Sunday, April 2, 2017

என் முடிவல்ல நீ


என் முடிவல்ல நீ ...
===•••===•••===••
என் இறுதிக் கோரிக்கையை
உன்முன் வைக்கும்வரை
நேரங்களைச் சிதைத்துச் சிந்தித்தேன்
உயில் எழுத
உயிரைத் தவிர வேறெதுவுமில்லை ..
எழுத முயன்று
கசங்கி எறிந்த காகிதங்களும்
முனை உடைந்து அழுத
பென்சில்களும்
தொட முடியாத ஒரு துவக்கத்தின்
சிதறல்களே..

வயதினை அணுஅணுவாக உறிஞ்சிய
வருடங்களில்
நீ வளர்ந்து விட்டாய்..
நான் முடங்கி விட்டேன்..
அகவையை ஆண்ட காலம் போய்
அகவைகள் என்னை ஆளும் நேரம்
நான் வறண்டிருப்பேன்..
ஒடுங்கிப் போன நோவுகள்
ஓடிவந்து ஒட்டலாம் ..
ஒட்டிய உறவுகள்
சற்று ஒதுங்கி நடக்கலாம்..

என் முடிவல்ல நீ
ஒரு தொடக்கத்தின் சுணக்கமே
எனக்கான பாதைகளை வரைய முடியா
வயதென்று புறந்தள்ள முயல்கையில்
விரல்களால் நடை பழகும் நேரம்
விழிகளில் விழும் பள்ளங்களில்
மீந்தே இருக்கின்றன
நான் சேகரித்த புன்னகைகளும்
கொஞ்சம் நட்புகளும்

பிரித்தெடுக்க முடியா ஒரு
வலையினில்
இன்னும் சிக்கியிருப்பதை உணர்கிறேன்
உதறிச் செல்ல உயிரன்று
அது உறவு ...
ஏக்கங்களில் கொஞ்சமாய் ஒட்டியிருக்கின்றது
உன் பிறவி அழுகை
என் அழுகையின் தொடக்கத்திற்கு

சரி..
வயோதிக காரணத்தில்
என் வழிகளை இழுத்து மூடி விடாதே..
தனித்து நிற்க தென்னையாய் அல்ல..
நாராய் நலிவுற்றிருப்பேன்
கொடியாய் துவண்டிருப்பேன்..
படர்வதற்கு ஒரு கொம்பாவது..
கொடுத்து விடு..
அது
எதுவாக இருப்பினும் !!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment