Monday, October 19, 2015

வாழ்க்கைக்கு வெளியே

மரணத்தை வெல்லக்கூடிய
மாந்திரீகர் வந்திருப்பதாக
எல்லோரும் கூறிக்கொண்டார்கள்..
கட்டணத்தில் கை வைத்தபடி
ஊர் முழுக்க பதாகைகளிலும் சுவரொட்டிகளிலும்
சிரித்துக் கொண்டே இருந்தார் அவர்..

நானும் சென்றேன்..

ஐந்து நட்சத்திர விடுதியின்
ஆடம்பர அரங்கின் அரச ஆசனத்தில்
ஆராதனைகளுடன் அவர்..
அரங்குக்கு வெளியே
நிரல் பிடித்து நின்ற பலரில்
வயோதிக கூட்டங்களைவிட
வாலிப வட்டங்களே நிறைந்திருந்தன..
வாழத் துடிப்பதில்தான் மனிதனுக்கு எவ்வளவு ஆசை
குருவின் சீடர்கள் பற்றுச் சீட்டுடன்
வாசலிலேயே வசூலித்தனர் கட்டணத்தை!

‘தினசரி இப்படித் தாங்க கூட்டம் வருது’
என்றவரிடம்
‘அப்படி என்னங்க அதிசயம்’ என்றேன்..
‘கோபத்தை வெல்லும் வழிகளை
அற்புதமாக சொல்கிறாராம்..
புலியாய்ப் போறவனும் பூனையாய் வரான்..

‘ம்..’

‘குடும்பத்தில் மரித்துப் போன மகிழ்ச்சியை
மந்திரத்தால் கொடுக்கிறாராம்..
பத்து வருடம் பிரிஞ்சவன்கூட
பத்து வினாடியில் சிரிச்சிகிட்டே
அணைச்சிகிட்டு போறானாம்’

‘ம்…’

‘பதவி செத்துப் போனவனுக்குப்
பத்து நாளில் புது பதவி உயிர்ப்பிக்குமாம்..
பட்டறிந்தவன் சொல்றான்’

‘ம்…அப்புறம்…’
கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்குத்
தாலிக் கொடிய கையோடு தருகிறாராம்..
கண்டிப்பா கல்யாணம்தான்..

‘ம்..’
வார்த்தைகள் தொடர்வதற்குள்….

சரி…சரி…
இன்னிக்கு முடிஞ்சு போச்சு
நாளைக்கு வாங்க..
உங்க நம்பரை நாளைக்குப் பார்க்கலாம்
என்ற குரலில்
நிலை நிமிர்ந்தேன்…

ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கேங்க…
கண்டிப்பா இன்னிக்குப் பார்க்கனும்
கெஞ்சிய குரலை…. குரலை…
தலைமைச் சீடர் காட்டமாக அடக்கினார்.
‘அதெல்லாம் முடியாது..போங்க..
சாமி ரொம்ப கோவக்காரு..
என்னா சொல்வரென்னே தெரியாது’
பொண்டாட்டிய துரத்தியே
பத்து வருசமாச்சு…

வெந்து விழுந்த வார்த்தைகளில்
நிஜம் நிமிர்ந்தது..
கசக்கிப் போட்ட பற்றுச்சீட்டில்
மரணம் மீண்டும் உயிர்ப்பித்தது..

                                    **””முனியாண்டி ராஜ்**

No comments:

Post a Comment