Wednesday, December 30, 2015

மனம் நழுவும் சில பொழுதுகள்



தூரம் தெரியாத ஏதோ ஒரு திசையில் நின்று கொண்டு
கையசைத்துக் கொண்டே இருக்கிறாய்…
காலம் தேய்த்துப் போட்ட
நினைவுகளின் பக்கங்களில்
ஏதோ தட்டுப்போடுவது போல்!

முகநூல்களின் அழைப்புப் பக்கங்களில்
பல தடவை உன்னை நிராகரித்தும்
நீ எப்போதும் போல்
கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறாய்…
உனக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை!

மனதிலின்று நீ கழன்று கொண்ட பிறகு
என் விரல்கள்
உன் முகவரிகளைத் தீண்டியதே இல்ல….
உன் பக்கமிருந்து வீசும் காற்றைக் கூட
கவனமாய் விலக்கியிருக்கிறேன்….

ஏதோ ஒரு சந்திப்பில்
நமது பார்வைகள் விபத்துக்குள்ளாகலாம்..
அதுவரை..
என்னைக் கவனமாய் பூட்டியே வைத்துக்கொள்கிறேன் !!!

என்னிலிருந்து நானே நழுவும் வரை!!!
…..முனியாண்டி ராஜ்

Tuesday, December 29, 2015

ஆமாம்களின் இல்லைகள்


^^ஆமாம்களின் இல்லைகள்^^

ஆமாம் என்பவை எல்லாம் 
ஆமாம்களாகவே எப்போதும் இருந்து விடுவதில்லை ..

பல ஆமாம்களில் இல்லைகளும்

பல இல்லைகளில ஆமாம்களும்

மறைந்தும் உறங்கலாம்.....

தேவைக்கேற்ப சில ஆமாம்கள்

காசுக்கேற்ப சில ஆமாம்கள்

பதவிக்கேற்ப சில ஆமாம்கள்

பயத்திற்கேற்ப சில ஆமாம்கள்

எப்படியோ ..

இல்லைகளில் சிக்கும் சில ஆமாம்கள் 

தலையசைத்தலிலாவது தங்கள் ஆமாம்களைப் பதித்து விடுகின்றன.. 


சங்கடங்களில் நெளியும் சில இல்லைகளுக்கு

ஆமாம்கள் மௌனத்தில் விடையளித்து விடுகின்றன..

மௌனம் என்பதும் ஓர் ஆமாம்தான் என்று


எழுதப்படாத அகராதியில் இருக்கிறதாம்…

இல்லைகளைப் பதுக்கும் மௌனங்களைப்போல்

ஆமாம்களைப் பதுக்க முடியவில்லை..

பல வேளைகளில்!!!

                                                 ^^முனியாண்டி ராஜ்^^

Tuesday, December 15, 2015

கண்களின் கைதி

^^கண்களின் கைதி^^
ஏதோ ஒரு திருப்பத்தில்
என் கவனம் கவிழ்ந்திருக்கலாம்..
சில நொடிகளில் பாதைகளை மறந்து
பாதங்கள்  மாறத் தொடங்கிய போதே
நான் விழித்திருக்க வேண்டும்
நிராகரிப்புகளின் வாசலில்
கொஞ்சமாவது நின்று பார்த்திருக்க வேண்டும்.
இல்லை….
இல்லை….

அந்த விழிகளில் சிக்குண்ட மனம் மட்டும்
மீட்கப்படாத கைதியாய் சிக்கியிருக்கிறது..
விலாசம் தொலைத்த கடிதம் போன்று
ஒவ்வொரு வாசலாய் எட்டி எட்டிப் பார்த்து
திரும்பிக் கொண்டே இருக்கிறது..
அதுவரை…
உன் விழிகளின்
உன் கைதியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

-       முனியாண்டி ராஜ்.

Tuesday, November 24, 2015

ஒரு விடியலின் கதவருகே


மழைச்சாரலும் நீயும்


தமிழ்ப்பள்ளியே என் தேர்வு



மீண்டும் ஒலிக்கத் தொடங்கும்
அதே குரல்கள்..
உலக மொழிகளின் தாய் 
மடிப்பிச்சை ஏந்தி நடப்பாள் ..
நவம்பரும் டிசம்பரும்
பத்திரிக்கைகள் பலபலவாய்
படங்கள் போட்டு அழைக்கும்..

தமிழ்ச்சார்ந்த அழைப்புகளின் பதாகைகளில் ..
தமிழ்த்தாயும் கொஞ்சம்
நிழல் கேட்பாள்...
வாய் திறக்கா தலைவனும்
கடமையில் பல் காட்ட ...

களைப்பில் அமர்ந்த தமிழ்த்தாயோ
அலுத்துக் கொண்டாள்..
அட பாவிங்களா..
இத வருட முழுக்க
செஞ்சித் தொலைக்கக் கூடாதா ..

^^முனியாண்டி ராஜ்^^

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு


Saturday, November 21, 2015

மீண்டும் நான்

^^மீண்டும் நான்…^^
நானே தான்…
4  ஏக்களில் ஆறாம் ஆண்டில்
தடுக்கி விழுந்த நானேதான்…
அப்பொழுது எந்தக் கேமிராக்கிளிலும்
நான் சிக்காமல் ஒதுக்கப்பட்டது நினைவிருக்கிறது..
அந்த வலியின் வடு
இன்னும் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்திருக்கிறது..
எந்தப் பத்திரிக்கையும்
என் முகத்தை எடுத்துச் சிரிக்கவில்லை..
பின்வரிசையில் நிற்கக்கூட பள்ளிகள் தள்ளிவிட்ட பிறகு
பத்திரிக்கையை நொந்து என்ன பயன் சொல்..

நானேதான்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறேன்..
ஆறாம் ஆண்டின் வலி
என்னைச் செதுக்கிச் சிலையாக்கியிருக்கிறது…
இப்போது எந்தப் பத்திரிக்கையும்
என் வெற்றிப் புன்னகையைக் கேட்கவில்லை..
எந்த வரிசையிலும் நான் முன்னிலைப்படுத்தப்படவில்லை..
தாமிகளிலும் தன் புகழ்ச்சிகளிலும் மட்டுமே
என்னை புதுப்பித்துக் கொள்கிறேன்..
அந்நிய மொழியில் படிவம் 5 இன்
நேரடி ஏக்களாக அறிமுகப்படுத்தப்படுகிறேன்..
அந்நிய ஆசிரியர்களின் கைக்குலுக்கல்களில்
என்னை நானே குளிர்த்துக் கொள்கிறேன்..

பல்கலைக்கழகங்கள்..
எனக்கான பாதைகளை இலவயமாக
திறத்து வைத்திருக்கின்றன..
அரசாங்கத்தின் ஆதரவு நிதிகளில்
என் குடும்பமும் குளிர் காயலாம்…

……………………………..இருந்தும்
என்னைச் செதுக்கிய இந்த வடுவை
இன்னும் தடவிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்..!!

-      முனியாண்டி ராஜ்.

Monday, October 26, 2015

என் வாழ்க்கைக்குள் நான்....



என் வாழ்க்கையின் ஓரமாக
கொஞ்சமாவது நடந்து வந்திருக்கிறாயா..
என் கவலைகளுள் சிறிதேனும்
எட்டிப் பார்த்திருக்கிறாயா..

என் மகிழ்ச்சியின் தருணங்களில்…
என் விசனத்தின் அழுகைகளில்….
என் வெற்றியின் களிப்புகளில்…
என் தோல்வியின் துவண்டல்களில்…
ஏதேனும் ஒன்றில்
உன் முகத்தைக் காண்பித்திருக்கிறாயா..

என் தோளில் கைவைத்து
என்னை ஆறுதல் படுத்தியோ...
என் முதுகில் தட்டிக் கொடுத்து
என்னைப் பாராட்டியோ..
என் கண்ணீரில்
உன்னையும் கரைத்துக் கொண்டோ….
ஏதேனும் ஒன்றில்
என் மனதில் தடம் பதித்திருக்கிறாயா..

என் காயங்களின் வலிகளில்
உன் மனதும் வலித்திருக்கிறதா…
என் விரல்களின் காயங்களில்
உன் விரலும் வடித்திருக்கிறதா குருதி..
என் புன்னகைகளின் அதிர்வுகளில்
நீயும் கலைந்திருக்கிறாயா…

சொல் நண்பா …
நான் வாழ்ந்த வாழ்வின் தடங்களை
சொல்….
எனக்கு முகமன் சொல்வதிலும்
என் முதுகில் செருகுவதற்கும் நேரத்தை விடுத்து…
என் அடுத்த வாழ்விற்கான அடிகளை
நீயே எடுத்துக் கொடு!
அதுவரை….

என் வாழ்வை நானே வாழ
எனக்கு வழிவிட்டு விலகு!


                                  ^^^முனியாண்டி ராஜ்^^^

Wednesday, October 21, 2015

கலையும் கனவுகள்


வெள்ளிக் கம்பிகளாய் நீண்டு இறங்கி..
முகத்தில் குத்திவிட்டு
மௌனமாய் கலைந்து போகிறது
மழை..
தூவும் ஆரவார இசையில்
மனம் ஒன்றி..
குடையை வீசிவிட்டு
கைகளை வீசி நடப்பதில்
கால்களில் முளைக்கிறது இறக்கை..
மழையின் எண்ணங்களில்
விரட்டி விரட்டி பிடிக்கும்
கற்பனைகள் விரல்கள்...
சட்டென்று முடமாகின்றன..
"மழையிலா விளையாடுற.. இரு வரேன்"
என்ற வார்த்தைகளில்
மடாரென உடைந்து விழுகிறது
குழந்தைக் கனவுகள் ...
... முனியாண்டி ராஜ்.

இன்னும் அந்தக் கனவு ......


கண்ணாடிச் சாளரங்களில்
திட்டுகளாகவும் திவலைகளாகவும் 
மெலிதாய் நழுவிச் செல்லும்
மழையின் எச்சங்கள்...
இரவை எட்டும் 
இந்த மாலையின் குளிரில் ...
புதியதாய் ஒரு வெப்பம்
அறையெங்கும் பரவத் தொடங்குகிறது..

நீ
வீசிவிட்டுச் சென்ற குடை
தலைகவிழ்நது...
கம்பிகளைக் காட்டிக் கொண்டு
சிரிக்கிறது ..
மழையின் நேசத்தாலா..
என்னில் பாய்ந்த கோபத்தாலா..
என்று தெரியாமலேயே...

கழுவாமல் விட்டுச் சென்ற
காப்பிக் கோப்பைகளில்..
ஓரிரு எறும்புகள்..
இனிப்புத் தேடி வந்திருக்கலாம்...
பலகாரங்களைக் கீழே துப்பிவிட்டு
தட்டும் நொறுங்கிக் கிடக்கிறது..

அறையெங்கும் சிதறிக் கிடக்கின்றன
படிக்காத சில புத்தகங்களும்
படித்தும் உறைக்காத
சில வாசகங்களும்!

எப்படியோ போ..
நீ மழையில் நனைந்து செல்லும் அழகில்
என் மனதும் கொஞ்சம் குளிர்கிறது..
இன்னும் சில நேரங்களில்
இந்தச் சாளரங்களின் மீது இரவு படர்ந்துவிடும்..
மின்விளக்குகள் தட்டப்படாமலேயே
அது கடந்தும் சென்று விடலாம் ....

யார் கண்டதும் ..
நாளை என்பது
இன்னுமொரு கனவாகவே அமைந்து விடலாம்....

##முனியாண்டி ராஜ்.

சாரல்களில் நீ......


மழையின் சாரலில்
சரிந்து கொண்டே வருகிறாய் நீ!
நினைவுகளை நிறுத்த முடியாமல்
நீரில் விழுந்த எறும்பாய்
தத்தளிக்கிறது மனது...! 
ஜன்னலுக்கு வெளியிலிருந்து
வீசப்படும் பார்வைகளில்
பனிகளாகவே படர்ந்து வருகிறாய்
நீ...
மழை நின்றும் ...
இன்னுமொரு வெள்ளம்
எனக்குள் கரை புரளலாம்!
வழக்கம் போலவே!!!!

Monday, October 19, 2015

உடையாத மௌனங்கள்

இன்னும் சில பொழுதுகள்
எஞ்சியிருக்கின்றன....
இரவுகளுக்குள் மெல்ல மெல்ல
தேயும் ..
இந்தப் பகல்களுக்குள் நாம் 
கரைந்து போவதற்குள்!

அவ்வப்போது வந்து
கால்களைச் சீண்டும் அலைகளாகட்டும்
வளைகளுக்குள் இருந்து
எட்டிப் பார்க்கும் நண்டுகளாகட்டும்..
எதையும் சட்டை செய்யாமல்
அதன்போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது
நமது பொழுதுகள் ...

உன் மௌனத்தை
உடைத்துப் பார்க்க முடியாமல்
கடலின் தூரங்களுக்குள்
கலைந்து போகின்றன என் விரல்கள்..
வெறிச்சோடிக் கொண்டிருக்கும் மணல்வெளிகளில்
வார்த்தைகளைத் தேடித் தேடித் திரும்புகின்றன..
நம் நான்கு விழிகளும்!

கழிந்து போன
எத்தனையோ ஞாயிறுகளைப் போல தான்
இன்றைய பொழுதும் கழிகிறது..
பரவாயில்லை ....
உன் மௌனம் உடையும்
அந்த ஒரு ஞாயிறுக்காக !!

#முனியாண்டி ராஜ்.

தேடல்கள்

ஒவ்வொரு முகமூடியாய்
போட்டுப் பார்க்கிறேன்..
எதுவும் எனக்கு ஏற்றதாய் தெரியவில்லை..
வேடம் தரித்து
அவர்களோடு நானும் நடந்து பார்க்கிறேன்
நிர்வாணமாய் நிற்க வைத்துவிட்டு
கூட்டம் வெகுதூரம்
முன்னே சென்று கொண்டிருக்கிறது..

புன்னகைகளை இரவல் பெற்று
கொஞ்சம் சிரிக்கப் பார்க்கிறேன் ..
எண்ணெயில் ஒட்டாத நீர்த்துளிகளாய்
அவை சறுக்கிப் போகின்றன ....
நடைகளை மாற்றிக் கொண்டும்
உடைகளை அமைத்துக் கொண்டும்
கொஞ்சம் கலந்து பார்க்கிறேன் ..
கவனமாக கழட்டப்பட்டு
காத தூரத்தில் வைக்கப்படுகிறேன்..

மரங்களாய் மாற முடியாமல்
மீண்டும் மனிதனாக உயிர்த்தெழுந்தால்..
மொத்தமாக ஒதுக்கிவிட்டு நடக்கிறது
உலகம் !!!

பிரிவின் விளிம்புகள்


நீ 
இல்லாத அந்தப் பொழுதுகள்

வானம் 
கருமையைப் பூசிக் கொண்டு
கண்ணீர் விடக் காத்திருக்கும்
வானவில்லை ஒடித்து
வாசல் ஓரம் போட்டிருக்கும்
காற்று!

