Monday, October 19, 2015

முகமூடி மனிதர்கள்


முகத்துக்கு முன்னும் முதுகுக்குப் பின்னும்
பாயும் வார்த்தைகளில் நமக்கென்ன மயக்கம்..
ஈட்டியாய் பாயும் சொற்களாகட்டும்
ஈசலாய் மொய்க்கும் கண்டனங்களாகட்டும்..
நமக்கென்ன கவலை...
கூட்டங்களில் கூப்பாடு போடுவதும்
குட்டிச் சுவர்களில் முட்டிக்கொள்வதும்
தொண்டர்கள் வேலையாகட்டும்..
அதைப்பற்றி உனக்கென்ன எனக்கென்ன..

உன்னை நோக்கிப் பாயும்
என் வார்த்தை அம்புகளாகட்டும்
என்னை நோக்கிச் சீறும்
உன் கண்டன ஏவுகணைகளாகட்டும்...
ஒரு நொடியில் மறுத்தெழுத
உனக்குத் தெரியாதா... எனக்குப் புரியாதா...

என் இருக்கையை நீயும்
உன் இருக்கையும் நானும்
தொடாதிருக்கும் வரை....
நமது கைகுலுக்கல்களில் புன்னகையில் மட்டுமே
அமர்ந்திருக்கும்.....

- முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment