Monday, October 19, 2015

இன்னும் நனையாத பொழுதுகள்..


இடியாய் இறங்கினாலும்
மின்னலாய்க் கண்ணடித்தாலும்
ஒரு மெல்லிய மௌனத்தை
அழகாய் ஊடுருவும்
மழையைப் போல் அழகு
வேறெதுவும் இருப்பதாய் தெரியவில்லை...

மழை
வானம் விடும் கண்ணீராக
எப்போதும் உணர்ந்ததில்லை நான்
வெள்ளை மேகங்களைக் களவாடும்
கருமேக அரக்கனாகவும்
பார்க்க முடியவில்லை என்னால்
மொழி பெயர்க்க இயலா
கவிதைகளின் ஊர்வலமாய் மட்டுமே
உணர்கிறேன் நான்..

இதுவரை ...
எந்தப் பாவத்தையும்
கழுவியதாகத் தெரியவில்லை மழை..
உறங்கிய நினைவுகளை அவ்வப்போது
தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கிறது ... மழை!

மழை மட்டும் இல்லாவிட்டால்
எப்போதோ
உன்னைக் கழுவி விட்டிருப்பேன்
என் மனக் கூட்டிலிருந்து ..
காலங்கள் கட்டங் கட்டமாய்
கழற்றப்பட்ட பிறகும்..

இன்றும்
ஏதாவது ஒரு மழை தினத்தில்
ஓர் ஒற்றைக் குடையில்
என்னோடு வந்து கொண்டே
இருக்கிறாய் .....
நீ!!

^^முனியாண்டி ராஜ்^^

No comments:

Post a Comment