திட்டுகளாகவும் திவலைகளாகவும்
மெலிதாய் நழுவிச் செல்லும்
மழையின் எச்சங்கள்...
இரவை எட்டும்
இந்த மாலையின் குளிரில் ...
புதியதாய் ஒரு வெப்பம்
அறையெங்கும் பரவத் தொடங்குகிறது..
நீ
வீசிவிட்டுச் சென்ற குடை
தலைகவிழ்நது...
கம்பிகளைக் காட்டிக் கொண்டு
சிரிக்கிறது ..
மழையின் நேசத்தாலா..
என்னில் பாய்ந்த கோபத்தாலா..
என்று தெரியாமலேயே...
கழுவாமல் விட்டுச் சென்ற
காப்பிக் கோப்பைகளில்..
ஓரிரு எறும்புகள்..
இனிப்புத் தேடி வந்திருக்கலாம்...
பலகாரங்களைக் கீழே துப்பிவிட்டு
தட்டும் நொறுங்கிக் கிடக்கிறது..
அறையெங்கும் சிதறிக் கிடக்கின்றன
படிக்காத சில புத்தகங்களும்
படித்தும் உறைக்காத
சில வாசகங்களும்!
எப்படியோ போ..
நீ மழையில் நனைந்து செல்லும் அழகில்
என் மனதும் கொஞ்சம் குளிர்கிறது..
இன்னும் சில நேரங்களில்
இந்தச் சாளரங்களின் மீது இரவு படர்ந்துவிடும்..
மின்விளக்குகள் தட்டப்படாமலேயே
அது கடந்தும் சென்று விடலாம் ....
யார் கண்டதும் ..
நாளை என்பது
இன்னுமொரு கனவாகவே அமைந்து விடலாம்....
##முனியாண்டி ராஜ்.
No comments:
Post a Comment