Sunday, April 2, 2017

காலம் தோற்ற நுட்பம்

காலம் தோற்ற நுட்பம்
===••===•••===••=
நான் கூற மறந்தவற்றையும்
எழுதும் போது
வார்த்தை நழுவியவைகளையும்தான்
அவள் எதிரொலியாய் அறைந்து போனாள்
அவசரங்களில் இடைமறித்த
அவள் கனவுகளின் வரிசைகளில்
நான் நிதானமிழந்தவற்றைக் கோடிட்டும்
தவறிப் போன நினைவுத் திகதிகளில்
என்னைத் தாழிட்டும்
சிரிக்க மறந்த துணுக்குகளில் சிறையிட்டும்
என்னைச் சிக்க வைத்த வெற்றியில்
சிறையிட்டும் போனாள்
அமைதியில் ஆழ்ந்திருந்த கைப்பேசிகளில்
அவள் அழைப்புகள் உறங்கிப் போனதில்
அப்படியொரு கோபம் அவளுக்கு..
தவறிய அழைப்புகளில்
வருந்திய பொழுதுகளைப் படிக்கவும்
அவள் தயாரில்லை
சுருங்கிய மொழிகளில் சுணங்கிய என்னையும்
அவள் சுருக்கி விட்டாள்

கைப்பேசிகளும்
காலம் தோற்ற நுட்பங்களும் கடந்து
களம் புகுந்தால்
நிலைக்கும் ஓர் உறவில்
நானும் நீடித்திருக்கலாம்..

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment