பயணங்களும் பட்டறிவுகளும் - தொடர் 1

  தொடர் 1 - ஒரு பையுலாவிப் பயணத்தின் தொடக்கம்

திட்டமிட்ட ஊர்கள்

60 க்குப் பிறகுதான் வாழ்க்கை தொடங்குகிறது (Life starts at 60) என்று ஆங்கிலேயர் கூறுவர். மற்றவர்களுக்கு எப்படியோ 60 க்குப் பிறகுதான் என எனக்கும் தோன்றுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றில் நண்பர் கணேசன் அவர்கள் பையுலாவிப் பயணம்(BACK PACKERS) ஒன்றை மேற்கொள்ளலாமா என ஒரு வினாவை அல்லது விருப்பத்தை முன்வைத்தார். வெகுநாள்களாக இது போன்ற எண்ணம் மனத்தில் நீந்திக் கொண்டே இருந்தது. நான், நண்பர் கணேசன், நண்பர் பார்த்திபன் என மூவர் இணைந்தோம். மூவரை நால்வராக்க திட்டமிட்டு நண்பர் கருணாகரனை இணைத்துக் கொண்டோம்.
முதலில் இந்தியா எனத் திட்டமிட்டு, பிறகு தென்கிழக்காசிய நாடுகளென(தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம்) என மாற்றம் கண்டது. பிறகு அதை விரிவாக்க வியட்நாம், கம்போடியா விலகிக் கொண்டது.
ஒரு 17 நாள்களுக்கான பையுலாவிப் பயணமாக(backpackers) தாய்லாந்து, லாவோசு, சீனா, ஹாங்காங், மக்காவ், தைவான் என கடலோரக் கிழக்காசிய நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதென முடிவெடுத்தோம். பயணத்திட்டம், பயண முன் பதிவுகள், தங்கும் விடுதிகள் முன்பதிவு என அனைத்துப் பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. பயண வருகை அட்டை (நாங்கள் செல்லும்/சென்ற எந்த நாட்டிற்கும் விசா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) போன்றவற்றை நண்பர் திரு.பார்த்திபன் அவர்கள் பார்த்துக் கொண்டார். நான், நண்பர் திரு.கணேசன், நண்பர் திரு.பார்த்திபன், நண்பர் திரு.கருணாகரன் என அனைவரும் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கத் தொடங்கினோம். இதற்கிடையில் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் நண்பர் கருணாகரன் விலகிக்கொள்ள, துங்கு பைனூன் கல்லூரியின் மேனாள் விரிவுரையாளர் திரு.மணிமாறன் அவர்கள் எங்களுடன் இணைந்துகொண்டார்.

நால்வர்

குறிப்பு
*(பையுலாவிப் பயணிகள் என்பவர் எந்தப் பயண முகவரையும் நாடாமல் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பயணம் செய்பவர்கள். ஒரு பெரிய அல்லது நடுத்தர பையில் தங்கள் துணிகளை எடுத்துக் கொண்டு மலிவான முறையில் பயணம் செய்வதோடு ஆடம்பர தங்கும் விடுதிகளையும் தவிர்ப்பர். மேலும், உணவு முறைகளையும் street food எனப்படும் தெருவோரக் கடைகள் அல்லது உள்ளூர் மக்களின் உணவை உண்பர். சுற்றுலா வழிகாட்டிகள் உதவியின்றி, ஒவ்வோர் இடத்தையும் தாங்களாகவே தேடிப் பிடித்துச் செல்வர். இஃது எங்களின் முதல் பையுலாவிப் பயணமாக அமைவதால் முழுவதுமாக ஒரு பையுலாவிப் பயணமாக அமைக்க முடியுமா/அமைந்ததா எனத் தெரியவில்லை).
இந்த நீண்ட பயணத்தில் சா ஆலமிலிருந்து தாய்லாந்து ஹட்ஜாய் வரை பேருந்து, தொடருந்து என எதில் பயணப்பதென விவாதம் தொடங்கி, இறுதியில் பேருந்து கையை உயர்த்திக் கொண்டது. இதற்கான பயணச்சீட்டை நண்பர் பார்த்திபன் அவர்கள் பார்த்துக் கொண்டார். ஹட்ஜாயிலிருந்து பாங்காக் வரை, sleeper train எனப்படும் படுக்கை வசதி கொண்ட தொடருந்துக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்தோம். அதற்குமுன் நால்வர் தங்கக்கூடிய பையுலாவிகளுக்கான அறை ஒன்றையும் முன்பதிவு செய்துகொண்டோம்.
பிறகு, பாங்காக்கிலிருந்து லாவோசு தலைநகரான வியந்தியன், வியந்தியனிலிருந்து சீனாவின் குன்மிங் நகரம், குன்மிங்கிலிருந்து பெய்ஜிங் ஆகியவற்றிற்கான தொடருந்து பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்துகொண்டோம். அடுத்து பெய்ஜிங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு விமானப்பயணம், ஹாங்காங்கிலிருந்து தைவானிற்கான விமானப்பயணம், தைவானிலிருந்து கோலாலம்பூருக்கான விமானப்பயணமென பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்துகொண்டோம். ஹாங்காங்கிலிருந்து மக்காவ் தீவுக்கான விரைவுப் படகு பயணச்சீட்டை அச்சமயம் எடுத்துக் கொள்ளலாமெனத் திட்டம். எங்களின் இந்த எல்லாத் திட்டத்திற்கும் ஒரு முறையான பயணத்திட்டத்தை வரைந்து கொடுத்தவர் யாரெனத் தெரியுமா? நண்பர் செ.நு.

எங்கள் பயணம் (மியன்மார், வியட்நாம், கம்போடிய அல்ல)

இந்த முழுப்பயணத்தில் கிடைத்த பட்டறிவு, சவால்கள், பயணம் செய்ய விரும்புபவர்களுக்கான வழிகாட்டிக் குறிப்புகள், தயார்நிலை, தவிர்க்க வேண்டியவை போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பதே இந்தக் கட்டுரையின் திட்டம். இனி, அடுத்த வாரம் தொடங்கி ஒவ்வொரு நாளும் எங்கள் பயணம் முகநூலில் தொடரும். இனி இதுபோன்ற பயணம் மேற்கொள்வோருக்கு இத்தொடர் நல்ல வழிகாட்டியாக அமைந்தால், அதுவே இக்கட்டுரையின் வெற்றி. காத்திருங்கள்.
- தொடரும்



தொடர் 2 நாள் 1 - ஹட்ஜாய் (பாகம் 1) மலேசியா வந்து நான்கு நாள்களாகிறது. வந்தவுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம். உடல்நலக் குறைவு சுணங்க வைத்துவிட்டது.

பேருந்தில்



5.7.2025 அன்று இரவு 10.30 க்குச் சா ஆலாமிருந்து ஹட்ஜாய்க்குப் பேருந்து பயணம். மதியம் 12.00 மணிக்கு நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணம். மாலை 4.00 மணிக்கு நண்பர் மணிமாறன் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்துவிடுவார். அவரை அழைத்து வர வேண்டும். பயணப் பொருட்களை இன்னும் முழுமையாக எடுத்து வைக்கவில்லை. எப்படியோ நாள் நகர்ந்துவிட்டது. இரவு 10.20 க்கெல்லாம் மனைவியும் மருமகளும் சா ஆலாம் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றுவிட்டனர். நண்பர் பார்த்திபனும் கணேசனும் இரவு 10.30க்கு வந்து சேர்ந்தனர். 10.30க்கெல்லாம் புறப்படுமென சொல்லப்பட்ட பேருந்து 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் நிலையத்தை விட்டு நகரத் தொடங்கியது. மென்மையான சாய்விருக்கை உறங்குவதற்கு ஏதுவாக இருந்தது. பேருந்து அதிவேகமாகச் செல்லவில்லை. மறுநாள் காலை 6.00 மணிக்குக்குதான் மலேசிய தாய்லாந்து குடிநுழைவுச் சாவடி திறக்கப்படுமென்பதால் பேருந்து ஓட்டுநர் அவ்வளவு வேகம் காட்டவில்லை போலும். காலை 6.30 க்கெல்லாம் குடிநுழைவு சோதனைகள் முடிந்த பிறகு, மீண்டும் பேருந்தில் ஏறிக்கொண்டோம். காலை மணி 7.30 க்கு ஹட்ஜாய் பட்டணத்தை அடைந்தோம். மலேசியச் சுற்றுப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் ஹட்ஜாயும் ஒன்று.

‘டுட்டுட்’ எங்களின் டுட்டுட் ஓட்டுநர் தாய்லாந்து தற்காப்புக் கலையான முவாய் தாயில் பல வெற்றிகள் பெற்றவர். பயிற்சியாளரும் கூட. (கவனம்)
முதல் வேலையாக முன்னரே முன்பதிவு செய்திருந்த ஹட்ஜாய்-பாங்காக் விரைவுத் தொடருந்து பயணச்சீட்டை எடுக்க வேண்டும். பேருந்தை விட்டு இறங்கியவுடன் ‘டுட் டுட்’ ஓட்டுநர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டனர். ஒருவர் தொடருந்து நிலையம் சென்று, பிறகு ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த விடுதியில் விடுவதற்கு 1000 பாட்(baht-தாய்லாந்து நாணயம்) கேட்டார். கூகுள் அண்ணனைக் கேட்டேன். தொடருந்து நிலையம் 800 மீட்டர் தூரத்திலும் விடுதி 2.3 கிலோ மீட்டர் தூரத்திலும் இருப்பதைக் காட்டியது. சிரித்தேன். அவர் புரிந்துகொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அதற்குள் இன்னொருவர், ஹட்ஜாய் பட்டணத்தில் பல இடங்களைச் சுற்றிக் காட்டுவதோடு விடுதியிலும் விடுவதாகக் கூறினார். 1500 கூறப்பட்டு 1200 பாட் வந்தார். அந்தக் கட்டணம் எங்களுக்குப் பிடித்திருந்தது.


நாங்கள் தங்கிய a little map Hometel

ஹட்ஜாய் தொடருந்து நிலையத்தில் நண்பர் கணேசன்

தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் முறை மிகவும் எளிதாக இருந்தது. திறன்பேசியில் உள்ள முன்பதிவு எண்ணைக் காட்டியவுடன் பயணச்சீட்டு கைக்கு வந்தது. காலை 11.00 மணிக்கு லிட்டல் நேப் (The Little Nap) எனப்படும் விடுதிக்கு வந்தோம். இதை விடுதியென்று சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் இதை Hometel என்கிறார்கள். நான்கு அல்லது ஐந்து அறைகளே கொண்ட இல்லத்தில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. எனவே, இவற்றை ‘இல்லவிடுதி’ எனலாமா ? (எங்களின் முழுப்பயணத்தில் நாங்கள் தங்கிய இடங்கள் அனைத்தும் பையுலாவிகள் தங்குமிடமாகவே முன்பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.) நல்லவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களைத் தேடிக் காண்பதுதான் பெரும் சவாலாக இருக்கிறது. - நாளை



தொடர் 3 நாள் 1 ஹட்ஜாய் (பாகம் 2) நாங்கள் விடுதியை அடைந்த போது விடுதி உரிமையாளரின் தந்தை எங்களை வரவேற்றார். ஆங்கிலமோ மலாய்மொழியோ சற்றும் அறியாதவர். மனிதனின் தொடக்க மொழியே சைகை மொழிதானே! சைகையால் சமையலறையில் இருந்த மாச்சில்களை(biscuit) அன்போடு உண்ணச் சொல்லியதோடு, தேநீரைக் கலக்கிக் குடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அறை இன்னும் தயாராக இல்லையாதலால் எங்கள் துணிப்பைகளை வரவேற்பு முகப்பின் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு குளித்துவிட்டு வெளியில் கிளம்பினோம். ஒரே ஒரு குளியலறையாதலால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டது. எங்களுக்காக ‘டுட்டுட்’ ஓட்டுநர் காத்துக் கொண்டிருந்தார். முதலில், காலை உணவை உட்கொள்ள வேண்டும். இரவில் தொடருந்தில் சாப்பிட்டது! வயிறு பசிக்காக கதவைத் தட்டிக் கொண்டே இருந்தது. விலையுயர்ந்த உணவகங்கள் வேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டோம். 
A little Nap hometel இன் விடுதி உரிமையாளரின் தந்தை



காலை உணவை முடித்த பிறகு, ஹட்ஜாயில் புகழ்பெற்ற (அவர் சொன்னது) ஒரு புத்த கோயிலுக்குப் பூக்குளியலுக்கு(Mandi bunga) அழைத்துச் சென்றார். பூக்குளியல், கையில் மந்திரக்கயிறு கட்டுவது போன்றவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கையில்லை. சரி, பார்ப்போமே என்று சென்றேன். முதல்முறையாக பூக்குளியல் மேற்கொள்வதால் நடந்த அனைத்தும் கொஞ்சம் கவரக்கூடியதாக இருந்தன. எங்களுக்கு முன் அங்கு நிறைய பேர் இருந்தனர். அதில், நம் தமிழர்களும் இருந்தனர்
பூக்குளியல் மேற்கொண்ட புத்தர் கோயில்








. ஒவ்வொருக்கும் தலா 1200 பாட் வாங்கப்பட்டது.

அடுத்து, அருகாமையிலிருந்த standing Buddha எனப்படும் புத்தர் நின்றிருக்கும் நிலையிலான சிலை, புத்தர் கோயில், நான்கு தலை பிரம்மா கோயில் போன்றவற்றைக் கண்டதிலேயே மதியம் கடந்துவிட்டது. ஓட்டுநர் அழைத்துச் சென்ற ஓர் உணவகத்தில் மதிய உணவை மேற்கொண்டோம். அன்று மாலை 6.45 க்குப் பாங்காங் விரைவுத் தொடருந்து. உண்மையில், ஹட்ஜாயில் இரவைக் கழிக்கும் எண்ணம் எங்களுக்கில்லை. இளைப்பாறவும் மட்டுமே விடுதியை முன்பதிவு செய்தோம். 


மாலை மணி 5.00 மணிக்கெல்லாம் தொடருந்து நிலையம் சென்றுவிட வேண்டும். கிராப் எனப்படும் மின்நகர்வு வாகனத்தை அழைக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, விடுதி உரிமையாளரிடம், “எங்களைத் தொடருந்து நிலையத்தில் விட முடியுமா?” என்று நண்பர் கணேசன் கேட்க அவரும் மறுப்பு கூறவில்லை. ஒரு விடுதி உரிமையாளரே தம் வாகனத்தில் எங்களைத் தொடருந்து நிலையத்தில் வேறு எங்கும் நடந்திருக்குமா எனத் தெரியாது. மாலை 5.45 க்குத் தொடருந்து நிலையத்தை அடைய, தொடருந்து நடைமேடை ஒன்றில் தயாராக இருந்தது. ஒரு சிறப்பான படுக்கை வசதி கொண்ட தொடருந்தில், பயணம் செய்ய எண்ணம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஹட்ஜாய் - பங்காக் தொடருந்தில் பயணம் செய்ய வேண்டும். அஃது உங்களுக்குத் திண்ணமாக மறக்க முடியாத அற்புத பயணமாக அமையும். - தொடரும்

No comments:

Post a Comment

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...