மனதோரம் ஒரு மெல்லிய இசையாய்
ஏக்கம்
ஏதோ ஓர் பாடலில் மூழ்கியிருக்கும்
காலண்டர் தாள்கள் கிழிக்கப்படாமல்
கரங்கள் சோர்ந்து கிடக்கும் ...
போர்வைக்குள் தூக்கம்
திணறிக்கொண்டிருக்கும்..
செல்போன் குறுந்தகவல் அனைத்தும்
குற்றமாய்ப் போகும்
உன் பெயர் இல்லாமல்!
அழைக்கும் குரல்கள்
உன் வாசமின்றி
வாடையை முகத்தில் வீசிவிட்டுப் போகும்..

தொலைக்காட்சி அலைவரிசைகள்
மாறி மாறி..
கண்களைத் தானாக மூடிக்கொள்ளும்

நீ இல்லாத பொழுதுகள்...

தாய்வீட்டுக்குப் போவதாய்
நீ சொல்லிவிட்டுச் செல்லும்
போதெல்லாம் ...

என்னில் நானே தொலைந்த
வனாந்திரங்கள்...

^^முனியாண்டி ராஜ்.^^

இன்னும் நனையாத பொழுதுகள்..


இடியாய் இறங்கினாலும்
மின்னலாய்க் கண்ணடித்தாலும்
ஒரு மெல்லிய மௌனத்தை
அழகாய் ஊடுருவும்
மழையைப் போல் அழகு
வேறெதுவும் இருப்பதாய் தெரியவில்லை...

மழை
வானம் விடும் கண்ணீராக
எப்போதும் உணர்ந்ததில்லை நான்
வெள்ளை மேகங்களைக் களவாடும்
கருமேக அரக்கனாகவும்
பார்க்க முடியவில்லை என்னால்
மொழி பெயர்க்க இயலா
கவிதைகளின் ஊர்வலமாய் மட்டுமே
உணர்கிறேன் நான்..

இதுவரை ...
எந்தப் பாவத்தையும்
கழுவியதாகத் தெரியவில்லை மழை..
உறங்கிய நினைவுகளை அவ்வப்போது
தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கிறது ... மழை!

மழை மட்டும் இல்லாவிட்டால்
எப்போதோ
உன்னைக் கழுவி விட்டிருப்பேன்
என் மனக் கூட்டிலிருந்து ..
காலங்கள் கட்டங் கட்டமாய்
கழற்றப்பட்ட பிறகும்..

இன்றும்
ஏதாவது ஒரு மழை தினத்தில்
ஓர் ஒற்றைக் குடையில்
என்னோடு வந்து கொண்டே
இருக்கிறாய் .....
நீ!!

^^முனியாண்டி ராஜ்^^

முகமூடி மனிதர்கள்


முகத்துக்கு முன்னும் முதுகுக்குப் பின்னும்
பாயும் வார்த்தைகளில் நமக்கென்ன மயக்கம்..
ஈட்டியாய் பாயும் சொற்களாகட்டும்
ஈசலாய் மொய்க்கும் கண்டனங்களாகட்டும்..
நமக்கென்ன கவலை...
கூட்டங்களில் கூப்பாடு போடுவதும்
குட்டிச் சுவர்களில் முட்டிக்கொள்வதும்
தொண்டர்கள் வேலையாகட்டும்..
அதைப்பற்றி உனக்கென்ன எனக்கென்ன..

உன்னை நோக்கிப் பாயும்
என் வார்த்தை அம்புகளாகட்டும்
என்னை நோக்கிச் சீறும்
உன் கண்டன ஏவுகணைகளாகட்டும்...
ஒரு நொடியில் மறுத்தெழுத
உனக்குத் தெரியாதா... எனக்குப் புரியாதா...

என் இருக்கையை நீயும்
உன் இருக்கையும் நானும்
தொடாதிருக்கும் வரை....
நமது கைகுலுக்கல்களில் புன்னகையில் மட்டுமே
அமர்ந்திருக்கும்.....

- முனியாண்டி ராஜ்.

தூரங்களைத் தேடி....


தூரம் தெரியாத ஏதோ ஒரு திசையில் நின்று கொண்டு
கையசைத்துக் கொண்டே இருக்கிறாய்…
காலம் தேய்த்துப் போட்ட
நினைவுகளின் பக்கங்களில்
ஏதோ தட்டுப்போடுவது போல்!

முகநூல்களின் அழைப்புப் பக்கங்களில்
பல தடவை உன்னை நிராகரித்தும்
நீ எப்போதும் போல்
கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறாய்…
உனக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை!

மனதிலின்று நீ கழன்று கொண்ட பிறகு
என் விரல்கள்
உன் முகவரிகளைத் தீண்டியதே இல்ல….
உன் பக்கமிருந்து வீசும் காற்றைக் கூட
கவனமாய் விலக்கியிருக்கிறேன்….

ஏதோ ஒரு சந்திப்பில்
நமது பார்வைகள் விபத்துக்குள்ளாகலாம்..
அதுவரை..
என்னைக் கவனமாய் பூட்டியே வைத்துக்கொள்கிறேன் !!!

என்னிலிருந்து நானே நழுவும் வரை!!!


கோழைத்தனம்


மழைக்குப் பயத்துதானா என்று தெரியவில்லை....
மரங்களின் கீழும்
பாறைகளில் இடுக்குகளிலும் பதுங்கும்
வெள்ளாடுகளில் தெரிகிறது
ஒரு கோழைத்தனம்..

படிக்காத பக்கங்கள்



புத்தகங்களோடு புத்தகங்களாக
அதுவும் படுத்துக் கிடந்தது….

தூசுகளில் ஒளிந்து கொண்டு
தலைமட்டும் எட்டிப் பார்த்தது…
அந்தப் புத்தக வெளியீட்டுக்கு 
வரச்சொல்லி நீ அடம்பிடித்தது….
நினைவில் தட்டிச் சென்றது….
தேய்ந்து போன வருடங்களைப் போலவே..
அட்டையின் வண்ணமும்
கொஞ்சம் தேய்ந்துதான் கிடந்தது..

உன் வற்புறுத்தலில் ஏதோ ஒரு வரிசையில்
நான் அமர்ந்திருக்க….
கடந்து போன முகங்கள் எல்லாம்
புதிதாகவே இருந்தன… உன்னைத் தவிர!
பல முகங்களில் புன்னகை பூசப்பட்டிருந்தது…
சில முகங்களில் மட்டுமே புன்னகை பூத்திருந்தது….
வலுக்கட்டாயமாக ஒரு புத்தகத்தைக் 
கையில் திணித்து விட்டுச் சிரித்தாய்…
அந்தச் சிரிப்பு மட்டும் 
இந்தப் பக்கங்களில் எங்கோ பதுங்கியிருப்பதாக தெரிகிறது..
தூசுகளை ஊதிவிட்டு மெதுவாகத் திறந்தேன்..
மை ஒழுகிய பேனாவினால்
உன் உயிரையும் கொஞ்சம் ஒழுக விட்டிருந்தாய்…
உன் பெயரைச் சுற்றிலும்
மை கொஞ்சம் பரவி உன் பெயரை
இன்னும் கொஞ்சம் அகலப் படுத்தியிருந்தது..
நானும் என் பெயரும்
அதில் எங்கோ தேய்ந்து போய்…..
…………………….??????
புத்தகத்தை அப்போதே திறந்திருக்கலாம்…
உன்னையும்தான்!!!
--முனியாண்டி ராஜ்.

மீதமிருக்கும் பொழுதுகள்


பரணுக்குள் பாதுகாப்பாய்
படுத்திருந்தது அந்தக் காகிதக் கட்டு..
தூசுகளைத் தட்டித் தட்டிப் படித்தில்
தும்மலுக்குள் துவண்டு விழுந்தது மூச்சு
‘யாரோ உங்களை நினைக்கிறாங்க’
என்ற குரலில்
உதடுகள் புன்னகையை மறைத்துக் கொண்டன

கட்டுக்களிலிருந்து உதிரும் ஒவ்வொரு மடலிலும்
மனம் புரண்டு புரண்டு படுத்தது…
இரவின் விளிம்புகளிலும்
காத்திருப்பின் கட்டாயங்களிலும்
விரலிலிருந்து
விழுந்து விழுந்து சேர்ந்த வார்த்தைகளில்
விழிகள்,,,,
மீண்டும் ஒருமுறை மூடிக் கொண்டன
உன்னிடம் சேர்ப்பிக்கப்படாததை எண்ணி!!!


விடாமல் பெய்யும் மழை

ஒரு குடையின் கீழ்
இன்னும் மௌனமாகவே நனைந்து கொண்டிருக்கிறது
மழை..
உதடுகளில் சிக்கிய வார்த்தைகளை
உடைக்கத் தெரியாமல்
மனம் முரண்டு பிடித்தும்…

ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்
விரல்களின் மெல்லிய மின்சாரத்தில்…
விழிகள் அவ்வப்போது பற்றிக் கொண்டு
மீண்டும் அணைந்து விடுகின்றன..
பட்டென விரல்கள் விலகி
மின்சாரங்களை நோக்கி மெல்ல நகரும்
தருணங்களில்!!

பேசாமல்
குடையை வீசிவிட்டு நடந்தாலாவது…
மழை நம் காதலைக் கொஞ்சமாவது
எடுத்துக் கூறும்!

முடிவுறாத வார்த்தைகள்

காப்பிக் கோப்பைகளில் மீந்திருக்கும்
அரையும் முக்காலுமான காப்பி
நம் சந்திப்பின் முடிவை
அறிவித்ததாகத் தெரியவில்லை..
நாசி உச்சத்தில் அமர்ந்திருக்கும்
வார்த்தைகளை
உதடுகள் உச்சரிக்க மறுக்கின்றன..
விழிகளில் ஆசனமிட்டிருக்கும்
வாக்கியங்களைப் படிக்க முடியாமல்
மேஜைகளில் நடனமாடுகின்றன விரல்கள்..
கையொப்பங்களுக்குக் காத்திருக்கும்
மணவிலக்கு பாரங்கள்
நம் மௌனத்தை இன்னும் இறுக்குகின்றன..
"எப்படி இருக்க.. சாரி.. இருக்கிங்க"
என்ற வார்த்தைகளில்
நம் பிரிவின் வடு
இன்னும் ஆழமாக விரிகிறது..
முகம் பார்க்கும் திராணியின்றி
'ம்..ம்..' என்று தரையைப் பார்த்து
சிதறும் வார்த்தைகள்
வெறும் நேரக்கடத்தல்கள் என
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்...
இறுமாப்பா... ??
ஈகோ என்ற ஒற்றை வார்த்தையில்
எதையும் ஒதுக்கித் தள்ள முடியாமல்
முரளும் மனதை இழுக்கும் முயற்சியில்
தானாகவே தோற்று விழுகின்றன
ஒவ்வொரு வார்த்தை வெளிபாடும்!
'பேசிப் பாருங்களேன்..'
என்ற வாழ்ந்து கடந்தோரின்
வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுதான்
இங்கே வார்த்தை விளையாட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறோம்..
இந்த விளையாட்டை முடிக்குமுன்
இறுதியாக...
இன்னொரு முறை
வாழ்ந்தால் என்ன ???

🍁முனியாண்டி ராஜ்🍁

வாழ்க்கைக்கு வெளியே

மரணத்தை வெல்லக்கூடிய
மாந்திரீகர் வந்திருப்பதாக
எல்லோரும் கூறிக்கொண்டார்கள்..
கட்டணத்தில் கை வைத்தபடி
ஊர் முழுக்க பதாகைகளிலும் சுவரொட்டிகளிலும்
சிரித்துக் கொண்டே இருந்தார் அவர்..

நானும் சென்றேன்..

ஐந்து நட்சத்திர விடுதியின்
ஆடம்பர அரங்கின் அரச ஆசனத்தில்
ஆராதனைகளுடன் அவர்..
அரங்குக்கு வெளியே
நிரல் பிடித்து நின்ற பலரில்
வயோதிக கூட்டங்களைவிட
வாலிப வட்டங்களே நிறைந்திருந்தன..
வாழத் துடிப்பதில்தான் மனிதனுக்கு எவ்வளவு ஆசை
குருவின் சீடர்கள் பற்றுச் சீட்டுடன்
வாசலிலேயே வசூலித்தனர் கட்டணத்தை!

‘தினசரி இப்படித் தாங்க கூட்டம் வருது’
என்றவரிடம்
‘அப்படி என்னங்க அதிசயம்’ என்றேன்..
‘கோபத்தை வெல்லும் வழிகளை
அற்புதமாக சொல்கிறாராம்..
புலியாய்ப் போறவனும் பூனையாய் வரான்..

‘ம்..’

‘குடும்பத்தில் மரித்துப் போன மகிழ்ச்சியை
மந்திரத்தால் கொடுக்கிறாராம்..
பத்து வருடம் பிரிஞ்சவன்கூட
பத்து வினாடியில் சிரிச்சிகிட்டே
அணைச்சிகிட்டு போறானாம்’

‘ம்…’

‘பதவி செத்துப் போனவனுக்குப்
பத்து நாளில் புது பதவி உயிர்ப்பிக்குமாம்..
பட்டறிந்தவன் சொல்றான்’

‘ம்…அப்புறம்…’
கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்குத்
தாலிக் கொடிய கையோடு தருகிறாராம்..
கண்டிப்பா கல்யாணம்தான்..

‘ம்..’
வார்த்தைகள் தொடர்வதற்குள்….

சரி…சரி…
இன்னிக்கு முடிஞ்சு போச்சு
நாளைக்கு வாங்க..
உங்க நம்பரை நாளைக்குப் பார்க்கலாம்
என்ற குரலில்
நிலை நிமிர்ந்தேன்…

ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கேங்க…
கண்டிப்பா இன்னிக்குப் பார்க்கனும்
கெஞ்சிய குரலை…. குரலை…
தலைமைச் சீடர் காட்டமாக அடக்கினார்.
‘அதெல்லாம் முடியாது..போங்க..
சாமி ரொம்ப கோவக்காரு..
என்னா சொல்வரென்னே தெரியாது’
பொண்டாட்டிய துரத்தியே
பத்து வருசமாச்சு…

வெந்து விழுந்த வார்த்தைகளில்
நிஜம் நிமிர்ந்தது..
கசக்கிப் போட்ட பற்றுச்சீட்டில்
மரணம் மீண்டும் உயிர்ப்பித்தது..

                                    **””முனியாண்டி ராஜ்**

மரணம்


வாழ்க்கை

 வாழ்க்கை

மரணமாய் உன்னைத் துப்பும் நேரம்
மனிதம் நீ உணர்வாய்..
நடந்த பாதையின் தடங்களைத்
தொட்டுப் பார்க்க எண்ணி 
தோற்றுப் போவாய்..

வீசிய வார்த்தைகளின் உஷ்ணத்தை

நீயே உணர்ந்து நொந்து போவாய்
பேசத் துடித்தும் முடியாமல்
ஆன்மாவாய் அழுது தொலைப்பாய்..
நீ கைகுலுக்க மறந்த மனிதர்களின்
கால் தொட்டு மன்னிப்புக் கேட்க
துடிப்பாய்..

மரணம் ...

மீண்டுமொருமுறை உன்னை
குழந்தையாய் உயிர்ப்பிக்கும்..
ஆனால் நீதான்
வளர முடியாமல் சரிந்திருப்பாய்
உனக்கு மனிதம் கற்றுத்தரும்
மரணம்..

அதுவரை..

இப்பொழுதே ...
மனிதனாக வாழ்ந்தால் என்ன???