Wednesday, October 19, 2016

இரவுக் கவிதை


இனி எதுவுமில்லை 
எல்லாவற்றையுமே இழந்தாகி விட்டது
புறமுதுகிட மனம் ஒப்பவில்லை..
இறுதி ஆயுதமாய் நான்
தேடியெடுத்த சில கவிதைகளுடன்
உன் வாசல்நோக்கி விரைகிறேன்..
இரவுக் கவிதைகளிலாவது
உன் இதயம் கனியுமா என்று!
இரவெல்லாம் விழிகள் தொலைத்து
கனவுகள் துரத்தி..
ஒருசில நட்சத்திரங்கள் பிடித்து..
ம்ம் .. சொல்லிக் கொண்டே போகலாம்
உனக்காக
இன்னும் ஆயிரம் பொய்களை!

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ 01



பட்டணம் குடிபுகுந்தன
விளக்குக் கம்பங்களெங்கும்
பறவைக் கூடுகள்

#முனியாண்டி_ராஜ்.

கரு இல்லாத கதைகள்..



#கரு_இல்லாத_கதைகள்..
===•••===•••===•••==•••
அந்த வளைவைக் கடக்கும்போதெல்லாம்
கால்களைச் சற்று விரைவுபடுத்துவதுண்டு
சூனியக்காரக் கிழவியென
பிஞ்சு வயதில் நஞ்சேற்றப்பட்டு
மனம் கழண்டுநடந்த பொழுதுகள் பல
குழந்தைகள் கடப்பதையோ
விளையாடுவதையோ
அந்தத் தெரு தவிர்த்தே வந்தது
சூனியக்காரக்கார கிழவியின் கதையை
தாத்தாவோ பாட்டியோ
அப்பாவோ அம்மாவோ
அண்டை அயலாரோ
சொல்லக் கேட்டதல்ல இதுவரை
கேட்டும் மறுத்த கணங்கள்தாம்
அவ்வப்போது தலைநீட்டிப் பார்த்து
அப்படியே உள்வாங்கிவிடும்..
இரவு சாய்ந்தால்
வெள்ளை உருவங்களாகவோ
கருப்பு உருவங்களாகவோ
அவ்வீட்டில் நடமாடுவதாகக் கதைகள்
இறக்கைகள் கட்டிப் பறப்பதுண்டு..
மக்கள்ஊற்று வற்றிய பின்னும்
அந்தக் கிழவி....
உணவோ உடையோ எப்படியென
இதுவரை சிந்தித்துமில்லை யாரும்..
வழக்கமான ஒருபொழுதில்
ஊரை அமர்களப்படுத்தியது அந்தக்கதை
விளையாடப்போன சிறுமியை
அரவம் தீண்ட..
கூன்விழுந்த உடலோடு
குடுகுடுவென தூக்கிக்கொண்டு
பச்சிலைச் சாற்றில் பிழைப்பித்தாளாம்
அந்தச் சூனியக்காரக் கிழவி

இப்போதும்கூட
யாராவது சொல்லிக்கொண்டிருக்க கூடும்
அந்தச் சூனியக்காரக் கிழவியைப்பற்றி!

#முனியாண்டி_ராஜ்.

Wednesday, September 14, 2016

என் குருதியின் எச்சங்களுக்கு மட்டும் =====•••••=====••••=====••••


என் தட்டில்
கைவைக்காத வரை
அனைத்தும் நலமே..

என் வேட்டிக் கறைகளைப் பற்றி
நீ கவலைப்படாத வரை
உன் கிழிசல்களை
நான் பேசப்போவதில்லை..
என் குடைகளுக்குள்
நீ ஒதுங்காதவரை
எவர் நனைதலைப் பற்றியும்
நான் விசனப்படப் போவதில்லை
என் கண்முன்
குருதி மழையை நீ
இறக்கிக் காட்டலாம்
வாழைத் தண்டாய் என்முன்
யார் வேண்டுமானாலும் சாயலாம்
என்னை
அவை உசுப்பப் போவதில்லை
என் பாதைகளில்
குழிவிழா வரை
அவனவன் பாதைகளும் நன்றே

சாட்சிக் கூண்டுக்குள் ஏறி
நான்
சிக்கிக் கொள்வதிலேயோ
குரலெழுப்பி என் குரல்களைக்
கிழித்துக் கொள்வதிலேயே
நான் உடன்படுவதில்லை ..
எனக்குள்ளும் கருணை உண்டு
ஓர் இரக்கப் பார்வை வரை ..
என் உறவுக்குருதிகள்
என்மேல் தெறித்து விழும்வரை

யார் எப்படிப் போனால்
எனக்கென்ன...


#முனியாண்டி_ராஜ்.

தோழமையின் கறுப்புப் பக்கம்



தோளில் கைபோட்டவனின் விரல்
தொண்டைக் குழியில் இறங்கும்வரை..
தோழமையின் கறுப்புப் பக்கம் தெரியும்வரை...

வெள்ளைத்தாளின் முகங்களில் தெறித்தவை

எழுத்துக்கள் என்று ஏமாந்து
விழிகள் படிக்கும் தருணங்களில்
விஷப்பாம்பாய் பாய்ந்து
கொத்தும்வரை...

கைகுலுக்கல்களின் கரங்களில்
நட்பு பரிமாறும் நேரங்களில்
மோதிர விரலில் பதுங்கிப் பாயும்
நச்சு ஊசியின் வலியை உணரும்வரை..

எதுவுமே புரியவில்லை ...

நட்புகளின் மடிப்புகளில்
நயவஞ்சகமாய் பதுங்கியிருக்கும்
நாகங்களின் சீற்றம் தெரியும்வரை...

உன் சுயநல தண்டவாளத்தில்தான்
என்னோட நீ
பயணித்திருக்கிறாய் என்று!!!

#முனியாண்டி_ராஜ்.

ஓர் இறுதி மனிதனின் வாக்குமூலம்


ஓர் இறுதிமனிதனின்
வாக்குமூலமாக இது இருக்கலாம்
கல்கி அவதார முதல் மனிதனுக்காக

கொண்டு செல்லப்படும்
முதல் தகவலாகவும் அமையலாம்
அவதாரங்கள் மறந்து
அரிதாரங்களில் வாழும் மானுடங்களுக்கு
இது தெரியாமலேயே போகலாம்
குருஷேத்திரங்களின் போர்முனைகளில்
இது தொடங்கி இருக்கலாம்
ஆயுதம் மறந்த மனிதனின்
ஒரு சமாதானத் தூதாகவும்
இது ஆரம்பித்திருக்கலாம்..
மனிதம் புதைந்த ஒரு பெருவெளிக்குள்
கல்கியும் தனவதாரம் மறந்து
கொஞ்சம் கலிக்குள்
முகம் நுழைத்துப் பார்க்கலாம் ..

தூக்கிவிட வந்த வெள்ளைக்காகிதங்கள்
.... தூக்குக்கயிறுகள் ஆன இடத்திலா
அரசாட்சிகள் கவிழ்த்து
.... மக்களாட்சி முகிழ்த்த காரணங்களிலா
சுயவுடைமைகளில் களவுபோன
.... பொதுவுடைமைக் கொள்கைகளிலா
அறிவியலின் அசுர வளர்ச்சியில்
..... அறிவுகள் களவான பொழுதுகளிலா
பணங்கள் தேடி
.... மிருதங்களான மனிதங்களிலா
குடும்பங்கள் கலைந்து
.... குட்டித்தீவுகள் மிதந்ததாலா
எதுவோவென
கொஞ்சம் தடுமாறும் நேரம்
யார் கண்டது ...

கலியுகம் தொடருமென...


#முனியாண்டி_ராஜ்.

இப்படித்தான் இருக்கிறது வருகை ...


பிதற்றல் என்று சொல்லியே
ஓர் ஏளனப் புன்னகையில்
கடந்தே செல்கிறாய்..

என் சொல்வேன்
மழை ஓய்ந்த தூவானங்களில்கூட
நீ மட்டும்
நீர்த்துளிகளாய் நடனமாடுகிறாய் என்று !

#முனியாண்டி_ராஜ்.

கைவராத புரிதல்களின் தேடல்கள்


நம் புரிதல்களுக்கான தேடல்களில்
அவ்வப்போது நழுவிப்போகின்றன
சில விட்டுக் கொடுத்தல்கள்..

உன் பக்கம் சிலரும்
என் பக்கம் சிலரும்
அறிவுரைகளை அவிழ்த்துவிட்டுப்
போகின்றனர்....
ஒரு காப்பிக் கோப்பையின்
வெப்பத்தணிதலோடு முடிகிறது
அவர்கள் கடமைகள் என்றெண்ணி!

உனக்கும் எனக்கும்
ஒருசில நியாயங்களின் உரசல்களில்
தீப்பொறிகள் தீமூட்ட முனைகின்றன..
ஆணாதிக்கமாய் என் பார்வைகளை
நீ முன்னெடுக்கும் போதெல்லாம்
சில பெண்ணியங்கள்
எனக்குள்ளும் வந்து போவதை
நீ உணரத் தவறுகிறாய்..
கண்கள்முன் படரும்
கோப மேகங்களில் வார்த்தைகளை
அப்படியே விடுகிறோம் சுதந்திரமாக!
உணர்ச்சிகளின் உந்துதல்களில்
எல்லை மீறும் வார்த்தைகளில்
'அம்மா' என்றழைப்பின் குழந்தையிடம்
குழந்தையாகவே நீ மாறும் வேளை..

நமக்கான கடிவாளங்கள் இருக்குமிடம்
அடங்கியே போகிறோம் அமைதியாக!


#முனியாண்டி_ராஜ்.

கரைகளைப் போலவே ...



விரிந்து கொண்டே போகும் கரையினை
அரித்தெடுக்கும் அலைகள்... 
கலங்காமல்......மயங்காமல்...
தன் ஆளுமையை அழுத்தமாக்கிக் கொண்டே
நகரும்... 

அந்தக் கரைகளைப் போலவே ...
எவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும்
நீ என்னை அரித்தெடுத்தாலும்
என் பாதங்களின் அழுத்தங்கள்
பகன்று கொண்டே போகும்
நான் யாரென்று!!!!


#முனியாண்டி_ராஜ்.

காலண்டர்


கொஞ்சம் கலைத்துவிட்டு வா..
உன் மௌனத்தை!
காட்டில் வழிதவறியவனைப் போல்
காத்திருக்கிறேன்!
காலண்டர் தாள்களைக் கிழித்து கிழித்து
காலம் பார்த்தது போதும்!




நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...