Wednesday, September 14, 2016

சமூகமென...

அவர்கள் என்னை 
நிராகரித்திருப்பதாய் எண்ணவில்லை 
ஏதோ ஓர் அக்கறையில்
என் கரைகளை அவர்கள்
பத்திரமாகவே பார்த்துக் கொண்டார்கள்
ஒவ்வொரு அசைவுகளிலும் அவர்கள் பார்வை
என்மேல்தான் இருந்தது ....
என் கால்களை இழுத்துவிடுவதிலிருந்து
எனக்கான கதவுகளை மூடுவதுவரை
கனக்கச்சிதமாகவே செய்துவந்தனர்
எனக்கான பெயர்களில் அவர்களுக்கான
வசதி அடைகளை இணைத்து
எங்கும் எழுதி வைத்தார்கள்..
அவர்களைவிட ஓரடிகூட முன் 
எடுக்கா வண்ணம் என்கால்களைப் பின்னுக்கிழுத்தபடி
கூடவேதான் வந்து கொண்டிருந்தார்கள்
என்பார்வைகளின் தூரங்களை
சிதைத்த வண்ணமே அவர்களின்
பார்வையும் நடந்து வந்தது..
பின்நடந்தவனையும் பதுக்கல் பயந்து
கைகளையும் இழுத்துக் கொண்டனர்
கிளர்ந்தெழும் என் இறக்கைகளையும்
அவ்வப்போது முறிப்பதில் அவர்கள்
நேரங்கடக்க எண்ணவில்லை ..
எழுந்துநின்று என்உயரம் தெரிகையில்
என்பாதங்களின் வேர்களை வெட்டியே...

அவர்களிடம் நானும் முழுமையாய்
சமர்பித்திருந்தேன் என்னை.....
சமூகமென!

#முனியாண்டி_ராஜ்.

உன்னைக் காணும்வரை!!!!


சட்டென உடைந்த வானில்
குடைதேடி பதுங்கும் பலரில்
நானும்தான் இருந்தேன் ஒருவனாய்!
அழகின்றி...
...சாலைகள் தனதாக்கி

...வாய்க்கால்கள் வாய்நிறைத்து
...காலணிகள் புகுந்து
...பாதங்கள் களவாடித்தின்று
...கேசங்கள் களைத்து
...உடல்முழுக்க நடந்து
இத்யாதி... இத்யாதி ...
உன்னைக் காணும்வரை!!!!
குடை வீசிய
உன்மேல் மழை நடந்த அழகில்
அதைத் தவிர வேறேதும் அழகில்லை
இப்போது எனக்கு!


#முனியாண்டி_ராஜ்.

அவன் மட்டும்....



உதிர்ந்துவிழும் ஒவ்வொரு சொல்லிலும்
தெறித்துவிழும் ஒவ்வொரு துளியிலும்
தேடித்தேடிப் பார்த்தேன்

மனிதம் மறுத்த எதுவுமே
மதமாகத் தோன்றவில்லை எனக்கு
துப்பாக்கிகளின் முனைகளில்
நெஞ்சங்கள் துளைத்தும்
வாள்களின் கூர்மையில்
உயிர்பதம் பார்த்தும்...
ஏவுகணை ஏவலில்
அங்கங்கள் பிய்த்தும்...
சமயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
சமயம் பார்த்துப் பேசத் தெரிந்தவன்
கூவிக்கூவி அழைக்கிறான் கடவுள்களை
இறைதள கட்டடங்களில் ஏதாவது
ஒன்றை உயர்த்திக் காட்டிப் பிடிக்கும் போட்டிகளில்
இன்னும் சிக்காமலேயே
நழுவிப்போகின்றான் அவன் மட்டும்
கைகள் இறுக்கிப் பிடித்துக்
கேட்கும் மகளிடம் எப்படிச் சொல்வேன்
அவன் நழுவலை!!


#முனியாண்டி_ராஜ்.

இன்னொரு கனவுக்கான ஒப்பனையில்..




வீசிய அரிவாளால்
குபுக்கென்று கொட்டிய குருதியில்
கைகளைக் கொஞ்சம் நனைத்துக்கொண்டான்

சுற்றிச்சுற்றி
கைகளாலும் கால்களாலும்
அவன் காட்டிய வித்தையில்
சுருண்டு விழுந்த வில்லன்களில்
கால்களைக் உதறிக் கொண்டான்
ஓடியாடி புரண்ட காதல்களில்
அவனும் கொஞ்சம்
ஒட்டிக் கொண்டான்
இதழோடு இதழ் ஒட்டும்நேரம்
சட்டென நுழைந்த ரோஜாவால்
உச் மட்டுமே கொட்ட முடிந்தது அவனால்
சாலையோர மகளிர் பார்வைகளனைத்தும்
அவன்மேல் விழுவதாகவே
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்
பறக்கும் மகிழுந்துகளிலும்
தாவும் இன்னுந்துகளிலும்
வளசை அவன்கையிலேயே இருந்தது
அனல்தெறிக்கும் வசனங்களிலும்
நறுக்கென்ற வரிகளிலும்
அவனும் கொஞ்சம் செருமிக்கொண்டான்
கூட்டம் கரையத் தொடங்கிய பின்னும்
அவன் மட்டும் அமர்ந்திருந்தான்
இன்னொரு திரையினூடே..


#முனியாண்டி_ராஜ்.

இதயம் கொஞ்சம் கழற்றி ...


மண்பிடித்த முதல்மனிதன்
யாரென்று சொல் தோழா..
நிலத்திற்கு எல்லையிட்டு
மொழியாலும் இனத்தாலும்
மனிதம் பெயர்த்த
முதல்கயவன் யாரென்று பார்
வாள்போர்...
புரவிப்போர்...
யானைப்போர்...
என
மனிதனே மனிதன் மேய்ந்த
துரோக மூலம் எதுவென்று கேள்
போர்களின் அந்த மூலவேரை
ஆணிவேராக்கிய அயோக்கியன்
எங்கேவென்று தேடு...
பொறியை அணைக்க மறுத்த
அந்த மந்தைகள்
எங்கே புதையுண்டன எனப்பார்த்து வா..
வலிமையென்பது வாள்வீச்சிலென
மீசை முறுக்கிய அந்த
முதல் கோழையாவது யாரெனக் கூறு
கிளைமொழிகள் கொலைமொழியாகியது
எப்போது எனச் சொல்....
ஆறுகளில் அணைகட்டி
கொலைவெறிக் கூத்தாடும் கூட்டம்
எந்த மழையிடம் கடன்வாங்கியது
நீரை...பார்..
இயற்கை மேய்ந்து செயற்கை செய்யும்
அந்த நுட்பம் சொன்னவன் யார்
கேள் தோழா கேள்
எந்த நெருப்பில் யார் வெந்தால் என்ன
இதயம் கருகும் மானிடங்களுக்கு..!!!
மனிதம் மிதிபட பாயும்
குருதிவெள்ளத்தில் கைநனைக்க
இதோ.... நானும்
இதயம் கழட்டிவிட்டு வருகிறேன்
..

Tuesday, June 21, 2016

எங்கள் தேவை இதுவல்ல

ஏதோ ஒரு பொட்டலத்தில்
மடித்து வைக்கப்பட்ட உணவை வீசி
எங்கள் பசியைப் போக்க வேண்டாம்
நாற்று நடவும்
அறுவடை செய்யவும் 
கற்றுத் தாருங்கள் ..
காணி நிலத்தினில்
எங்கள் பசிகளைப் புதைக்கும்
வித்தை மட்டும் சொல்லுங்கள் ..

அறிவுப் பசியென வருகிறோம்
ஏட்டைக் கிழித்து
எங்கள் செவிகளில் செருக வேண்டாம்
புத்தக கடல்களில் மூழ்கி
செத்துப் போகவாவது
வாய்ப்புக் கொடுங்கள் ..
வார்த்தைக் கையொப்பங்களில்
எங்கள்
வேலைமனு பாரங்களில்
உங்கள் முத்திரை வேண்டாம்
உங்கள் முகமன்களின் அனல்களில்
நாங்கள்
குளிர்காயப் போவதில்லை ....

தேர்தல் காய்ச்சல்களில்
நீங்கள் வீசும் போர்வைகளிலோ
உடல்மறை ஆடைகளிலோ
எங்கள் மனம் திருப்ப வேண்டாம் ....
மானம் மறைக்க ஓர் ஆடை
நாங்களாவே எடுத்துக் கொள்கிறோம்..
எங்களுக்கான கடவுள்களை
நாங்களே தேர்ந்தெடுக்க
வாய்ப்பொன்று கொடுங்கள்
மூளைச்சலவைகளில் எங்கள் முகங்களைச்
சிதைக்க வேண்டாம்..

எங்கள் கால்களில்
நாங்களாகவே நடந்து
வாய்ப்பொன்று கொடுங்கள் ...

போதும்!

#முனியாண்டி_ராஜ்.

தந்தையைத் தேடி

ஏதோ ஒரு வெளிச்சம்
என்
பாதைகளுக்கு ஒளியேற்றிக்
கொண்டிருந்தது..
சட்டென விழும்நேரம்
ஏதோ ஒரு கரம்
என்னைத் தாங்கிப் பிடித்தது
வழி தவறி
பாதம் விலகும் போது
உடல் சாய்த்து
பாலம் அமைத்து...

என் கனவுகளை
அது அலங்கரித்ததில்லை
என் மொழி ஆரங்களைக்
அது கண்டதுமில்லை..
வசவுகளின் வார்ப்புகளில்
சிரித்துக் கொண்டே
பல தடவை கடந்திருந்தது..
வேறுபட்ட உறவாக
என் உயிருள்
உறங்கிக் கொண்டே தான்
இருந்திருக்கிறது அது

'அப்பா' என்று
அழைத்த புதியதோர் குரலில்..
என் பாதைகளின்
வெளிச்சங்களைத் தேடிய போது
அது...
விண்ணில் எங்கோ
மறைத்து போயிருந்தது...

#முனியாண்டி_ராஜ்.

நீயும் வரலாம்


நீ
மீண்டும் வந்திருந்தாய் மகனே 
நெகிழித் தட்டுகளுடன்
வரிசை பிடித்து நிற்கையில்
யாரோ வந்திருப்பதாய்
கூறுகிறார்கள்..
நீ
'யாரோ' ஆகியிருந்தாய்...
ஊகிக்க அதிகம் நேரமும்
எடுக்கவில்லை நீ..
ஆண்டுகளும் தேதிகளும் மாதங்களும்
உதிர்ந்துவிட்ட என் மயிரோடு
காணாமல் போயிருக்கலாம்...
ஜூன் மூன்றாம் ஞாயிறு
எப்படி மறத்துப் போகும்
நீ நினைவுகளைப் புதுப்பிக்கும்
நாளல்லவா....

உன் குழந்தைகள்
கொஞ்சம் வளர்ந்திருக்கிறார்கள்
மகிழ்ச்சி...
நாக்குப் புரளும் மொழியில்
ஏதோ அவர்களிடம் கூறுகிறாய்
எனக்குப் புரிய வேண்டாம் என..
உடல் மொழிகள் கூட
எனக்குப் புரியாதென
ஏனடா நம்ப மறுக்கிறாய்..
இன்னட்டாக இருக்கலாம்
நான் கடித்துக் கொடுத்ததை
உன் மகன் வாங்குகையில்
சட்டென கரம் கொண்டு
வன்முறை செய்கின்றாய்
அதே நாக்குப் புரண்ட மொழியில்
வேண்டாம்பா..
அவனுக்கு ஒத்துக்காது என்கிறாய்
உறைப்பை எனக்குள் உறிஞ்சி
உனக்கு ஊட்டியதை
தட்டுத் தடுமாறி உணர்கிறது
மனது...
உனக்கு எப்படி மகனே
ஒத்துக் கொண்டது.....

உன்னைச் சுமந்த தோள்கள்
மீண்டும் திணவெடுக்கிறது..
உன் பிள்ளைகள் சுமக்க..
ஒரு பார்வையில்
சட்டென ஆழ்ந்து விடுகிறது..
கதை ஏதாவது சொல்ல
உதடுகள் துடிக்கிறது
மொழிச் சிக்கல்
உன் குழந்தைகளுக்கு!
அவர்களின் விழியில்
பாவத்தின் வரிகள் அங்கும் இங்குமாய்...
என் மேல்கூட இருக்கலாம்

அணிச்சலை எடுத்து
மேஜை மேல் வைக்கிறாய்
கைதட்ட கூட்டம் தேவை
என் கூட்டமும் இணைகிறது
வெற்றுப் புன்னகைகளுடன்
புதிய பையில் பரிசாக
கொடுக்கிறாய்..
கடந்த ஆண்டு பெற்ற
ஆடைகள் கூட
அப்படியே இருக்கிறது ஐயா
அணியப்படாமல்
மனதில் அணிவதற்கு
உன் பிள்ளைகளின் நேரம்
கொஞ்சம் தருவாயா.??

சுற்றும் முற்றும்
என் போன்றவர்கள் ..
என்னைப் போன்றவர்கள்
அவர்கள் அதிசயமாய்
தெரிவதுபோல் தெரிகிறது
உன் குழந்தைகளுக்கு...
காலம் கனியும் போது

அவர்களும் உன்னைக் காண
இப்படி வரலாம் எனச் சொல்லிவிடு!

#முனியாண்டி_ராஜ்

மீண்டும் நீ நிழலாய்



அப்படியொன்றும் 
பேசப்பட வேண்டிய விடயமல்ல இது
விடியலில் எழுந்து
மாலையில் மயங்கும் ஒரு
சூரிய வாழ்க்கை போல்தான்...
இளம்வெப்பம்
வெம்மை
இதமான வெப்பம்
என்ற பல பரிணாமங்களில்தான்..
பல ஆண்டுகளுக்குப் பின்
அவளைச் சந்திப்பதாய்
இருக்கலாமெனவும் இருக்கலாம்..
இளம்வெப்பமாய் நெஞ்சில் இதமேற்றி
வெம்மையாய் விலகியவள்
மீண்டும் ஓர் இதமான வெப்பத்தோடு
உடலளவில் மட்டும்...
உள்ளத்தைக் கொஞ்சமாகத்தான்
அசைக்க முடிகிறது எனலாம்தான்!

வருடங்கள் கரைத்த
அவள் உருவங்கிளினாலா..
அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெண்கம்பிகள் சிதைத்த சிரசித்தினாலா
மடிப்புகளில் வதனம் குறைந்த
கன்னங்களினாலா....
ஏதோ ஒன்றில்
அப்படி ஒன்றும் பேசப்பட வேண்டியதல்ல
அவள் வரவு உங்களுக்கு..

எனக்கல்ல!

#முனியாண்டி_ராஜ்.

Sunday, June 5, 2016

துரோகம்


அன்பாய் அளவளாவி
ஆயிரம் பூக்கள் மனமெங்கும் மலர
ஆனந்தமாய் துள்ளிப் பறந்தேன்
பார்ப்போர் பழகுவோர் நண்பரென
நகமனைத்தும் வரைந்து வைத்தேன்..
நா மீட்டிய வார்த்தைகளில்
நாள் நனைய குளித்தேன்..
வெண்மைச் சிரிப்பினில்
கனவுகளிலும் பூட்டினேன் தேர்
உள்ளத்துச் சொல்லனைத்தும்
உதடுகளிலேயே வலம் விட்டேன்
நம்பிக்கையில் கைகொண்டு
சட்டென
நீலம் பூத்து உதிர்ந்தன
மனவெளி பூக்கள்..
எந்த நாவில் வசித்தது...
நாகம் !!!

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...