Tuesday, February 23, 2016

ஒரு போர்வீரனின் இறுதி வாக்குமூலம்

தலைப்பு : ஒரு போர்வீரனின் இறுதி வாக்குமூலம்
இம்மடல் உன் கை சேருமா
என அறியேன்
போர் முரசு கொட்டிக் களம் செல்ல

இது மனிதர் காலமல்ல...
இரவின் நிசப்தங்களைக் கிழித்துக் கொண்டு
ஏதாவது எறிபடைகள்
எங்கள் உடலைக் கிழித்தெறியலாம்...
அதற்குள்
உனக்கொரு மடல் வரைந்துவிட வேண்டும்

இரவின் எஞ்சிய வெளிச்சங்களிலும்
காவலுக்குக் காத்திருக்கும்
மிஞ்சிய நேரங்களிலும்
அவசர அவசரமாக எழுதும் வரிகளில்
பிழைகளைப் பார்க்காதே..
திருத்தப்படாத சில பிழைகளைத் திருத்த
இதுவே அதிகம்தான்....
விழிகளை படரவிட்டுக் கொண்டிருப்பதால்
பல வார்த்தைகள் தடம் மாறியிருக்கலாம்..
பொறுத்துக்கொள்....
கருத்து கொஞ்சமேனும் வழி மாறியிருக்காது
கூறப்படாத என் காதலின்
கடைசிப் பக்கங்களாக இவை இருக்கலாம்
என எண்ணிக்கொள்...

உன்னுடன் கழிந்த ஒவ்வொரு பொழுதும்
கண்முன் விரிந்து கொண்டே வருகிறது
கோபங்களில் நீ சுருண்ட
கணங்களாகட்டும்...
நான் கழன்ற பொழுதுகளாகட்டும்
கண்ணீர்விட நேரமில்லை..
நீயும் விடக்கூடாது என்பதற்காக..

இதோ
எங்களுக்கான கட்டளை பிறந்து விட்டது
களத்தில் நுழையும் முன்
இந்தக் கடிதம்
என் இதயத்தின் ஓரம் இருக்கும்
கிடைத்தால் படித்துப் பார்...

ஒரு புதிய சூரியனுக்கான
வேள்வி இது...
என்னையே நெய்யாக விடுவதில்
துளியும் வருந்தவில்லை..
இதோ... இதோ ...

( ஒரு போர் வீரனின் இறுதி வாக்குமூலம் )
என்ற கவிதையின் முதல் பாகம் ..

- முனியாண்டி ராஜ்

3 comments:


  1. மிக அருமையான கவிதை.வெகு நேர்த்தியான நடை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
    2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete