Monday, October 19, 2015

படிக்காத பக்கங்கள்



புத்தகங்களோடு புத்தகங்களாக
அதுவும் படுத்துக் கிடந்தது….

தூசுகளில் ஒளிந்து கொண்டு
தலைமட்டும் எட்டிப் பார்த்தது…
அந்தப் புத்தக வெளியீட்டுக்கு 
வரச்சொல்லி நீ அடம்பிடித்தது….
நினைவில் தட்டிச் சென்றது….
தேய்ந்து போன வருடங்களைப் போலவே..
அட்டையின் வண்ணமும்
கொஞ்சம் தேய்ந்துதான் கிடந்தது..

உன் வற்புறுத்தலில் ஏதோ ஒரு வரிசையில்
நான் அமர்ந்திருக்க….
கடந்து போன முகங்கள் எல்லாம்
புதிதாகவே இருந்தன… உன்னைத் தவிர!
பல முகங்களில் புன்னகை பூசப்பட்டிருந்தது…
சில முகங்களில் மட்டுமே புன்னகை பூத்திருந்தது….
வலுக்கட்டாயமாக ஒரு புத்தகத்தைக் 
கையில் திணித்து விட்டுச் சிரித்தாய்…
அந்தச் சிரிப்பு மட்டும் 
இந்தப் பக்கங்களில் எங்கோ பதுங்கியிருப்பதாக தெரிகிறது..
தூசுகளை ஊதிவிட்டு மெதுவாகத் திறந்தேன்..
மை ஒழுகிய பேனாவினால்
உன் உயிரையும் கொஞ்சம் ஒழுக விட்டிருந்தாய்…
உன் பெயரைச் சுற்றிலும்
மை கொஞ்சம் பரவி உன் பெயரை
இன்னும் கொஞ்சம் அகலப் படுத்தியிருந்தது..
நானும் என் பெயரும்
அதில் எங்கோ தேய்ந்து போய்…..
…………………….??????
புத்தகத்தை அப்போதே திறந்திருக்கலாம்…
உன்னையும்தான்!!!
--முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment