Wednesday, October 19, 2016

கரு இல்லாத கதைகள்..



#கரு_இல்லாத_கதைகள்..
===•••===•••===•••==•••
அந்த வளைவைக் கடக்கும்போதெல்லாம்
கால்களைச் சற்று விரைவுபடுத்துவதுண்டு
சூனியக்காரக் கிழவியென
பிஞ்சு வயதில் நஞ்சேற்றப்பட்டு
மனம் கழண்டுநடந்த பொழுதுகள் பல
குழந்தைகள் கடப்பதையோ
விளையாடுவதையோ
அந்தத் தெரு தவிர்த்தே வந்தது
சூனியக்காரக்கார கிழவியின் கதையை
தாத்தாவோ பாட்டியோ
அப்பாவோ அம்மாவோ
அண்டை அயலாரோ
சொல்லக் கேட்டதல்ல இதுவரை
கேட்டும் மறுத்த கணங்கள்தாம்
அவ்வப்போது தலைநீட்டிப் பார்த்து
அப்படியே உள்வாங்கிவிடும்..
இரவு சாய்ந்தால்
வெள்ளை உருவங்களாகவோ
கருப்பு உருவங்களாகவோ
அவ்வீட்டில் நடமாடுவதாகக் கதைகள்
இறக்கைகள் கட்டிப் பறப்பதுண்டு..
மக்கள்ஊற்று வற்றிய பின்னும்
அந்தக் கிழவி....
உணவோ உடையோ எப்படியென
இதுவரை சிந்தித்துமில்லை யாரும்..
வழக்கமான ஒருபொழுதில்
ஊரை அமர்களப்படுத்தியது அந்தக்கதை
விளையாடப்போன சிறுமியை
அரவம் தீண்ட..
கூன்விழுந்த உடலோடு
குடுகுடுவென தூக்கிக்கொண்டு
பச்சிலைச் சாற்றில் பிழைப்பித்தாளாம்
அந்தச் சூனியக்காரக் கிழவி

இப்போதும்கூட
யாராவது சொல்லிக்கொண்டிருக்க கூடும்
அந்தச் சூனியக்காரக் கிழவியைப்பற்றி!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment