Wednesday, April 5, 2017

மௌன விடுதலைகளில்...


அவன் பேசிய கடைசி வார்த்தை
அவனுக்கு மறந்து போயிருக்கும்
இந்நேரம்!
அவன் நினைவுக் கதவுகள்
தட்டியோ
ஞாபகச் சன்னல்களில் ஒட்டி உரசியோ
உங்கள் முயற்சிகளில்
சறுக்கிக் கொண்டே வருகிறீர்கள்

அவன் தொண்டைக்குழியின்
கடைசிச் சொற்களும்
உதடுகளோரம் ஒட்டியிருந்த
இறுதி எழுத்தும்
இழுத்து வீசப்பட்ட பிறகு
அவன் மௌனியாகி விட்டான்
அவன் தெருக்களில் நகரும்
வாக்கியங்கள்கூட
முக்காடிட்டுப் போவதாகவே
பேசிக் கொள்கிறார்கள்

ஏதோ ஒரு நிறத்திற்குள்
அவன் குரல்வளை நெறிக்கப்பட்டதாக
உடனிருந்தவர்கள் கூறுகிறார்கள்
ஊடகப் பந்தயங்களில்
அவன் குரல்கள் மேய்க்கப்படுகின்றன
வாசல்முன் குவிந்தொழுகும்
ஒலிகளும் ஒளிகளும்
அவன் தனிமையைச் சிதைப்பதாகவே
அவன் கருதுகிறான்

கறுப்புக் கொடிகளிலும்
சிவப்புக் கொடிகளிலும்
வார்த்தை வெடிகள் வீசியவன்
வெள்ளைக் கொடிகளில் மருண்டதெப்படியென
வாக்கு வாதம் நடத்துகின்றன
கொடியற்ற கம்பங்கள்

புரட்சிகள் புதைக்கப்பட்ட
வரலாறு அறிந்தவர் மட்டும்
மௌனியாகிக் கொண்டே வருகிறார்கள்

அவனைப் போலவே!

No comments:

Post a Comment