Monday, October 19, 2015

முடிவுறாத வார்த்தைகள்

காப்பிக் கோப்பைகளில் மீந்திருக்கும்
அரையும் முக்காலுமான காப்பி
நம் சந்திப்பின் முடிவை
அறிவித்ததாகத் தெரியவில்லை..
நாசி உச்சத்தில் அமர்ந்திருக்கும்
வார்த்தைகளை
உதடுகள் உச்சரிக்க மறுக்கின்றன..
விழிகளில் ஆசனமிட்டிருக்கும்
வாக்கியங்களைப் படிக்க முடியாமல்
மேஜைகளில் நடனமாடுகின்றன விரல்கள்..
கையொப்பங்களுக்குக் காத்திருக்கும்
மணவிலக்கு பாரங்கள்
நம் மௌனத்தை இன்னும் இறுக்குகின்றன..
"எப்படி இருக்க.. சாரி.. இருக்கிங்க"
என்ற வார்த்தைகளில்
நம் பிரிவின் வடு
இன்னும் ஆழமாக விரிகிறது..
முகம் பார்க்கும் திராணியின்றி
'ம்..ம்..' என்று தரையைப் பார்த்து
சிதறும் வார்த்தைகள்
வெறும் நேரக்கடத்தல்கள் என
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்...
இறுமாப்பா... ??
ஈகோ என்ற ஒற்றை வார்த்தையில்
எதையும் ஒதுக்கித் தள்ள முடியாமல்
முரளும் மனதை இழுக்கும் முயற்சியில்
தானாகவே தோற்று விழுகின்றன
ஒவ்வொரு வார்த்தை வெளிபாடும்!
'பேசிப் பாருங்களேன்..'
என்ற வாழ்ந்து கடந்தோரின்
வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுதான்
இங்கே வார்த்தை விளையாட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறோம்..
இந்த விளையாட்டை முடிக்குமுன்
இறுதியாக...
இன்னொரு முறை
வாழ்ந்தால் என்ன ???

🍁முனியாண்டி ராஜ்🍁

No comments:

Post a Comment