Sunday, April 2, 2017

கவிதைகளை இப்படியும் பார்க்கலாம்

கவிதைகளை இப்படியும் பார்க்கலாம்
===•••===•••===•••===•••===••
கவிதை ஒன்று ஆரவாரமேதுமின்றி
காரின் கண்ணாடி வழியே
மெல்லமாய் இறங்கிக் கொண்டிருந்தது
சிவப்பு ஒளிகளைப் பாய்ச்சிக் கொண்டே
வரிசைப் பிடித்திருந்த வாகனங்களின் பின்
நானும்..
இன்றேனோ இந்த நெரிசல்
மிகவும் பிடித்திருந்தது
முன் கண்ணாடி வழி இறங்கிய
கவிதை வரிகளையோ
பக்கவாட்டுகளில் துளித்துளியாய்
உதிர்ந்த சொற்களையோ
விழிகள் விலக மறுத்து அமர்ந்திருந்தன

தரை விழும் துளிகள் மண்கலந்து
நிறம் மாறி நழுவி போயிருக்கலாம்
வழியில் எங்கேனும் விழுந்து
முடமாயிருக்கலாம்
விதைகள் ஏதேகிலும் பாய்ந்து
விருட்சங்களுக்குள் பதுங்கியிருக்கலாம்
அங்கீகரிக்கப்படாத கவிதைகள் போல்
காலம் அவற்றின் சாரை உறிஞ்சி
வீசியும் போட்டிருக்கலாம்

எப்படியோ..

இக்கணம் வழியும் துளிகளை மட்டும்
படித்துக் கொண்டே வருகிறேன்

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment