Monday, April 17, 2017

சூரியன் மேயும் சமவெளிகள்

சூரியன் மேயும் சமவெளிகள்
===•••===•••===•••===
சூரியன் மேயும்
இந்தச் சமவெளிகளுள்
எதிர்காலங்களைக் கேள்விக்குறியாக்கவே
வந்து ஜனித்தாயோ மகளே
என் இறந்த காலங்களை
வருடங்கள் மீட்டுக் கொடுக்கும் ஏற்பாடுகளில்
நீ எப்படி விழுந்தாய்..
என் வழிகள் யாவும் அடைக்கப்பட்ட பின்னும்
எவ்வழியில் உன்னை நான்
கரையேற்றுவது..

எனது பாவங்களின் சாபமா
அல்ல
உன் சாபங்களின் கண்ணீரா இது..
எதுவெனத் தெரியாமலேயே
இருள் அடர்ந்த ஒரு வெளியில்
புதைந்து கொண்டே வருகிறேன்
உன்னையும் சுமந்து கொண்டே..
எந்த இறைவனும் கண்ணுக்குத் தெரியா
மனிதம் அற்ற முகங்களில்
உனக்காவது ஒருவனைத் தேடுகிறேன்..
என் சுமையல்ல கண்ணே நீ
உன் சுமையாகவே நான் !!!!

என்னைக் கிழித்தெறிந்த பாதைகளில்
உன்னை எப்படி நடக்க விடுவது
மடி கனத்தும் மனம் மறுதலிக்கிறது..
உன்னை இறக்க..
நானும் இறக்க!
சூரியன் சுட்டு கருத்ததல்ல
நம் தேகம்...
வறுமையின் இன்னொரு பக்கம் இது!
உன் பாதம் பட்டு
பூமியாவது எரியாமலிருக்கட்டும்...

பசி போக்க வெள்ளை மனதுகள்
வரும் வரை ...
கன்னம் கிழிக்கும்
என் கண்ணீரைப் பருகிக் கொள்..
இதையன்றி வேறெதுவுமில்லை
என்னிடம்

அது குருதியாகவே இருந்தாலும்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment