Sunday, April 2, 2017

இரக்கம்


ஒடுங்கிய வயிறும் ஒடிந்த உருவமுமாய்
வீதியோரம் வீற்றிருந்தது அந்த உருவம் 
கிழிசல் ஆடைகளும்
முகம் கிழித்த மயிர்களும்
வறுமைக்கு விலாசம் கொடுத்தன..
காலொன்று இல்லாமையைத்
தாங்குக் கட்டையும்
கையொன்று கழன்றதைத்
தொங்கிய சட்டையும் !

ஐயா........
உதடுகள் காய்ந்த குரலில்
யாசகம் கெஞ்சலாய் வழிந்தது..
தகரக்குவளையின் சிணுங்கிய சத்தங்கள்
சில்லறைகள் ஓரிரண்டைக் கூறின..
அலட்சியப் பார்வையில் அவனை வெறித்து
சாலையைக் கடந்தேன்..

குளுகுளு காரில் வெயில் மறந்து
வீடு அடைந்தும்...
காதோரம் கேட்டுக் கொண்டே வந்தது
அந்தச்
சில்லறைச் சத்தங்கள் !!!

**முனியாண்டி ராஜ்.**

No comments:

Post a Comment