Sunday, April 2, 2017

மௌன அடவிகளில் மனம்

மௌன அடவிகளில் மனம்
===••===••===••===••===
உனக்கான கணங்கள்
உயிர்ப்புடன் இன்னும் இருக்கின்றன
மௌனம் தரித்த வனங்களின் ஊடே 
எதையோ தேடி விரைகிறது
சத்தமற்ற ஒரு பொழுது

இரைச்சல் நிறைந்த சாலைகளூடே
கவனம் பதிந்தே இருக்கிறது
அடிக்கடி பக்கத்து இருக்கைகளில்
விழிகள் விழுந்தெழுந்து
மீண்டும் ஓர் ஏக்கப் பெருமூச்சில்
சாலைகளில் போய் விழுகின்றன

அடவிகளின் ஆர்ப்பரிப்பற்ற மடிகளில்
மனம் அமர்ந்து தியானிக்கும் பொழுது
திடீர் உறக்கம் கலைப்பவன்போல்
சடாரென நினைவுகளால்
அறைந்து போகிறாய்
எங்கிருந்தோ பாறை மோதிவிழும்
அருவிகளின் ஓசைகளில்
என்னைச் சேர விடாமலேயே விரட்டுகிறாய்

செவியறையும் வாகன ஒலியெழுப்புகளில்
அடிக்கடி நிஜத்திற்கு வருகிறேன்
திடீரென ஏதும் வாகனம் நிற்கலாம்
தடுப்பம் மீறி சிறு விபத்தும் வரலாம்
எச்சரிக்கைகளில் மனம் விழிக்கிறது
வளசைகளில் இறுகிய கரங்கள்
வரவை மெய்ப்பித்தே நகர்கின்றன

ஒரு வாகன நெரிசலை
மனம் வேண்டிக் கொண்டே வரைகிறது
அடர்ந்த அந்தக் காடுகள் நோக்கி
அது விரைய!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment