு வார்த்தைகளில்
உங்கள் மனம் களவாடலாம்
வெற்றுப் புன்னகைகளில்
வெற்றிக் கொடி 
உங்கள் இதயம் நோக்கிச்
செலுத்தப்படலாம்..
விழித்திருக்கும் வேளைகளிலும்
உங்கள் விழிகளில் ஒன்று
பாதைகள் மாற்றப்படலாம்

உங்களுக்கான குழிகளை
உணரா வண்ணம்
உங்களையே தோண்டச் செய்யலாம் 
உறங்கும் நேரத்தில்
உச்சந்தலை நோக்கி 
பாறைகள் நகரும் நேரம் .....

......
தொலைந்த முகம் மட்டும்
முகமூடியாய் உங்களைக் கடக்கும்! 

*
முனியாண்டி ராஜ்.* 

மழை விட்டும் தூவானமாய்


ஓர் உறக்கத்தின் உளைச்சலாக
தொடர்ந்து கொண்டே இருக்கிறாய் ..
இமைகளை இழுத்தறுக்கும் விரல்களின்வழி
நினைவுச்சரங்களைத் தொடுத்துக்கொண்டே
வருகிறாய்!

நாள்காட்டிகளின் அவசர நகரல்களில்
நகராமலேயே அடம் பிடிக்கும் 
உன் நாணக் குறியீடுகள்!
அவ்வப்போது அழுத்தும் 
அலுப்புகளின் அவசரங்களில்
கொஞ்சம் திருடித் தூங்கினும்
திடீரென விழிக்கும் நாழிகைகளில்
உன் கனவு ஊர்வலங்கள் ...

மழை விட்டும் தூவானமாய்
மனதின் விளிம்புகளில் ஒட்டியிருக்கும்
நம் நாள்களின் வனப்பில்
பயணித்துக் கொண்டே இரசிக்கிறேன்...

களவாடப்படும்
மீந்திருக்கும் கொஞ்சம் உறக்கங்களையும்!

^^
முனியாண்டி ராஜ்^^