Sunday, April 2, 2017

#முதலாளித்துவம்_இங்கே_முகாமிட்டிருக்கிறது

#முதலாளித்துவம்_இங்கே_முகாமிட்டிருக்கிறது
===•••===•••===•••===•••===•••===
கொஞ்சம் வானமும்
மீதமிருந்த உடைந்த நிலாவின்
ஒரு பாகமும் மீதமிருந்ததாய்
சொன்னார்கள்

நிலங்களெல்லாம் கூறுபோட்டு
விற்றுத் தீர்த்த பின்னும்
ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும்
முள்வேலிகள் அமைத்த பின்னும்
மலைகளுக்கும் மடுக்களுக்கும்
உரிமை மாற்றிய பின்னும்
கடலின் சில பாகங்கள் மட்டும்
விலைக்கு இருப்பதாக
அவர்கள்தான் சொன்னார்கள்

பாதைகளில் வரிகள் கட்டிவிட்டு
கடலுக்குள் இறங்க நினைத்தவர்களுக்கு
அலைகளின் விலைகள்கூட
கொஞ்சம் அநியாயமாய்தான் பட்டது
கரையில் கால்வைத்து
கட்டணம் மறந்தவர்கள் கழுத்துக்கும்
கயிறு தயாராகவே இருந்தது

நசுங்கிக் கடந்த பொதுவுடமையின்
முதுகில்
நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது
முதலாளித்துவம்....
கண்கள் மறைக்கப்பட்ட மனிதம்
மட்டும்...
தடுமாறி... தடுமாறி...

சே..
எச்சரிக்கைப் பலகையைப்
பார்த்து விட்டாவது உள்நுழைந்திருக்கலாம்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment