Tuesday, June 21, 2016

நீயும் வரலாம்


நீ
மீண்டும் வந்திருந்தாய் மகனே 
நெகிழித் தட்டுகளுடன்
வரிசை பிடித்து நிற்கையில்
யாரோ வந்திருப்பதாய்
கூறுகிறார்கள்..
நீ
'யாரோ' ஆகியிருந்தாய்...
ஊகிக்க அதிகம் நேரமும்
எடுக்கவில்லை நீ..
ஆண்டுகளும் தேதிகளும் மாதங்களும்
உதிர்ந்துவிட்ட என் மயிரோடு
காணாமல் போயிருக்கலாம்...
ஜூன் மூன்றாம் ஞாயிறு
எப்படி மறத்துப் போகும்
நீ நினைவுகளைப் புதுப்பிக்கும்
நாளல்லவா....

உன் குழந்தைகள்
கொஞ்சம் வளர்ந்திருக்கிறார்கள்
மகிழ்ச்சி...
நாக்குப் புரளும் மொழியில்
ஏதோ அவர்களிடம் கூறுகிறாய்
எனக்குப் புரிய வேண்டாம் என..
உடல் மொழிகள் கூட
எனக்குப் புரியாதென
ஏனடா நம்ப மறுக்கிறாய்..
இன்னட்டாக இருக்கலாம்
நான் கடித்துக் கொடுத்ததை
உன் மகன் வாங்குகையில்
சட்டென கரம் கொண்டு
வன்முறை செய்கின்றாய்
அதே நாக்குப் புரண்ட மொழியில்
வேண்டாம்பா..
அவனுக்கு ஒத்துக்காது என்கிறாய்
உறைப்பை எனக்குள் உறிஞ்சி
உனக்கு ஊட்டியதை
தட்டுத் தடுமாறி உணர்கிறது
மனது...
உனக்கு எப்படி மகனே
ஒத்துக் கொண்டது.....

உன்னைச் சுமந்த தோள்கள்
மீண்டும் திணவெடுக்கிறது..
உன் பிள்ளைகள் சுமக்க..
ஒரு பார்வையில்
சட்டென ஆழ்ந்து விடுகிறது..
கதை ஏதாவது சொல்ல
உதடுகள் துடிக்கிறது
மொழிச் சிக்கல்
உன் குழந்தைகளுக்கு!
அவர்களின் விழியில்
பாவத்தின் வரிகள் அங்கும் இங்குமாய்...
என் மேல்கூட இருக்கலாம்

அணிச்சலை எடுத்து
மேஜை மேல் வைக்கிறாய்
கைதட்ட கூட்டம் தேவை
என் கூட்டமும் இணைகிறது
வெற்றுப் புன்னகைகளுடன்
புதிய பையில் பரிசாக
கொடுக்கிறாய்..
கடந்த ஆண்டு பெற்ற
ஆடைகள் கூட
அப்படியே இருக்கிறது ஐயா
அணியப்படாமல்
மனதில் அணிவதற்கு
உன் பிள்ளைகளின் நேரம்
கொஞ்சம் தருவாயா.??

சுற்றும் முற்றும்
என் போன்றவர்கள் ..
என்னைப் போன்றவர்கள்
அவர்கள் அதிசயமாய்
தெரிவதுபோல் தெரிகிறது
உன் குழந்தைகளுக்கு...
காலம் கனியும் போது

அவர்களும் உன்னைக் காண
இப்படி வரலாம் எனச் சொல்லிவிடு!

#முனியாண்டி_ராஜ்

No comments:

Post a Comment